×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

புலம்பெயர்ந்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதிலிருந்து தடுப்பதன் மூலம் தொழிலாளர் நலச் சட்டங்களை மீறவில்லை என கடார் அரசு மறுப்பு

Thursday, 30 March 2017 17:01 GMT

- ரெஜிமென் குட்டப்பன்  

மஸ்கட், மார்ச் 30 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – புலம்பெயர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதன் மூலம் புதிய தொழிலாளர் நலச் சட்டத்தைத் தாங்கள் மீறவில்லை என வியாழனன்று கடார் அரசு கூறியது. பல லட்சக்கணக்கான வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளை மேம்படுத்த சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் தாங்கள் உறுதியோடு உள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு வேலையில் சேருவதையும் எண்ணெய் வளமிக்க அந்த வளைகுடா நாட்டை விட்டு வெளியேறுவதையும் எளிதாக்கும் புதிய சட்டம் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்தது. இந்தத் தொழிலாளர்களில் பலரும் 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பைக்கு முன்பாக கால்பந்து மைதானங்களை உருவாக்குவதற்கென வேலைக்கு நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்.

எனினும் புதிய சட்டமானது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் இந்தியா, வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளைச் சேர்ந்த எண்ணற்ற இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என்றும் உரிமைகளுக்கான குழுக்கள் தெரிவித்தன.

சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் உறுதியோடு இல்லை என்றோ அல்லது  வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களில் சுதந்திரமான செயல்பாட்டை மறுப்பதாகவோ கூறுவது ‘பொய்யானது’ என கடார் அரசு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடார் நாட்டின் 25 லட்சம் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்கள் ஆவர். இவர்களில் பலரும் 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைக்கான மைதானங்கள், கட்டமைப்புகள் ஆகியவற்றை கட்டுவதற்கான கட்டுமான வேலைகளில் மிகக் குறைவான ஊதியத்திற்கு பணிபுரிந்து வருகின்றனர்.

வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேறு வேலைக்கு மாறவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ தங்கள் முதலாளியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கின்ற சமீப ஆண்டுகளில் கண்காணிப்புக்கு ஆளான தோஹாவின் ‘கஃபாலா’ பொறுப்பேற்பு முறையில் - கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதற்கு ஒப்பானது என்ற புகார்கள் எழுந்தன.

தங்கள் முதலாளிகளிடமிருந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனுமதியைப் பெற வேண்டிய அவசியத்தை நீக்குவது, தொழிலாளர்களின் கடவுச் சீட்டுகளைக் கைப்பற்றி வைத்துக் கொள்வது, அவர்களின் ஊதியத்தை வழங்காமல் நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் முதலாளிகளுக்கு அபராதம் விதிப்பது போன்ற ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு சட்டத்தை கடந்த டிசம்பர் 13 –ம் தேதியன்று கடார் அரசு நிறைவேற்றியிருந்தது.

எனினும், இடம்பெயர்ந்தவர்கள் இப்போதும் கூட நாட்டைவிட்டு வெளியேற அனுமதியைப் பெற வேண்டியுள்ளது என்றும், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் கடார் நாட்டை விட்டு வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது என்றும்  தொழிற்சங்க வாதிகள் கூறினர்.

நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனுமதி கோரிய 184,551 மனுக்களில் 213 பேரின் மனுக்கள் தடுக்கப்பட்டன என்று உறுதிப்படுத்திய கடார் அரசு, இந்த நபர்கள் குற்றம் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருப்பதாலேயே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டது.

 “வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்கள் மோசடி புரிந்தவர்கள் என்றோ அல்லது செய்த ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கும் முயற்சி என்றோ வலுவான ஆதாரம் இருக்குமானால் அவர்கள் கடார்-ஐ விட்டு வெளியேறுவது தடுக்கப்படும் என மிகத் தெளிவாகவே நாங்கள் கூறியிருக்கிறோம்” என அந்த அரசு அறிக்கை குறிப்பிட்டது.

சர்வதேச தொழிலாளர் நிறுவனம் இந்தச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தோஹாவிற்கு வரும் நவம்பர் வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. இல்லையெனில் உலகக் கோப்பைக்கான நிகழ்ச்சியை நடத்துவதற்காக இடம்பெயர்ந்த தொழிலாளர்களை கட்டாயமாக வேலை செய்ய நிர்ப்பந்தப்படுத்துவது குறித்த விசாரணை ஒன்றை அது சந்திக்க வேண்டியிருக்கும்.

(செய்தியாளர்: ரெஜிமென் குட்டப்பன்; எழுதியவர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.) 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->