ரியாத் நகரில் பாலியல் அடிமை மீட்பு இந்தியாவில் ஆட்கடத்தலுக்கான வலைப்பின்னல் விரிவடைந்திருப்பதை வெளிப்படுத்துகிறது

Monday, 20 March 2017 12:21 GMT

மும்பை, மார்ச் 20 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்தியாவின் ஆட்கடத்தல்காரர்கள் புதிய பகுதிகளில் தங்கள் வலைப் பின்னலை விரிவுபடுத்தியிருக்கிறார்கள் என்ற கவலைக்கு நடுவே கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சவூதி அரேபியாவில் பாலியல் அடிமையாக இருந்த ஓர் இந்தியப் பெண் மீட்கப்பட்டு குஜராத் மாநிலத்தில் இருக்கும் அவரது சொந்த ஊருக்குத் திரும்ப அழைத்து வரப்பட்டார்.

இது தொடர்பாக குஜராத்தில் ஒருவர், மும்பையில் ஒருவர் என இரண்டு ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல ஏஜெண்டுகளை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

35வயதுடைய இந்தப் பெண் வீட்டு வேலை வாங்கித் தருவதாகவும், மாதத்திற்கு ரூ. 40,000 (சுமார் 600 அமெரிக்க டாலர்கள்) ஊதியம் வாங்கித் தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டு ஓராண்டுக்கு முன்னால் துபாய் நகருக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.

எனினும் அவர் சவூதி அரேபியத் தலைநகரான ரியாத் நகரில் வேறொரு முதலாளிக்கு விற்கப்பட்டார். அங்கு அவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதோடு மிகமோசமாகவும் நடத்தப்பட்டார் என   மாநில அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இப்போது அவர் குஜராத் மாநிலத்தில் ஓர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வளைகுடாப் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்ட பெரும்பாலான சம்பவங்கள் இதுவரை தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா ஆகியவற்றிலிருந்தே இருந்து வந்தன. மிக அரிதாகவே நாட்டின் இதர பகுதிகளில் இருந்து இத்தகைய ஆட்கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன என ஆட்கடத்தலுக்கு எதிரான பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

“வளைகுடா பகுதியை நோக்கி நடைபெறும் பெரும்பாலான ஆட்கடத்தல் சம்பவங்கள் தென்னிந்திய மாநிலங்களிலிருந்தே நடந்து வந்தது என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது. குஜராத்திலிருந்தே மேலும் அதிகமான ஏஜெண்டுகளின் பெயர்களை கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து நாங்கள் கண்டறிகிறோம்” என குஜராத் மாநிலத்தின் கல்வி அமைச்சரான புபேந்திர சிங் சுடசாமா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

“காவல் துறை மிகப்பெரும் விசாரணையை துவக்கியுள்ளது. மற்ற மாநிலத்தவர்கள் பற்றிய தொடர்புகள் ஏதும் கிடைக்குமானால் அந்த மாநிலங்களுக்கும் நாங்கள் எச்சரிக்கை அனுப்புவோம்”.

அந்தப் பெண்ணின் மோசமான நிலைமையைப் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் படித்தபிறகே இந்த வழக்கு பற்றி அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் சுடசாமா தகவல் தெரிவித்தார்.

அந்தப் பெண்ணை துபாய்க்குச் செல்ல ஆசைகாட்டிய முகவர்கள் மீது குஜராத் மற்றும் மும்பையிலிருந்து வந்த காவல்துறைக் குழுக்கள் நடவடிக்கை எடுக்கத் துவங்கிய அதே நேரத்தில் சவூதி அரேபியாவில் வர்த்தக நலன்களைக் கொண்டுள்ள ஓர் இந்திய அரசியல் வாதியான தோபாளி ஸ்ரீனிவாஸ் அங்குள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

இந்த குஜராத் மாநிலப் பெண் தனது தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்ல ஏற்பாடு செய்த அவரது இந்த முயற்சியானது ஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது வழக்காக அமைகிறது.

இந்தியாவிலிருந்து பஹ்ரெய்ன், குவெய்த், கடார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுக் குடியரசுகள், ஓமன் ஆகிய ஆறு வளைகுடா நாடுகளுக்கும் குடிபெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்படும் 60 லட்சம் இந்தியர்களில் வீட்டு வேலை செய்பவர்கள்தான் மிகவும் மோசமாகச் சுரண்டப்படுகின்றனர் என பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

“வீட்டு வேலை செய்பவர்கள் இங்கு கால்நடைகளைப் போல் நடத்தப்படுகின்றனர். அவள் இருக்குமிடத்தைப் பற்றிக் கேட்டபோது அதைப் பற்றி எதுவுமே தெரியாதவராகவே இந்தப் பெண் இருந்தார். தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தார். வளைகுடா நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களை அனுப்புவதற்கு இந்தியா தடை விதிக்க வேண்டும்” என ஸ்ரீனிவாஸ் கூறினார்.

அந்தப் பெண்ணின் சொந்த ஊரான தோல்காவில் இது குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் ஆட்கடத்தல் குறித்து தாங்கள் கையாளும் முதல் வழக்கு இதுதான் என்று குறிப்பிட்டனர்.

 “வளைகுடா நாடுகளுக்கு மேலும் அதிகமான பெண்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கான தகவல் எங்களிடம் உள்ளது. எங்களுக்கு இது முற்றிலும் புதிய வகைப்பட்ட விஷயம் “என தோல்கா மாவட்ட அலுவலகத்தில் உதவி அதிகாரியான ரிதுராஜ் தேசாய் கூறினார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.