×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

இந்தியாவில் பல தசாப்தங்களாக வறட்சி, வெளியேறும் கிராமவாசிகளை ஆட்கடத்தும் அபாயம் உருவாகிறது

by Rina Chandran | @rinachandran | Thomson Reuters Foundation
Wednesday, 27 April 2016 00:01 GMT

-ரினா சந்திரன் 

மும்பை, ஏப்ரல் 27 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பல பத்தாண்டுகளில் மிக மோசமான வறட்சி ஏற்பட்டு இருக்கிறது.  இதன் மூலம் கிராமப்புறங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை, தண்ணீர், உணவு மற்றும் வேலை தேடி புலம்பெயர்ந்து சென்றிட நிர்ப்பந்தித்திருப்பது, அவர்களை ஆட்கடத்தலுக்கும் அல்லது ஏமாற்றக்கூடிய நிலைக்குத் தள்ளக்கூடிய ஆபத்துக்களை அதிகரித்திருப்பதாக, சமூக ஆர்வலர்கள் கூறினார்கள்.

சுமார் 33 கோடி மக்கள், அநேகமாக நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது. இவ்வாறு புலம்பெயர்ந்து செல்வோர் கிராமத்திலேயே ஆதரவற்ற பெண்களையும், குழந்தைகளையும்  வயதான குடும்ப உறுப்பினர்களையும் விட்டுச்செல்வது, அவர்கள் ஏமாற்றப்படுவதற்கான இடர்ப்பாடுகளை அதிகமாக்கி இருக்கிறது.

“கிராமப்புறங்களில் உள்ள மக்கள் எப்போதுமே ஆபத்திற்கு உள்ளாக்கப்படக்கூடிய நிலையிலேயே இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் சிறந்த வேலைகள் மற்றும் சிறந்த வாழ்கையை விரும்புகிறார்கள்,“ என்று, சோஷியல் ஆக்‌ஷன் ஃபார்  டெவலப்மெண்ட் குழுவைச் சார்ந்த மங்களா டைதங்கர் என்பவர் கூறினார். இந்த அமைப்பு மகாராஷ்ட்ரா புனேவில் லாபம் நோக்கின்றி இயங்குகிறது.

“வறட்சி நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது. ஏனெனில், இப்போது அவர்கள் மிகவும் விரக்தியடைந்த நிலையில் இருக்கிறார்கள். அவர்களிடம் நிச்சயமாக எதுவுமே இல்லை,“ என்று டைதங்கர் கூறினார். இவர் கடந்த சுமார் இருபதாண்டுகளாக  மாநிலத்தில் வறட்சி பாதிக்கப்பட்ட மரத்வாடா பிராந்தியத்தில்  பணிசெய்து வந்திருக்கிறார்.

மகாராஷ்ட்ரா மிகவும் பாதிப்புக்கு ஆளான மாநிலங்களில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து மழை போதுமான அளவிற்குப் பெய்யாது விளையும் பயிர்கள் நாசமாகிவிட்டன, கால்நடைகள் இறந்துவிட்டன, நீர்த்தேக்கங்கள் தண்ணீரின்றி வற்றிவிட்டன, விவசாயிகளைக் கடன்காரர்களாக்கி அவர்களில் ஆயிரக்கணக்கானவர்களைத் தற்கொலைப் பாதையில் தள்ளிவிட்டது.

மாநிலத்தில் ஜால்னா மாவட்டத்தில். எண்ணற்ற கிராமங்களில் ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களை இங்கேயுள்ள வயது முதிர்ந்தவர்கள் தான் பார்த்துக்கொள்ளுகிறார்கள். இத்தோடு தங்கள் வீடுகளையும், வற்றிக்கிடக்கும் குளங்களையும் வறண்ட நிலங்களையும் இவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

“தண்ணீர் இல்லை, எனவே  வயல்களில் செய்வதற்கான எந்த வேலை யும் இல்லை, தங்கள் குடும்பத்தினை ஊட்டி வளர்த்திட உணவும் இல்லை,“ என்று ஓஸ்மானாபாத் மாவட்டத்தில் லாப நோக்கின்றி இயங்கி வரும் பர்யாய் என்னும் அமைப்பைச் சேர்ந்த விஸ்வநாத் டோத்கர் கூறினார். பர்யாய் அமைப்பு இப்பகுதியில் உள்ள சில கிராமங்களில் நீர் மேலாண்மை கட்டமைப்பு முறைக்கு உதவிக் கொண்டிருக்கிறது.

 “குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் பார்த்துக்கொள்வதற்கு யாருமே இல்லாததால். அவர்கள் மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்,“ என்று தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனிடம் இவர் கூறினார்.

 மாபெரும் வறியநிலை

ஆண்களும் அவர்களுடைய மனைவிமார்களும் புலம்பெயர்ந்து மும்பை, புனே உட்பட பெருநகரங்களுக்கு  அங்கேநடைபெற்றுவரும் கட்டுமானப் பணியிடங்களில் வேலை தேடி சென்றிருக்கிறார்கள். பகலில் அங்கே தொழிலாளிகளாக வேலை செய்துவிட்டு, இரவில் மேம்பாலங்களுக்கு அடியிலும், சாலையோரங்களிலும் தூங்குகிறார்கள். சிலர் வீதிகளில் பிச்சை எடுக்கும் நிலைக்குக்கூட தாழ்ந்திருக்கிறார்கள், என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். 

