×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்திய நடிகையின் மரணம் துபாயில் குடியேறி மரணமடைந்த தொழிலாளர்களின் உடல்களை தாய்நாட்டிற்கு அனுப்புவதில் நிலவும் தாமதத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Thursday, 1 March 2018 08:16 GMT

The body of Bollywood actress Sridevi is carried in a truck during her funeral procession in Mumbai, India, February 28, 2018. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

 

மும்பை, மார்ச் 1(தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – இந்தியாவைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி துபாயில் உயிரிழந்த சம்பவம் வளைகுடா நாடுகளில் குடியேறி மரணமடைந்த தொழிலாளர்களின் உடல்களை அவர்களது தாய்நாட்டிற்கு அனுப்பி வைப்பதில் நிலவும் நீண்ட தாமதத்தினால் அவதிப்படும் குடும்பங்கள் குறித்து மிக அரிதாகவே பேசப்படும் பிரச்சனையை வெளிக்கொண்டு வருவதாக இருந்தது.

இந்தியாவின் முதலாவது பெண் சூப்பர் ஸ்டார் என்று பெரிதும் கருதப்பட்டு வந்த 54 வயதான அந்த நடிகை பிப்ரவரி 24 அன்று தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து போனார்.

பிப்ரவரி 27ஆம் தேதியன்று ஐக்கிய அரபுக் குடியரசிலிருந்து ஸ்ரீதேவியின் உடல் விமானத்தில் எடுத்து வரப்பட்டு அடுத்த நாள் அவரது இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதற்கு முற்றிலும் மாறான வகையில் ஓமான் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் குறிப்பிடப்படாத நோயினால் குடியேறித் தொழிலாளரான போஜன்னா அரபள்ளி இறந்துபோய் கிட்டத்தட்ட  ஒரு மாதம் ஆகிவிட்டது என குடியேறித் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து இயக்கம் நடத்திவரும் பீம் ரெட்டி கூறினார்.

மார்ச் 1ஆம் தேதியன்று அரபள்ளியின் உடல் தென்னிந்திய நகரமான ஹைதராபாதிற்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படும் என இறந்தவரின் உடலை அவரது தாய்நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுவரும் ரெட்டி குறிப்பிட்டார்.

இறந்துபோன குடியேறித் தொழிலாளர்களின் உடல்களை திரும்ப அனுப்புவதற்கு பெரும்பாலான நேரங்களில் மாதக்கணக்கில் ஆகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து தேவையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது என ஐக்கிய அரபுக் குடியரசில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறி வந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவிற்கு திரும்ப எடுத்து வருவதற்காக காத்திருக்க வேண்டிய நிலை குறித்து ஊடகங்கள் பெருமளவில் சுட்டிக் காட்டி வந்தன.

இந்த சம்பவம் குடியேறித் தொழிலாளர்கள் குறித்த விரிவான விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது என்று தெரிவித்த ரெட்டி,  இது வெளிநாடுகளில் உயிரிழப்போரின் குடும்பங்கள் மிகக் குறைந்த காலத்திற்கே காத்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

 “ஒவ்வொரு ஆண்டும் வளைகுடாப்பகுதியில் குடியேறித் தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கில் இறக்கின்றனர்.  என்றாலும் இறந்தவர்களின் உடலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை பற்றி இப்போதுதான் முதன்முறையாக விவாதிக்கப்படுகிறது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“தனது மரணத்தின் மூலம் நடிகை ஸ்ரீதேவி குடியேறித் தொழிலாளர்களுக்கு மிகப்பெரும் நன்மை செய்துள்ளார் “என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் ரெட்டி கூறினார்.

வளைகுடா நாடுகளில் இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய தொழிலாளர்கள் சுமார் 60 லட்சம் பேர் உள்ளனர்; கடந்த ஆண்டில் சுமார் 8,000 இந்திய குடிமக்கள் இறந்துபோனார்கள். இவ்வாறு இறந்தவர்களில் பெரும்பாலோர் சவூதி அரேபியாவிலும் அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபுக் குடியரசிலும் இருந்தவர்கள் ஆவர் என அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிக வெப்பமான சூழ்நிலைகளில் வேலை செய்வது மற்றும் நோயுறுவது ஆகியவையே இத்தகைய மரணங்களுக்குப் பொதுவான காரணங்களாக இருக்கின்றன. மோசமாக நடத்தப்படுவது குறித்த புகார்கள் அடிக்கடி எழுகின்றன. மேலும் பணத்தை சேமிப்பதற்காக நோய்வாய்ப்படும்போது இந்தக் குடியேறித் தொழிலாளர்கள் உரிய மருத்துவ சிகிச்சை பெறுவதில்லை என்றும் இந்திய அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இவ்வாறு இறந்தவர்களின் உடல்களை மீண்டும் தாய்நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான நடைமுறையில் மரணத்திற்கான காரணத்தை குறிப்பிடும் மருத்துவ அறிவிக்கையை பெறுவதும் உள்ளடங்கியுள்ளது என புதுடெல்லியில் உள்ள ஐக்கிய அரபுக் குடியரசின் தூதரகம் குறிப்பிட்டது.

இவ்வாறு இறந்தவர்களின் பாஸ்போர்ட்டும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும். அதனோடு கூடவே இறந்தவரின் உறவினர் அல்லது அவரை வேலைக்கு எடுத்தவர் –குடியேறித் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதற்கான பொறுப்பை ஏற்றுள்ள நிறுவனத்தின் உரிமையாளர் அதிகாரபூர்வமாக அடையாளம் காட்டவேண்டியதும் அவசியம் ஆகும் என தூதரகம் தெரிவித்தது.

“நிறுவனத்தின் உரிமையாளர் இறந்தவரின் உடலைக் கோரி முன்வராத நிலையில் பல நேரங்களில் இறந்தவர்களின் உடல் நாட்கணக்கில் சவக்கிடங்கில் கிடத்தப்படுகிறது” என  துபாயில் குடியேறித் தொழிலாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஒரு வழக்கறிஞரான அனுராதா வொப்பிலி செல்டி கூறினார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->