×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பாலிய மணப்பெண்கள் குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஆட்கடத்தல்காரர்களின் முயற்சிகளைத் தடை செய்வதாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து

by Nita Bhalla | @nitabhalla | Thomson Reuters Foundation
Thursday, 12 October 2017 15:09 GMT

- நீதா பல்லா

புது டெல்லி, அக்.12 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - திருமண வயது ஆகாத மனைவியுடன் உடலுறவு கொள்வதும் கூட பாலியல் வன்கொடுமைதான் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆயிரக்கணக்கான சிறுமிகள் கடத்திச் செல்லப்படுவதையும், திருமணம் என்ற பெயரில் விற்கப்படுவதையும் தடுக்க உதவும் என  இது குறித்த பிரச்சாரகர்கள் வியாழனன்று  கருத்து தெரிவித்தனர்.

வரலாற்றுச் சிறப்புடைய இந்தத் தீர்ப்பு வெளியான அடுத்தநாள் பேசிய அவர்கள் சிறுமிகளுக்குக் கிடைத்துள்ள இந்த நீதிமன்ற வெற்றியைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்தத் தீர்ப்பை கண்டிப்பாக அமல்படுத்துவதுமே அதன் வெற்றிக்கான வழியாக அமையும் என்றும்  தெரிவித்தனர்.

“பாலியல் தொழிலில் உள்ள இடைத்தரகர்கள், பாலியல் தொழில்மையங்களின் உரிமையாளர்களுக்கு அவர்களை விற்பதற்கு முன்பாக முதலில் திருமண வயது வராத சிறுமிகளுடனான திருமணத்தைப்  பயன்படுத்தி அந்தச் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது; அதன்  மூலம் அவர்களை மனமுறிவுக்கு ஆளாக்குவது என்ற நடைமுறையை மிக நீண்ட காலமாகவே ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்” என ஆட்கடத்தலுக்கு எதிராகப் போராடிவரும் ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞரான அட்ரியன் பிலிப்ஸ் கூறினார்.

“திருமணம் என்ற போர்வையிலும் கூட திருமண வயது வராத சிறுமிகளுடன் உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்துள்ள இந்தத் தீர்ப்பு ஆட்கடத்தல்காரர்களுக்கு மிகப்பெரும் தடையாக அமையும். இந்தத் தீர்ப்பு குறித்து நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.”

பாலியல் வன்கொடுமை குறித்த நாட்டின் சட்டங்களில் கடந்த பல பத்தாண்டுகளாகவே நீடித்து வந்த, எந்தவொரு நபரும் 15க்கும் 18க்கும் இடைப்பட்ட வயதில் உள்ள தன் மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்வதை அனுமதித்து வந்த பிரிவை புதன்கிழமையன்று உச்சநீதிமன்றம் ரத்து செய்து இத்தகைய செயல் பாலியல் வன்கொடுமைதான் என்றும், எனவே தண்டனைக்குரிய ஒரு குற்றம்தான் என தீர்ப்பு அளித்தது.

அந்தச் சிறுமியின் கணவனோ, ஆட்கடத்தல்காரரோ, அல்லது அந்த உறவுக்காக பணம் கொடுக்கும் வாடிக்கையாளரோ ,அது எவராக இருந்தாலும், திருமண வயதுக்கு முன்பாக உடலுறுவு கொள்வதிலிருந்து சிறுமிகளை பாதுகாக்கும் என்றும் இதன் மூலம்  அந்தச் சிறுமிகளின் குழந்தைப் பருவத்தை நீட்டிக்கவும் செய்கிறது என்றும் இந்தத் தீர்ப்பு ஆட்கடத்தலுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் அறக்கட்டளைகள் குறிப்பிட்டன.

2016ஆம் ஆண்டில் இந்தியாவில் கிட்டத்தட்ட 20,000 பெண்களும் சிறுமிகளும் ஆட்கடத்தலினால் பாதிக்கப்பட்டனர். அரசின் புள்ளிவிவரங்களின்படி இது அதற்கு முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகம் ஆகும்.

இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலோர் வறுமை நிரம்பிய கிராமங்களில் இருந்து நல்ல வேலை தருவதாக ஆசை காட்டி இந்தியாவின் நகரங்கள், பெரு நகரங்களுக்கு அழைத்துச் சென்ற பின்பு அவர்கள் அடிமைத்தனம் நிரம்பிய நிலைமைகளுக்கு விற்கப்படுகின்றனர்.

இவர்களில் சிலர் வீட்டுவேலை செய்பவர்களாக மாறுகின்றனர்; அல்லது துணி நெய்யும் தொழிற்சாலைகள், விவசாயம் ஆகியவற்றில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்; அல்லது  பாலியல் தொழில்மையங்களுக்குள் தள்ளிவிடப்பட்டு அங்கே அவர்கள் பாலியல் ரீதியான சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

பல நேரங்களில் ஆட்கடத்தல்காரர்கள் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி பெண்களை வீட்டை விட்டு ஓடி வருமாறு ஏமாற்றுகின்றனர். எனினும் பாலியல் தொழிலில் உள்ள இடைத்தரகர்களுக்கு விற்பதற்கு முன்பாக அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்த இடைத்தரகர்கள் பின்னர் அவர்களை பாலியல் ரீதியான அடிமைத்தனத்திற்கு விற்று விடுகின்றனர்.