மற்றவர்கள், தங்கள் குடும்பத்தினருடன், மாநிலத்தில் உள்ள நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகளில் மிகவும் கரடுமுரடான நிலைமைகளின்கீழ் அற்ப ஊதியத்திற்கு பணிசெய்ய  உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தனியாக உள்ள பெண்களும், விதவைகளும்  நகரங்களில் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

“பேரிடர் நிகழ்வுகள். ஆள்கடத்தல் தொழிலுக்கு மிக எளிதான மையமாகவும் ஆதாரமாகவும் இருக்கிறது,“ என்று பச்பன் பச்சாவோ அந்தோலான் ( சேவ் தி சைல்ட் ஹுட் மூவ்மெண்ட்) நிர்வாக இயக்குநர் தனன்ஜெய் டிங்கால் கூறினார்.  இந்த அமைப்பு இந்தியாவில் நவீன அடிமைத்தனத்திலிருந்து 85 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகளைக் காப்பாற்றி இருப்பதாகக் கூறுகிறது.

“எனவே இவர்களில் எவரேனும் எளிதாக இரையாக மாட்டார்களா என்று ஒவ்வொருவரும் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்“என்று அவர் கூறினார்.

மும்பையில்   காவல்துறையைச் சேர்ந்த செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வந்தவர்களில் ஆட்கடத்தல் வழக்கு எதுவும் காணப்படவில்லை என்றும் ஆனால் புலம்பெயர்ந்து வருவோர் எண்ணிகை அதிகரித்திருப்பது தெரியும் என்றும் எனவே விழிப்புடன் இருப்பதாகவும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தண்ணீரை சேமிக்க நாடுதழுவிய அளவில் இயக்கம் நடத்திட உறுதிபூண்டிருக்கிறார். ஆனால், இந்தப் பிரச்சனை மீது “இரக்கமின்றி“ இருப்பதாக அரசாங்கத்தை. சமூக ஆர்வலர்களும் பொருளாதாரவாதிகளும் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மோடிக்கு 170 ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொருளாதாரவாதிகள், வறட்சியானது “மிகப்பெரிய அளவில் மக்கள் புலம்பெயர்ந்து வருவது குழந்தைப் பருவம் பாதிக்கப்படுதல், கல்வி பயில்வதில் இடையூறு ஏற்படுதல், முகாம்களில் வாழ்கை, மாநகர நடைபாதைவாசிகள் அல்லது நெருக்கமான சேரிக்குடிசைகள்“ உருவாவதற்கு காரணமாகியிருக்கின்றன என்று திறந்த கடிதம் ஒன்றில் கூறியிருக்கிறார்கள்.

நாட்டின் வளமான மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்ட்ரா, வறட்சி காரணமாக அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்திலிருந்தும் மற்றும் பல பகுதிகளிலிருந்தும் வேலை தேடி  மக்கள் புலம்பெயர்ந்து வருவதைத் தடுத்திட வில்லை.  வறட்சி கர்நாடகாவில் ஒரு கோடி மக்களைத் தாக்கி இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

சில இடங்களில் வறட்சி ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் புலம்பெயரச்  செய்திருக்கிறது. பாரம்பர்யமாக இதுபோன்ற சமயங்களில் வீட்டிலேயே இருந்துவிடக்கூடிய பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் கூட இப்போது ஒட்டுமொத்தமாக குடும்பத்தினருடன் புலம்பெயர்திட வைத்திருக்கிறது என்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

“இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடி இப்பிராந்தியத்தில் இதற்குமுன் பல ஆண்டுகளில் ஏற்பட்டதைவிட மிகவும் மோசமான ஒன்றாகும். இப்போது இந்த பிராந்தியத்தில்  கால்நடைத் தீவனம் இல்லை, தண்ணீர் இல்லை, வேளாண்மை இல்லை,“ என்று வடகர்நாடகா குல்பர்காவின் மண்டல ஆணையர்  அம்லான் ஆதித்யா பிஸ்வாஸ் கூறினார்.

“புலம்பெயர்தல் திடீரென்று அதிகரித்திருப்பது குறித்து மிகுந்த கவலையடைந்திருக்கிறோம்,“ என்று அவர் கூறினார்.

மாநில அரசு பண்ணை குட்டைகள் கட்டுதல் மற்றும் குளங்களைத் தூர் வாருதல் போன்ற பணிகளைச் செய்துகொண்டிருக்கிறது. ஜூன் மாதத்தில் பெய்யும் பருவமழையின் போது இவை நிரம்பிடம் மற்றும்  சிறுவிவசாயிகளுக்கு சற்றே நிவாரணம் அளித்திடும் என்ற நம்பிக்கையில் அரசு இதனைச் செய்துகொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்,

இப்போதைக்கு. கிராமங்களில் தங்கி இருப்போர், வயல்களுக்குச் சென்று அதனைப் பேணிப்பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள், கிணறுகளை ஆழப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், சொட்டுநீர்ப் பாசன முறைக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கி இருக்கிறார்கள். பருவ மழையை எதிர்பார்த்து இவை அனைத்தையும் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். அனைவரின் அச்சத்தையும் போக்கக்கூடிய விதத்தில், இந்த ஆண்டு பருவ மழை சராசரியாகப் பெய்வதைவிடக் கூடுதலாகப் பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இப்போது அனைத்தும், மழையையே சார்ந்திருக்கிறது,“ என்று டைதங்கர் கூறினார். “மழை நன்றாகப் பெய்தால் மக்கள் கிராமங்களுக்குத் திரும்பி வருவார்கள்.இல்லையேல், அவர்கள் திரும்பவருவதற்கு இங்கே எதுவும் இல்லை.“

(செய்தியாளர்: ரினா சந்திரன்; கூடுதல் செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: டிம் பியர்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பாrர்க்கலாம்.) 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->