திருப்பூரில் இளம் பெண் மில் தொழிலாளி மரணம் கொத்தடிமை கவலையை எழுப்புகிறது

Thursday, 17 March 2016 13:15 GMT

In this 2014 file photo, employees sit during their lunch time inside a textile mill of Orient Craft Ltd. at Gurgaon in Haryana, northern India. REUTERS/Anindito Mukherjee

Image Caption and Rights Information

சென்னை, மார்ச் 17 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - தமிழகத்திலுள்ள நூற்பாலை ஒன்றில் வேலை செய்த ஒரு இளம்பெண்ணின் மரணம் பற்றிய புலன் விசாரணை, ஜவுளித் தொழிலாளர்கள், வேலை செய்யும் சூழல் குறிப்பாக கொத்தடிமையாகச் சிக்கிக் கொண்டவர்கள் நிலையைப் பற்றிய புதுக் கவலைகளை ஏற்படுத்துகிறது.

     தோட்டத் தொழிலாளர்களின் மகளாகிய அந்த இளம்பெண் வெறும் 17 வயதே நிரம்பியவர். அவர் வழக்கமான வேலை நேரத்திற்குப் பின் ஆரம்பிக்கும் அடுத்த கட்ட கூடுதல் பணிக்கு திரும்பவில்லை. ஆனால், அந்த இளம்பெண் அவர் வேலை செய்யும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோயில், கணபதி ஸ்பின்னிங் மில்ஸ் வளாகத்திற்குள் உள்ள அறையில் தன்னுணர்வற்ற நிலையில் மார்ச் 10-அன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பிரேத பரிசோதனை முடியாத நிலையில் மரணம் பற்றிய காரணம் தெரியவில்லை. எனினும், உடன் வேலை பார்க்கும் சக தொழிலாளர் ஒருவர் தற்கொலைக்கு தூண்டுதல் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் கூறியது. 

     உள்ளூர் சமூகக் குழுக்கள் இம்மாதிரியான தற்கொலைகள் தகாத பாலியல் துன்புறுத்தல்களோடு தொடர்புடையன என்றும் இந்தியாவில் வளர்ந்து வரும் ஜவுளித் தொழிலில் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது பெரும்பாலும் வெளிவருவதில்லை என்றும் எனவே, இந்த மரணத்தின் காரணம் பற்றி முழுமையான புலன் விசாரணை தேவை என்று கோரியுள்ளனர்.

    ஜவுளித் தொழிலில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்காக பெண்களால் உருவாக்கப்பட்ட ’’தமிழ்நாடு ஜவுளி மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் இந்த பெண் மரணம் குறித்த அறிக்கையில் “உடம்பில் காயங்கள் காணப்பட்டன என்றும் கயிற்றின் பதிவு கழுத்தைச் சுற்றிக் காணப்பட்டது” என்றும் கூறியது. 

    மில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள திரும்பத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது அதில் வெற்றியடைய முடியவில்லை.

    இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய வேலைவாய்ப்புகளைக் கொண்ட இந்த ஜவுளித் தொழிலில் இந்த பெண் ஏறத்தாழ இரண்டு வருடங்கள் வேலை செய்துள்ளார். அவருக்கு தினமும் 210 ரூபாய் கூலி வழங்கப்பட்டது. அதனை அவருடைய தாயார் மாதமாதம் வாங்குவது வழக்கமாய் இருந்தது.

   இந்தியாவின் ஒரு வருடத்தில் $42 பில்லியன் உற்பத்தி செய்யும் ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதித் தொழிற்சாலைகள் அதிக அளவில் அமைந்திருப்பது தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தான். உற்பத்தி திறனை அதிகரித்து இலாபத்தைப் பெருக்க பெரும் ஆதாயம் தரும் இத்தொழிலில் ஒரு பகுதியாக கொத்தடிமைத் தொழிலாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றது.     

    இத்தொழிற்சாலைகள் பெரும்பாலும் இளஞ் சிறுமிகளையே கூலிக்கு அமர்த்துகிறது. ’’சுமங்கலி’’ திட்டங்கள் என்று அழைக்கப்படும் இத் திட்டங்களின் கீழ் அவர்களின் குடும்பங்களுக்கு மூன்று வருட வேலைக்கு 30,000 ரூபாயிலிருந்து 60,000 ரூபாய் வரை குறிபிட்ட கால வரையறையின் முடிவில் கொத்தடிமை அடிப்படையில் கூலி கொடுக்கப்படுகிறது.

