ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளில் முறையான ஊதிய அமைப்புகள், தொழிலாளர் குழுக்கள் ஆகியவற்றை 2018ஆம் ஆண்டிற்குள் உருவாக்க எச் அண்ட் எம் திட்டமிட்டுள்ளது

by நீதா பல்லா | @nitabhalla | Thomson Reuters Foundation
Tuesday, 21 February 2017 16:22 GMT

People walk past a H&M fashion chain store at Tsim Sha Tsui shopping district in Hong Kong, China August in this 2016 archive photo. REUTERS/Tyrone Siu/File Photo

Image Caption and Rights Information

புதுதில்லி, பிப். 21(தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - உலகம் முழுவதிலும் தங்களுக்கு ஆடைகளை சப்ளை செய்து வரும் முக்கிய தொழிற்சாலைகளில் 2018ஆம் ஆண்டிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள்,  ஊதியத்திற்கான முறையான கட்டமைப்புகள் ஆகியவற்றிற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நவீன ஆடைகளின் விநியோக நிறுவனமான ஹென்னெஸ் அண்ட் மவ்ரிட்ஸ் ( சுருக்கமாக எச் அண்ட் எம்) கடந்த செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தது.

ஆயத்த ஆடைத் தொழிலில் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை தமது நிறுவனம் உணர்ந்துள்ளதாகவும், தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்த தமக்கு சப்ளை செய்யும் முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும்  எச் அண்ட் எம் நிறுவனத்தின் இந்தியாவில் நீடித்த நிலைக்கான திட்டத்தின்  தலைவரான எலின் அஸ்ட்ராம் தெரிவித்தார்.

“ஆயத்த ஆடைத் தொழிலில் ஒரு வேலையைப் பெறுவதென்பது பெண்களின் சுதந்திரத் தன்மைக்கான முக்கிய ஊக்க சக்தியாக இருக்க முடியும் என்பதை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். பல நேரங்களில் இதுதான் அவர்களுக்கு சம்பளம் பெற்றுத் தருகின்ற முதல் வேலையாக இருக்கிறது என்பதோடு, எல்லா நேரங்களிலும் இல்லை என்றாலும் கூட, அவர்களிடையே சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கிரியா ஊக்கியாகவும் அது அமைகிறது என பெண்களின் பொருளாதார சுய முன்னேற்றத்திற்கென ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய நிகழ்வு ஒன்றில் அஸ்ட்ராம் குறிப்பிட்டார்.

“வேலை நிலைமைகள், கூடுதலான வேலை நேரம், ஊதியங்கள் போன்ற விஷயங்களில் நாங்களே இத்தொழிலுக்குள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. பல்வேறு வழிகளிலும் இதைச் சமாளிக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.”

நான்காண்டுகளுக்கு முன்னால் வங்கதேசத்தில் ராணா ப்ளாசா ஆயத்த ஆடை வளாகம் இடிந்து விழுந்து 1,136 பேர் கொல்லப்பட்ட பிறகு தொழிற்சாலைகளின் நிலைமைகள், தொழிலாளர்களின் உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டுமென்ற நெருக்கடி நவநாகரீக ஆடைத் தொழிலின் மீது அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

எச் அண்ட் எம் உள்ளிட்டு பல பெரும் நவநாகரீக ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கும் ஆடைகளை வழங்கி வரும் தொழிற்சாலைகளில் மோசமான உடல்நிலையிலிருந்து துவங்கி பாதுகாப்பு நடைமுறைகள், நீண்ட வேலை நேரங்கள், குறைந்த ஊதியம் என்பதிலிருந்து தொழிற்சங்கங்கள் அமைக்க அனுமதிக்கப்படாமல் இருப்பது போன்றவை வரையில் நிலவும் தொழிலாளர்களின் நிலைமைகளை சோதிக்கத் தவறிவிட்டதாக  அவற்றின் மீது புகார்கள் எழுந்தன.

