×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

‘தாஜ்மஹால்’ காட்டுவதாக ஆசை காட்டி இந்தியப் பெண்களை பாலியல் அடிமைத்தனத்திற்குள் தள்ளுகின்றனர் ஆட்கடத்தல்காரர்கள்

by Nita Bhalla | @nitabhalla | Thomson Reuters Foundation
Monday, 5 June 2017 15:55 GMT

The Taj Mahal is reflected in a puddle in Agra, India August 9, 2016. REUTERS/Cathal McNaughton

Image Caption and Rights Information

- நீதா பல்லா

புது டெல்லி, ஜூன் 5 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆட்கடத்தல்காரர்கள் கிராமத்துச் சிறுமிகளுக்கு தாஜ் மஹாலைப் பார்க்க அழைத்துச் செல்வதாக ஆசைகாட்டி அவர்களை பாலியல் அடிமைத்தனத்தில் ஆழ்த்தி வருவதாக திங்கட்கிழமையன்று ஓர் அறக்கட்டளை தெரிவித்தது.  மேலும் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டு வரும் குழுக்கள் ஏழைகளை அடிமைத்தனத்தில் ஆழ்த்துவதற்காக புதுப்புது வழிகளை கண்டுபிடித்து வருகின்றன என்றும் அது கூறியது.

வருடந்தோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்பளிங்கு நினைவகமான தாஜ்மஹால் அமைந்திருக்கும் வட இந்திய நகரமான ஆக்ராவில் ஒரு பாலியல் தொழில் மையத்திலிருந்து 15 சிறுமிகளையும் இளம் பெண்களையும் கடந்த வாரம் தாங்கள் மீட்டெடுத்ததாக ஆட்கடத்தலுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் அறக்கட்டளையான சக்தி வாஹினியைச் சேர்ந்த ரிஷி காந்த் கூறினார்.

“மேற்கு வங்கத்தில் காணாமல் போனதாக பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்ட ஆறு சிறுமிகளை நாங்கள் பல நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தோம். இறுதியில் ஆக்ரா நகரத்தின் சிவப்பு விளக்குப் பகுதியில் உள்ள ஒரு பாலியல் தொழில் மையத்தில் அவர்களை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது” என காந்த் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“காவல் துறையின் உதவியுடன் நாங்கள் ஒரு சோதனையை மேற்கொண்டபோது, ஆறு சிறுமிகளையும் மேலும் 9 பேரையும் நாங்கள் கண்டுபிடித்தோம். கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் அங்கே அடைத்து வைக்கப்பட்டிருந்ததோடு, வாடிக்கையாளர்களுடன் உறவு கொள்ளுமாறும் கட்டாயப்படுத்தப்பட்டனர். தாஜ் மஹாலைப் பார்க்க அழைத்துச் செல்வதாக உறுதியளித்த ஓர் ஆட்கடத்தல்காரருடன் தாங்கள் அங்கு வந்ததாக அவர்கள் கூறினர்.”

2016ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அடிமைத்தனம் குறித்த அட்டவணையின்படி உலகம் முழுவதிலும் சுமார் 4 கோடியே 60 லட்சம் பேர் அடிமைகளாக ஆக்கப்பட்டு, பாலியல் தொழில் மையங்களுக்குக் கடத்திச் செல்லப்படுகிறார்கள்; கடும் உழைப்பு தேவைப்படும் வேலைகளில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள்; வாங்கிய கடனுக்கான அடிமைகளாக ஆக்கப்படுகிறார்கள்; அல்லது இத்தகைய அடிமை வாழ்க்கையிலேயே இவர்களில் சிலர் பிறக்கிறார்கள்.