முதலில் அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது என்பதே இதில் பாதிக்கப்படுவோரை தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதற்காகச் செய்யப்படும் செய்முறையாகும். இந்தப் பெண்களின் பெருமைகள் அனைத்தையும் பறித்துக் கொள்வதன் மூலம் அவர்களை பாலியல் தொழிலுக்குள் அடைத்து வைக்க எளிதான வழியாக அமைகிறது. அங்கே அவர்கள் அனைவருக்கும் அடிபணிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

குழந்தைகள் எப்போதுமே குழந்தைகள்தான்

இந்த வழக்கின் மனுதாரர்கள்  பாலியல் வன்கொடுமை குறித்த நாட்டின் சட்டங்கள் திருமண வயது ஆகாத தன் மனைவிகளுடன் உடலுறவு வைத்துக் கொள்ள கணவர்களுக்கு அனுமதி அளிக்கும் விதிவிலக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். உடலுறவுக்கு ஒப்புதல் அளிக்கவும் திருமணத்திற்கும் உரிய வயது 18 என நாட்டின் மற்ற சட்டங்கள் தெரிவிக்கையில் இந்த விதிவிலக்கு அவற்றுக்கு முரண்பட்டதாக அமைகிறது என அவர்கள் வாதிட்டனர்.

இத்தகைய விதிவிலக்கை வழங்கும் சட்டப்பிரிவு திருமணம் ஆன, திருமணம் ஆகாத பெண்களிடையே வேறுபாட்டை உருவாக்குவது மட்டுமின்றி, திருமணம் என்ற போர்வையில் சிறுமிகளை கடத்திச் செல்லவும்  பயன்படுத்தப்படுகிறது எனக் குறிப்பிட்ட இந்த இரு நீதிபதிகள் அமர்வு சட்டமியற்றுவதில் ஒரே மாதிரியான தன்மை இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது.

தென்னக நகரமான ஹைதராபாத் நகருக்கு வளைகுடா நாடுகளில் இருந்து வரும் ஆண்கள், அங்கு தங்கியிருக்கும் காலத்தில் உடலுறவு கொள்வதற்காக பதின்பருவ முஸ்லிம் சிறுமிகளை ‘திருமணம்’ செய்து கொள்வதும் பின்னர் அவர்களை விவாகரத்து செய்வதும் ஆகிய நடவடிக்கைகள் குறித்து செய்திகள் வெளியாகியுள்ள பின்னணியில் இதற்கெதிராகப் போராடி வரும் அந்த நகரத்தில் உள்ள செயல்பாட்டாளர்கள் இந்தப் போக்கை தடுத்து நிறுத்த இந்தப் புதிய சட்டம் உதவும் எனக் கூறினர்.

 “முஸ்லீம் தனிச் சட்டத்தில், பருவமெய்திய பிறகு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ள போதிலும், இந்தத் தீர்ப்பு அது ஏற்கப்படத் தக்கதல்ல என புறந்தள்ளியுள்ளது” என ஹைதராபாத் நகரிலிருந்து செயல்பட்டுவரும் அறக்கட்டளையான ஷாஹீன் அமைப்பின் நிறுவனர் ஜமீலா நிஷாத் குறிப்பிட்டார்.

“இதற்கு முன்பெல்லாம் பெண்ணின் சம்மதத்தைப் பெற்றுவிட்டோம் என்பதை நிரூபிப்பதற்காக அவர்கள் (கணவர்கள்) பெண்ணின், பெண்ணின் பெற்றோரின் கையெழுத்துக்களை திருமணச் சான்றிதழ்களில் பெற்று வந்தனர். ஆனால் அது இப்போது செல்லத்தக்கதல்ல.”

முஸ்லீம் தனிச்சட்டம் என்பது இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் தங்கள் மதத்திற்கு உரிய வகையில் தங்களுக்கே உரிய பாரம்பரியமான பழக்க வழக்கங்களை பின்பற்றுவதை அனுமதிக்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஒரு சட்டமே ஆகும். எனினும் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக (முஸ்லீம்களின் புனித நூலான) குரானுக்கு தவறான விளக்கங்களை அளித்து ஆண்கள் விதிகளை தங்களுக்குச் சாதகமாக உருவாக்குகின்றனர் என செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானதாக இருந்த போதிலும், இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் மக்களிடையே இது குறித்த தகவலை பரவலாக தெரியப்படுத்தி, அதிகாரிகளால் இந்தத் தீர்ப்பு முறையாக அமல்படுத்தப்பட்டால் ஒழிய அது பெரிய பயனைத் தராது என்றும் இது குறித்த செயல்பாட்டாளர்கள் அழுத்தமாகத் தெரிவித்தனர்.

“நிச்சயமாக இந்த உத்தரவு வரவேற்கத் தக்க ஒன்றுதான். எனினும் இந்தப் பிரச்சனையைப் பொறுத்தவரையில் நாம் இன்னமும் துவக்க நிலையில்தான் இருந்து வருகிறோம்” என தென்னிந்திய நகரமான சென்னையைச் சேர்ந்த, இளம்வயதுத் திருமணத்திலிருந்து பல சிறுமிகளை மீட்பதில் பங்கெடுத்த வழக்கறிஞரான சுதா ராமலிங்கம் கூறினார்.

“குழந்தைத் திருமணத்திற்கு சமூகரீதியான அங்கீகாரம் இருந்து வரும் நிலையில் தனது கணவனுக்கு எதிராக ஒரு சிறு வயது மனைவி புகார் செய்ய முன்வந்தால் அவளுக்கு யார் உதவி செய்ய முன்வருவார்கள்? யாருமே, அவளது நெருங்கிய உறவினர்களும் கூட  உதவிக்கு வர மாட்டார்கள்.”

(செய்தியாளர்கள்: நிதா பல்லா @nitabhalla, ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll மற்றும் அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: லிண்ட்சே க்ரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->