×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

‘விருப்பத்திற்கு ஏற்ற பெண்களை வழங்க’ முன்வரும் இந்தியாவின் போலி இணையதளம் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது

Wednesday, 4 April 2018 11:21 GMT

A girl stands inside her under construction shanty at a slum in Mumbai, India, August 3, 2016. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, ஏப்ரல் 4 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – ‘விருப்பத்திற்கும் கையிலுள்ள பணத்திற்கும் ஏற்ற வகையில்’ பெண்களை ஏற்பாடு செய்யும் இந்தியாவின் போலி இணைய தளம் ஒன்று அது துவங்கிய முதல் நாளிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது இந்தியாவில் பாலியல் நோக்கங்களுக்காக பெண்களை கடத்தும் சவாலை எடுத்துக் கூறுவதாக உள்ளது.

பாரம்பரிய எண்ணமிக்க இந்தியாவில் பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் திருமணமாகாத ஆண்களும் பெண்களும் ஓட்டல்களில் அறைகளைப் பதிவு செய்வதற்கு உதவி செய்கின்ற இணைய தளமான ஸ்டேஅங்கிள் என்ற இணையதளம் அறையோடு கூடவே பாலியல் தொழிலாளி ஒருவரின் சேவையையும் ஏற்பாடு செய்து தருமாறு தனது வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த வேண்டுகோள்களால் சோர்வடைந்த நிலையில் ஸ்டேலெய்ட்.காம் என்ற போலி இணையதளம் ஒன்றைத் துவக்கியது.

“அறையோடு கூடவே தங்களுக்கு ஒரு பாட்னரையும் ஏற்பாடு செய்து தருமாறு ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 3,000 அழைப்புகள் எங்களுக்கு வந்து கொண்டிருந்தன. இது குறித்த ஒரு கலந்துரையாடலை துவங்குவது முக்கியமானது” என ஸ்டேஅங்கிள் இணைய தளத்தின் நிறுவனரான சஞ்சித் சேத்தி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“ஆட்கடத்தல் என்ற பிரச்சனை எவ்வளவு உண்மையானது என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். எங்களின் புரிதலின்படி, போலி இணையதளத்தை உருவாக்குவதை விட மிகச்சிறந்த வழி ஏதுமில்லை. தொழில்நுட்பத்தின் மூலமாகத்தான் பெருமளவிலான மக்களை உங்களால் அடைய முடியும்.”

தங்களது உடமைகள் நிராதரவான பெண்களும் சிறுமிகளும் சுரண்டப்படுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்ற கவலை அதிகரித்துள்ள நிலையில் ஏர்பிஎன்பி போன்ற ஓட்டல்கள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்துத் தருவதில் உதவி செய்யும் நிறுவனங்கள் ஆட்கடத்தல் பிரச்சனையை சமாளிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

2016ஆம் ஆண்டில் இந்தியாவில் 8,000க்கும் அதிகமான ஆட்கடத்தல் வழக்குகள் வெளிப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும் என்பதை அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இணையதளம் பத்துக்கும் மேற்பட்ட பெண்களைப் பற்றியும் அவர்களது அங்க விவரங்களையும் கொடுத்துள்ளதோடு, இவர்களில் சிலர் தாங்களாகவே முன்வந்து இத்தொழிலில் ஈடுபடுகின்றனர் என்றும் மற்றவர்கள் நம்பிக்கையான இடைத்தரகர்கள் மூலம் அசாம், மேற்கு வங்கம் போன்ற இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் இருந்து பெரும்கனவுகளுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

“இன்பம் பெறுவது இதை விட எளிமையானதாக இருக்காது” என்றும் அது உறுதி கூறியிருந்தது.

வாடிக்கையாளர்கள் இந்த இணைய தளத்தில் இணைந்தபிறகு அவர்களுக்கு ஒரு இமெயில் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இந்தியாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் ரீதியான அடிமைத்தனத்திற்குள் தள்ளப்படுகின்றனர் என்றும் இதில் மாற்றத்தைக் கொண்டுவர மேலும் அதிகமான விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

நல்ல வேலைகள் என்ற வாக்குறுதிகளுடன் ஆட்கடத்தல்காரர்களால்  பல ஏழை மக்களும் கிராமப்புறங்களில் இருந்து கவரப்படுகின்றனர். இவர்கள் இறுதியில் பாலியல் தொழில் மையங்களுக்கு விற்கப்படுவது, வயல்களில் அல்லது செங்கல் சூளைகளில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுவது அல்லது வீட்டுப் பணிப்பெண்களாக வீடுகளில் அடைத்து வைக்கப்படும் நிலையை எதிர்கொள்ள நேர்கிறது.

“விருப்பத்திற்கு ஏற்ற வகையில், பணத்திற்கு உகந்த வகையில் தேவைக்கு ஏற்ப” பெண்களை வழங்குவது என்ற ஸ்டேலெய்ட்.காம் இணையதளத்தின் அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் கடுமையான பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. கடந்த செவ்வாய்க் கிழமை இரவு வரையில் ட்விட்டரில் #StopWomenTrafficking என்ற ஹேஷ்டாக் அதிகபட்ச கவனத்தை ஈர்த்தது.

“இதைப் பற்றி ட்விட்டரிலும் கூட மக்கள் பேசத் துவங்கியிருக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியத்திற்குரியதாக இருந்தது. உண்மை என்னவெனில் மக்கள்  இந்தச் சேவையை பயன்படுத்த விரும்பினார்கள் என்பதுதான்” என 29 வயதான சேத்தி கூறினார்.

திருமணத்திற்கு முன்பாக உடலுறவு கொள்வதை வெறுக்கும் இந்தியாவில் சுமார் 900 ஓட்டல்களில் ‘தனிமையை விரும்பும் காதலர்களுக்கு’ உதவி செய்வதற்காக 2015ஆம் ஆண்டில் ஸ்டேஅங்கிள் இணைய தளம் துவங்கப்பட்டது.

ஆட்கடத்தலுக்கு எதிரான  அறக்கட்டளையான இம்பல்ஸ் என் ஜி ஓ வலைப்பின்னல் என்ற அமைப்பின் நிறுவனரான ஹசீனா கர்பி இந்த ஸ்டேஅங்கிள் இணையதளத்தை தொடர்பு கொண்டு ஏற்கனவே இத்துறையில் ஆட்கடத்தலுக்கு எதிராக இயக்கம் நடத்தி வருவோருடன் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

“அவர்களது நோக்கம் நல்லதாகவே இருக்கலாம். என்றாலும் இந்த இணையதளம் உண்மையானதா என்ற கேள்வி ஆட்கடத்தலுக்கு  எதிரான பிரிவினரிடையே நேற்று இரவு எழுந்ததோடு பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: கேட்டி மிகிரோ. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->