இதில்  40 சதவீதம் பேர் அல்லது 1 கோடியே 80 லட்சம் பேருக்கும் அதிகமானோர் இந்தியாவில் உள்ளனர். இவர்களில் பலரும் ஏழ்மை நிரம்பிய கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். நல்ல வேலை வாங்கித் தருவதாகவோ அல்லது வசதியான இடத்தில் திருமணம் செய்து தருவதாகவோ ஆசை காட்டப்பட்டு, இறுதியில் இவர்கள் விபச்சாரம், வீட்டு வேலை அல்லது செங்கற்சூளைகள் அல்லது நெசவுத் தொழிற்சாலைகள் போன்றவற்றில் வேலை செய்ய விற்கப்படுகின்றனர்.

தாஜ்மஹாலைப் பார்க்க அழைத்துச் செல்வதாக ஆசை வார்த்தை கூறுவது ஆட்கடத்தல்காரர்களின் ‘புதிய போக்காக’ உருவாக்கியுள்ளது என்பதை இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமிகளிடம் பேசியபோது தெரிகின்றன. இந்த ஆட்கடத்தல் குற்றம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பரவி வரும் நிலையில் மக்களை ஏமாற்றி அடிமைத்தனத்தில் ஆழ்த்துவதற்கான புதிய வழிகளை இந்த ஆட்கடத்தல்காரர்கள் தொடர்ந்து கண்டுபிடித்து வருகின்றனர் என்கிறார் காந்த்.

“இத்தகைய ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகமாக நிகழும் பகுதிகளில் இதுபற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த,இந்த ஆட்கடத்தல்காரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது பற்றி மக்களிடையே பிரச்சாரம் நடத்துவது போன்ற பல முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் காந்த் குறிப்பிட்டார்.

“எனினும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் குழுக்களும் மிகுந்த புத்திக்கூர்மையுடன் செயல்படுகின்றன. ஏழ்மையான, படிப்பறிவில்லாத மக்கள் குழுக்களை ஏமாற்ற புத்தம்புதிய வழிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். அவர்கள் கையாளும் இத்தகைய வழிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அப்போதுதான் பொதுமக்களின் விழிப்புணர்வுக்கான நமது வேலைகளில் அவற்றை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.”

17லிருந்து 19 வரையான வயதுடைய இந்த ஆறு இளம்பெண்களும் இந்தியாவின் கிழக்கு எல்லையான வங்க தேசத்தை ஒட்டிய வறுமைநிறைந்த மாவட்டமான தெற்கு 24 பர்காணா மாவட்டத்தில் உள்ள கிராமங்களிலிருந்து மார்ச் மாதத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது எனவும் காந்த் தெரிவித்தார்.

முதலில் அவர்கள் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கே சிறியதொரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆறு நாட்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். பின்னர் அவர்கள் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆக்ராவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கே ஒரு பாலியல் தொழில் மையத்திற்கு விற்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த இளம் பெண்களில் ஒருவர் எப்படியோ கைபேசி மூலம் தன் குடும்பத்தைத் தொடர்பு கொண்டிருக்கிறார். காவல்துறை அந்தக் கைபேசி அழைப்பு ஆக்ராவிலிருந்து வந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். வியாழக்கிழமையன்று அந்த பாலியல் தொழில் மையத்தை சோதனையிட்ட காவல்துறை அங்கிருந்த அறைகளில் ஒன்றில் படுக்கைக்குக் கீழேயிருந்த ரகசிய அறையில் அந்தச் சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்தச் சிறுமிகளில் இரண்டு பேர் தற்போது கர்ப்பமாக உள்ளனர்.

அந்தப் பாலியல் தொழில் மையத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்ட மேலும் ஒன்பது பேரும் இருந்தனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் அவரவர் குடும்பங்களோடு மீண்டும் இணைந்து விட்டனர் என்று குறிப்பிட்ட காந்த், அவர்களுக்கு முறையான மருத்துவ, மனோதத்துவ உதவிகள் அளிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதே இப்போதைய முன்னுரிமை என்றும் கூறினார்.

இது தொடர்பாக இந்தப் பாலியல் தொழில்மையத்தின் உரிமையாளரான 24 வயது பெண் கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய ஆட்கடத்தல்காரர்களை காவல்துறை இன்னமும் தேடி வருகிறது என்றும் காந்த் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->