 

வசை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம்

    தற்காலத்திய அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மனிதாபிமான முயற்சியாக உருவாக்கப்பட்ட ஃபிரீடம் பண்ட் என்ற அமைப்பும் மற்றும் சி,.& ஏ. பவுண்டேஷன் என்ற அமைப்பும் தமிழ்நாடு ஜவுளித் தொழில் பற்றிய 2014-ஆம் ஆண்டு ஆய்வில் ”தொழிலாளர்களுக்கு பல நேரங்களில் மிகவும் குறைவாகவே கூலி கொடுக்கப்படுகிறது; சில சமயங்களில் வலுக்கட்டாயமாக வழக்கமான நேரங்களையும் தாண்டி வேலை வாங்கப்படுகிறார்கள்; அவர்களின் நடமாட்டத்திற்கு கூட தடை; அத்தோடு வசைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகிறார்கள் என்றும் குறிப்பிடுகின்றன..       

    அந்த ஆய்வு இப்பிரச்சினையின் முழு அளவைக் கண்டு பிடிப்பது கடினமாக உள்ளது என்றும் ஒரு கவனமான மதிப்பீட்டின்படி குறைந்த அளவு 100,000 சிறுமிகளும் பெண்களும் இம்மாதிரியாக சுரண்டப்படுகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறது. 

     தி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனும் சி&ஏ. பவுண்டேஷனும் இணைந்து பிப்ரவரியில் தெற்காசியா முழுக்க ஆள் கடத்தலிலும் வலுக்கட்டாயமாக வேலை வாங்குவதிலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு புது முயற்சியை மேற்கொண்டது. 

     இந்த வார பெண் தொழிலாளர் சங்க அறிக்கை அந்த இளம்பெண் கடினமான வேலை அழுத்தத்தை சமாளிக்க இயலவில்லை என்று குறிப்பிடுகிறது.   

   ’’ஒவ்வொரு நாளும் வழக்கமான எட்டு மணி வேலை ஷிப்ட் க்கு பின்னர் கூடுதலாக நான்கு மணி நேரம் ஓவர் டைம் அடிப்படையில் வேலை செய்தார்; ஒரு வருடத்திற்குப் பிறகு வேலையை விட விரும்பினார்: ஆனால், அவரின் பெற்றோர்கள் ஒப்பந்த காலம் வரை வேலை செய்யச் சம்மதிக்கச் செய்தனர்’’ என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.

     ”அவர் சக ஆண் தொழிலாளர் ஒருவரால் பாலியல் துனபங்களுக்கு உள்\ளாக்கப்பட்டார்; அதனை தன்னுடைய சகோதரனிடனும் நிர்வாகத்திடனும் புகார் செய்தார்”. இதுபற்றி,கேட்க நிர்வாகத்தினர் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

      ‘’கேம்ப் கூலி’’ (சுமங்கலி) முறைக்கு எதிரான பிரச்சாரத்தின் அமைப்பாளர் எம்.ஏ. பிரிட்டோ, கூறுகையில் இம்மாதிரியான அறிக்கைகள் சாதாரணமானது என்கிறார்.
      “மில் நிர்வாகங்கள் இவைகளை பூசிமறைக்கவே முயலுகிறது. பல நேரங்களில் சிறுமிக்கு அளிக்கப்படும் கூலி நிறுத்தி வைக்கப்படுகிறது; வழக்கை சிறுமியின் குடும்பம் கைவிட்டால் மட்டுமே கூலி விடுவிக்கப்படுகிறது; அல்லது அச்சிறுமி யாரிடமாவது பாலியல் தொடர்பு வைத்திருக்கிறார் என்று கதைகள் கட்டப்படுகின்றன. அதனால், அக்குடும்பங்கள் அவமானப்படுத்தப்பட்டு மௌனமாகிவிடுகின்றனர்’’ என்றும் அவர் கூறுகிறார்.

 

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பாrர்க்கலாம்.) (Anuradha.Nagaraj@thomsonreuters.com)

Our Standards: The Thomson Reuters Trust Principles.