×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதில் இந்திய பூசாரிகளும் அலங்கரிப்பவர்களும் இறங்கியுள்ளனர்: வயதை நிரூபிக்க ஆதாரம் இல்லையா? திருமணம் கிடையாது

Tuesday, 21 March 2017 12:42 GMT

- ரோலி ஸ்ரீவஸ்தவா

ஹைதராபாத், மார்ச் 21 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கான முயற்சிகளில் தென்னிந்தியாவில் உள்ள அதிகாரிகள் பூசாரிகள், திருமண அழைப்பிதழை அச்சடிப்பவர்கள், பூ அலங்காரம் செய்பவர்கள், திருமணப் பந்தல் போடுபவர்கள் போன்று அதிகமான லாபம் தரும் திருமண தொழிலில் ஈடுபடுபவர்களை தங்கள் துணைக்கு அழைத்துள்ளனர்.

தென்னிந்தியாவில் உள்ள தெலிங்கானா மாநிலத்தில் திருமணம் செய்து வைப்பதற்கு முன்பாக மணப்பெண், மணமகன் ஆகியோரின் வயது குறித்த ஆதாரத்தைக் கேட்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையே குழந்தைத் திருமணங்கள் ஏதாவது நடந்துள்ளதா? அல்லது நடத்தத் திட்டமிருக்கிறதா? என்று பார்க்க கிராமங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் திருமணத்திற்கான சட்டபூர்வமான வயது பெண்ணுக்கு 18 –ம் ஆணுக்கு 21 –ம் ஆகும்.

2015-16ஆம் ஆண்டிற்கான அரசுப் புள்ளிவிவரங்களின்படி 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து வைக்கப்படும் தெலிங்கானா மாநிலத்தில் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் காலமான கோடைக் காலத்தில் இந்தக் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

“குழந்தைத் திருமணத்திற்கு சேவைகளை வழங்கியோ அல்லது அதை நடத்தி வைக்கவோ உதவி செய்தால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சிடுவோர், பூசாரிகள் , ஜோடனை செய்பவர்கள், திருமணக் கூடங்களின் உரிமையாளர்கள் ஆகியோரை நாங்கள் எச்சரித்துள்ளோம்” என தெலிங்கானா மாநிலத்தின் தலைநகரும் இந்திய தொழில்நுட்ப மையமுமான ஹைதராபாத் நகரின் மேற்குப் பகுதியான விக்ராபாத் மாவட்டத்தில் உள்ள மூத்த அதிகாரியான ப்ரேம் குமார் தெரிவித்தார்.

 “மார்ச் மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடையே நல்ல பல முகூர்த்த நாட்கள் உள்ளன. திருமணம் அதிகமாக நடைபெறும் காலத்திற்கு முன்பாக இத்தொழிலில் ஈடுபடுவோருடன் நாங்கள் கூட்டம் நடத்தியிருக்கிறோம்.”

தங்கள் குழந்தைகள் திருமணம் செய்துகொள்வதற்கான சட்டபூர்வமான வயதை எட்டியவர்கள் என்ற அறிவிப்புக் கடிதத்தை பெற்றோரிடம் இருந்து பெற வேண்டும் என்றும், அதனோடு மணமகள், மணமகன் ஆகியோரின் வயதை நிரூபிக்கும் ஆதாரத்தை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் திருமணத் தொழிலில் ஈடுபடுவோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குழந்தைத் திருமணம் என்பது கிராமப் புறங்களிலும் ஏழ்மை நிறைந்த பிரிவினரிடையேயும் அதிகமாக உள்ளது. இவர்களிடையே பெண் என்பவள் நிதி ரீதியாக ஒரு சுமை என்றே கருதப்படுகிறாள். அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சங்களாலும் சிறுமிகள் மிகச் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.

“உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவுடனேயே தங்கள் குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பது என்பது வழக்கமானதொரு சடங்காகவே இந்தப் பகுதிகளில் இருந்து வருகிறது” என ஹைதராபாத் நகரில் புறநகர்ப் பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைக்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் காவல்துறை ஆணையரான மகேஷ் பகவத் தெரிவித்தார்.

 “எப்போதுமே கல்வியறிவின்மை என்பது மட்டுமே இதற்குக் காரணமாக இருப்பதில்லை. 13 வயது சிறுமியை 15 வயது சிறுவனுக்குத் திருமணம் செய்து கொடுக்க முயன்ற வழக்கு எங்களிடன் உள்ளது. இந்த இருவரின் பெற்றோருமே படித்தவர்கள்.”

குழந்தைத் திருமணங்கள் குறித்த விழிப்புணர்வு இப்போது அதிகரித்து வருகிறது எனவும் செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தெலிங்கானாவில் குழந்தைத் திருமணத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவரும் லாபநோக்கற்ற அமைப்பான மாமிடிபுடி வெங்கடரங்கையா ஃபவுண்டேஷன் குழந்தைகளின் உதவிக்கான தங்கள் தொலைபேசியில் வரும் அழைப்புகளில் பெரும்பாலானவை தங்கள் பகுதியில் குழந்தைகள் திருமணம் நடைபெற இருப்பதைப் பற்றி பெரியவர்கள்தான் தங்களுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள் என்று குறிப்பிட்டது.

கடந்த ஆண்டில் வட பகுதி மாநிலமான ராஜஸ்தானில் திருமணங்களுக்கான கூடாரங்களை சப்ளை செய்பவர்கள் அவ்வாறு கூடாரங்களை தங்களிடமிருந்து வாங்குபவர்களிடம் மணப்பெண், மணமகன் ஆகியோரின் பிறந்த நாள் சான்றிதழ்களை கேட்கத் துவங்கினர்.

இதுகுறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக, பகவத் அவர்களின் குழு பெற்றோர்களுக்கும் பூசாரிகளுக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

சட்டபூர்வமான திருமண வயதிற்குக் குறைந்த தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் பிடிபட்டால், இந்தியாவின் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் அவர்களுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனையும் ரூ. 1 லட்சம் (1500 அமெரிக்க டாலர்) அபராதமும் விதிக்கிறது. 2013ஆம் ஆண்டிற்கும் 2015ஆம் ஆண்டிற்கும் இடையே கிட்டத்தட்ட 800 குழந்தைத் திருமணம் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறுவர்களும் கூட குழந்தைகளாக இருக்கும்போதே திருமணம் செய்து வைக்கப்படும் அதே நேரத்தில் ஒப்பீட்டளவில் சிறுமிகளே இதில் பெருமளவிற்குப் பாதிக்கப்படுகின்றனர்.

உரிய வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொடுப்பதனால் சிறுமிகள் பள்ளிகளுக்குச் செல்வது நின்று போவதோடு, சுரண்டல், பாலியல் ரீதியான வன்முறை, வீட்டில் கொடுமைப்படுத்தப்படுவது, மகப்பேறு காலத்தில் இறப்பு ஆகியவற்றுக்கான அபாயங்களையும் அதிகரிக்கிறது என பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

தெலிங்கானாவில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள் ஓரளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தோன்றுகிறது.

“நிரப்பப்பட்ட படிவங்களை நாங்கள் பெறுவதோடு, மணப்பெண், மணமகன் ஆகியோருக்கான அடையாளத்திற்கான ஆதாரமாக புகைப்படங்களையும் எடுத்துக் கொள்கிறோம். எங்கள் சேவையை வழங்க மறுத்த பிறகு திருமணங்கள் ரத்து செய்யவும் பட்டுள்ளன” என விக்ராபாதில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக உள்ள மாடப்பட்டி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா; எடிட்டிங்: அலிசா டாங். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->