×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பால்ய விவாஹ மணப்பெண்கள் பாலியல் ரீதியான அடிமைத்தனம், வீட்டுப் பணி ஆகியவற்றிற்கு விற்கப்படுவதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

Tuesday, 1 May 2018 07:27 GMT

ARCHIVE PHOTO. A girl carrying tea kettles, climbs steps on the banks of river Ganges in the northern Indian city of Varanasi December 15, 2007. REUTERS/Arko Datta

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, மே 1 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - சிறுமிகள் அவர்களது பெற்றோர்களால் சட்டவிரோதமாக மணம் செய்து கொடுக்கப்பட்டபிறகு வீட்டுப் பணி செய்யும் அடிமைகளாக அல்லது பாலியல் ரீதியான அடிமைத்தனத்திற்கு கடத்திச் செல்லப்படுகின்றனர் என இந்திய மாநிலமான மகாராஷ்ட்ராவிலுள்ள அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்தனர்.

மகாராஷ்ட்ர மாநில பெண்களுக்கான கமிஷனின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் விஜயா ரகத்கரின் கூற்றுப்படி, பால்ய விவாஹமான குழந்தைத் திருமணங்களுக்கும் அடிமைத்தனத்திற்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்த மாநிலத்தின் முதல் ஆய்வை ஆராய்ச்சியாளர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் திருமணம் செய்து கொள்வதற்கான சட்டபூர்வமான வயது பெண்களுக்கு 18 ஆகவும் ஆண்களுக்கு 21 ஆகவும் உள்ளது. இந்த வயதிற்குக் கீழுள்ள தங்கள் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்க முயற்சித்து கண்டுபிடிக்கப்பட்டால் அந்தப் பெற்றோர்களுக்கு ரூ. 1,00,000 அபராதமும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் உண்டு.

இருந்தபோதிலும் பெண்களுக்கு எதிரான இந்த ஓரவஞ்சனை இன்றும் விரிவான வகையில், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள ஏழைப் பிரிவினரிடையே  தொடர்ந்து நீடித்தே வருகிறது.  இந்தப் பகுதிகளில் உள்ள பெற்றோர்கள் தங்கள் பெண்மக்களை நிதியளவில் ஒரு சுமையாகவே கருதுகின்றனர். எனவே விரைவிலேயே அவர்களை திருமணம் செய்து கொடுத்தும் விடுகின்றனர்.

“இந்தத் திருமணங்களில் பலவும் தொடர்ந்து நீடிப்பதில்லை. ஆட்கடத்தலுக்கும் இந்த வழக்கத்திற்கும் இடையே நேரடியான, மறைமுகமான தொடர்புகள் இருப்பதையும் நாங்கள் இப்போது பார்க்கிறோம்” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் ரகத்கர் கூறினார்.

இவ்வாறு சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்படும் சிறுமிகள் வீடுகளில் அடிமைகளாக்கப்படுகின்றனர்; பாலியல் தொழில்மையங்களுக்கு விற்கப்படுகின்றனர் என்ற புகார்கள் கிடைத்தப் பிறகு இது பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்வது என தனது கமிஷன் முடிவு செய்தது  என்றும் ரகத்கர் கூறினார்.

இத்தகைய ஒரு புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் இவ்வாறு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட சிறுமி ஒருவர் பின்பு ஊதியம் ஏதுமில்லாமல் பண்ணை ஒன்றில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதோடு அங்கு அவர்  அவமதிக்கப்பட்டதுடன்  வேறெங்கும் ஓடிவிடாமலிருக்க கட்டிப் போடப்பட்டும் இருந்தார் என்பதைக் கண்டறிந்தனர்.

அதிக அளவு குழந்தை திருமணங்கள் பற்றிய தகவல்கள் குறித்து தற்போது மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடை பெற்று வருகிறது. இந்த முடிவுகள் பல்வேறு மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் ரகத்கர் தெரிவித்தார்.

“ஆட்கடத்தல், இத்தகைய சிறுவயதுத் திருமணம் ஆகியவை குறித்த ஆய்வுக்கான களத்தில் முழுமையான வெற்றிடமே உள்ளது” என ஆட்கடத்தலுக்கு எதிரான குழுவான ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற குழுவைச் சேர்ந்த அட்ரியன் பிலிப்ஸ் கூறினார்.

இந்த இரு வகையான குற்றங்களுக்கு இடையே உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தும் புள்ளிவிவரங்களை இந்த ஆய்வு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவிக்கும் பிலிப்ஸின் குழு இந்த ஆய்வை மேற்கொள்வதில் பெண்கள் கமிஷனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது என ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் கடந்த மார்ச் மாதத்தில்  தெரிவித்தது. எனினும், யுனிசெஃபின் கூற்றுப்படி  இவ்வாறு திருமணம் செய்துகொள்ளும் மணப்பெண்களில் 27 சதவீதம் பேர்  இப்போதும் 18 வயதுக்குக் கீழானவர்களாகவே இருக்கின்றனர்.

பெண்குழந்தைகளை சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் தவறானது என்பதை பலரையும் ஏற்றுக் கொள்ள வைப்பது மிகவும் கடினமாக உள்ளது என இது குறித்த இயக்கங்களை நடத்துவோர் தெரிவிக்கின்றனர்.

“கடந்த பல ஆண்டுகளாகவே இது நடைபெற்று வருவதால் இந்தப் பழக்கத்தில் தவறொன்றும் இல்லை என்றே அவர்கள் நம்புகின்றனர்” என கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான தேசிய பிரச்சாரக் குழுவின் அமைப்பாளரான நிர்மல் கொரானா கூறினார்.

“பெற்றோர்கள் தங்கள் பெண்களை சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கும்போது, பெற்றோரின் சொத்தில் அவர்கள் எந்தவித பங்கையும் கோராமல் இருப்பதை உறுதிப்படுத்துவதாகும்” எனவும் அவர் மேலும் கூறினார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->