அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் கொத்தடிமை உழைப்பை தடுத்து நிறுத்த ஒன்றுபடுகின்றனர்

Thursday, 19 April 2018 08:10 GMT

Labourers shape mud bricks as they work at a kiln in Karjat, India, March 10, 2016. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

திருத்தணி, ஏப்.19 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் தமிழக முழுவதிலும் உள்ள செங்கற் சூளைகளிலும், அரிசி ஆலைகளிலும், தொழிற்சாலைகளிலும் கொத்தடிமை நிலையில் உழலும் மற்றவர்களை விடுவிக்க ஒன்று சேர்கின்றனர்.

அடிமைத்தனத்திற்கு எதிரான ஒரு குழுவான இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷனின் கூற்றுப்படி தமிழ்நாட்டிலுள்ள 11 தொழில்களில் சுமார் 5, 00,000 தொழிலாளர்கள் கடனுக்காக கொத்தடிமைநிலையில் சிக்கித் தவித்து வருகின்றனர். முதலாளிகளிடமும், வட்டிகாரர்களிடமும் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர்கள் உழைக்க வேண்டியுள்ளது.

ஆயத்த ஆடை உற்பத்தி உட்பட மற்றபல தொழில்களில் இத்தகைய அடிமை உழைப்பு பொதுவாக நிலவுகிறது என்ற போதிலும் இவர்களில் பெரும்பாலோர் செங்கற்சூளைகளில் வேலை செய்து வருகின்றனர் என 2017-ல் வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஐஜேஎம் கூறியுள்ளது.

45 வயதான வரலஷ்மி கோபால் 2004ஆம் ஆண்டில் அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பாக திருத்தணி நகருக்கு அருகே ஓர் அரிசி ஆலையில் கொத்தடிமை தொழிலாளியாக ஏழு ஆண்டுகளைக் கழித்துள்ளார்.

Varalakshmi Gopal (right) and Arul Egambavan at a meeting of rescued bonded labourers in Thiruthani, India, April 17, 2018. Thomson Reuters Foundation/Anuradha Nagaraj

2014ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் சங்கத்தில் (ஆர்பிஎல்ஏ) சேர்ந்ததில் இருந்து அவர் இத்தகைய அடிமைத்தனத்தில் இருந்து மற்றவர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

“பெரும்பாலான நேரங்களில் வேலை தேடிச் செல்பவராக நான் இந்த ஆலைகளில் நுழைவதுண்டு. அல்லது சில நேரங்களில் எனது ஆலையிலிருந்து தப்பித்துச் சென்ற தொழிலாளர்களை தேடும் செங்கல் சூளை அதிபராகவும் நான் வேடம் புனைவதுண்டு.”

“இது அபாயகரமான ஒன்றுதான் என்பதும் எனக்குத் தெரியும். என்றாலும் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்படுகிறது.”

இவ்வாறு கொத்தடிமைகள் இருப்பதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடித்தவுடன் அவர் காவல்துறைக்கு தகவல் சொல்லிவிடுவார். குறைந்தபட்சம் இதுவரையில் இத்தகைய பத்து மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்று இருப்பதாகவும் அவர் கூறினார்.

இத்தகைய நான்கு ஆர்பிஎல்ஏக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், குறிப்பாக பருவமழை துவங்குவதற்கு முன்பாக ஏப்ரல், மே மாதங்களில் மிகவும் பரபரப்பாக இருக்கும் செங்கற் சூளைகள், அரிசி ஆலைகள் ஆகியவற்றில் வேலை செய்து வரும்  கொத்தடிமைகளை கண்டுபிடிப்பதற்காக மாநிலம் முழுவதிலும் பரவியுள்ளனர் என ஆர் பி எல் ஏ வின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

முதல் ஆர்பிஎல்ஏ 2014ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. அதன்பிறகு தமிழ்நாடு முழுவதிலும் இதுவரை மேலும் மூன்று சங்கங்கள் இணைந்துள்ளன.

கடந்த ஆண்டில் இதன் உறுப்பினர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. அதாவது கொத்தடிமை முறைக்கு முடிவு கட்டுவதற்கான இயக்கம் வலுவாகி வருகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும் என வரலஷ்மி கூறினார்.

1976ஆம் ஆண்டில் இந்த கொத்தடிமை முறை தடை செய்யப்பட்டு விட்ட போதிலும் தொடர்ந்து இது பரவலாக நீடித்து வருகிறது. இத்தகைய நிலைமையானது 2030ஆம் ஆண்டிற்குள் 1கோடியே 80 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை மீட்பதற்கான திட்டங்களுடன் இதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த அரசை தூண்டியுள்ளது.

“இதற்கான சட்டத்தை அமல்படுத்துவதில் இடைவெளிகளும் சவால்களும் நிலவுகின்றன” என இந்த ஆர் பி எல் ஏ க்களும் ஆதரவு தெரிவித்து வரும் ஐஜேஎம் அமைப்பைச் சேர்ந்த குறளமுதன் தாண்டவராயன் கூறினார்.

“எனினும் கடந்த பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்த, இதிலிருந்து மீண்டவர்களின் குரலை அதிகாரிகளால் புறக்கணித்துவிட முடியாது” என்றும் அவர் மேலும் கூறினார். “இந்த சங்கங்களை உருவாக்கியதானது இதை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு மேடையை அவர்களுக்கு வழங்கியுள்ளது.”

ஆர் பி எல் ஏவின் மற்றொரு உறுப்பினரான அருள் ஏகம்பவன் கூறுகையில் தனக்கு எட்டு வயதாக இருக்கும்போது தனது தாத்தா வீட்டிலிருந்து ஒரு கல் குவாரியில் வேலை செய்வதற்காக தன்னை எடுத்துக் கொண்டு சென்றார்கள் என்றார். அவரது தந்தை வாங்கியிருந்த ரூ. 10,000 கடனை திருப்பிச் செலுத்துவதற்காக, பத்து ஆண்டுகளுக்கு பின்னர் அவர் மீட்கப்படும் வரை அந்தக் கல் குவாரியில் அவர் வேலை செய்ய வேண்டியிருந்தது.

“என்னை அந்த இடத்திலிருந்து மீட்டபோது, வெளியுலகத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் ஏகம்பவன் தெரிவித்தார்.

“அரசாங்கத்தின் நிதியுதவிக்கு மனுச் செய்வதிலிருந்து வேறு எங்கே வேலை தேடலாம் என்பது வரை எல்லாவற்றுக்குமே எனக்கு முன்பு விடுவிக்கப்பட்டவர்களிடம் தான் நான் உதவி கேட்டுச் செல்ல வேண்டியிருந்தது. இப்போது அந்த உதவியைத்தான் நான் மற்றவர்களுக்குச் செய்ய விரும்புகிறேன்.” என அவர் கூறினார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.