புதுதில்லி, நாம் பென் ஆகிய நகரங்களில் எச் அண்ட் எம் நிறுவனத்திற்காக ஆயத்த ஆடைகளை உருவாக்கி வருகின்ற தொழிற்சாலைகள் குறைந்த ஊதியம், குறிப்பிட்ட காலக் கெடுவுடன் கூடிய ஒப்பந்தங்கள், கட்டாயமாக கூடுதல் நேரத்திற்கு வேலை செய்ய வேண்டிய நிலை, கர்ப்பமுற்றால் வேலையிலிருந்து நீக்கப்படுவது போன்ற பல பிரச்சனைகளை தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருவதை ஆசியா ஃப்ளோர் வேஜ் அல்லையன்ஸ் அமைப்பு கடந்த ஆண்டு மே மாதத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வு கண்டறிந்தது.

தனக்கு ஆடைகளை சப்ளை செய்யும் நிறுவனங்கள் முறையாகச் செயல்படுவது குறித்த தனது உறுதிப்பாடுகளை நிறைவேற்ற இந்தப் புகழ்பெற்ற நவநாகரீக ஆயத்த ஆடை நிறுவனம் தவறிவிட்டது  என தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் உரிமைகளுக்கான குழுக்கள் ஆகியவற்றின் கூட்டணியான ஆசியா ஃப்ளோர் வேஜ் அல்லையன்ஸ் மேற்கு நாடுகளின் புகழ்பெற்ற விற்பனை நிறுவனத்தை குற்றம் சாட்டியது.

இந்த நிறுவனம் உலக முழுவதிலும் 25 நாடுகளில்  செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளிலிருந்து தனக்கான ஆடைகளை பெறுகிறது என்பதோடு 16 லட்சம் ஆயத்த ஆடைத் தொழிலாளர்களுக்கு மறைமுகமாக வேலைவாய்ப்பு அளித்து வருகிறதுஎன்பதும் அவர்களில் 64 சதவீதம் பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது எனவும் அஸ்ட்ராம் சுட்டிக் காட்டினார்.

 “இந்த சப்ளை ஏற்பாட்டின் மூலம் நாம் உருவாக்கியுள்ள லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை கணக்கில் கொள்ளும்போது பொறுப்பான ஆதார அமைப்பு என்பது மிகவும் முக்கியமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஓர் ஒழுங்குமுறை ஏற்பாட்டின் மூலம் தனக்கு சப்ளை செய்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தமது நிறுவனத்திற்கு கறாரான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. எனினும் சங்கம் அமைப்பதற்கான உரிமை, தொழிலாளர்களின் குறைகளை கேட்பதன் அவசியம் ஆகிய பிரச்சினைகளை தொழிற்சாலை முதலாளிகளை உணர்ந்து கொள்ளச் செய்வதில் தமது நிறுவனம் சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

திறமை மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் போதுமான ஊதியத்தை உறுதிசெய்யும் வகையிலான ஊதிய விகிதங்கள், தொழிலாளர்களின் குறைகளை காது கொடுத்துக் கேட்பது போன்ற இலக்குகளை தங்களுக்கு சப்ளை செய்யும் தொழிற்சாலைகளுடன் இணைந்து தமது நிறுவனம் உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“முறையான வகையில் நிர்வாகத்திடம் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்வதற்கான வசதிகளை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தித் தருவதற்கான திறன் வளர்ப்பு திட்டங்கள் எங்களிடம் உள்ளன. இதை நோக்கிய முதல் அடிவைப்பாக 2018ஆம் ஆண்டிற்குள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட  தொழிலாளர் குழுக்களை ஏற்படுத்துவது என்ற இலக்கை எமது கேந்திரமான சப்ளை தொழிற்சாலைகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ளோம்.” என்று அஸ்ட்ராம் கூறினார்.

“ஆயத்த ஆடைத் தொழிலில் வேலை செய்யும் ஒவ்வொரு தொழிலாளியும் முறையான, நியாயமான வாழ்க்கையை நடத்துவதற்குப் போதுமான ஊதியத்தை ஈட்ட வேண்டும் என்பதில் நாங்கள் மிகுந்த உறுதியோடு உள்ளோம். இந்த தொழிலில் நாடு முழுவதிலும் உறுதிப்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்.”

(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla, எடிட்டிங்:ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.) 

Our Standards: The Thomson Reuters Trust Principles.