சிறப்புக் கட்டுரை: நமது நாட்டின் குவாரிகளில் அழகான தோட்ட ஓடுகளை செய்கையில், தொழிலாளர்கள் இறக்கிறார்கள்

by ரினா சந்திரன் | @rinachandran | Thomson Reuters Foundation
Monday, 9 May 2016 12:03 GMT

In this file photo, children break stones at a quarry in Anangpur village, on the outskirts of the Indian capital of New Delhi. REUTERS/Kamal Kishore.

Image Caption and Rights Information

-ரினா சந்திரன் 

புத்புரா, மே 9 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்) - ராஜஸ்தான் மாநிலத்தில், புராதனமான கோட்டைகள் மற்றும் கவர்ச்சிகரமான அரண்மனைகளுக்கு மத்தியில் மிகவும் குறைவான விதத்தில் கவர்ச்சியூட்டும் காட்சிகளும் உண்டு. கல் உடைக்கும் குவாரிகளில், இங்கேயும் வெளிநாடுகளிலும் தோட்டங்களையும், பிரம்மாண்டமான உள் முற்றங்களையும் அலங்கரிக்கக் கூடிய  மணற்பாறை ஓடுகளை வெட்டி, மெருகேற்றும் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களையும் காணமுடியும். இந்தசமயத்தில் ஏற்படும் தூசியை சுவாசிப்பதால் சிலிகோசிஸ் நோய்க்கு ஆளாகி பலர் இறந்துகொண்டிருக்கிறார்கள்.

சமையல் அறைகளின் உச்சியில் பயன்படுத்தப்படும் மணற்பாறைகள் மற்றும் உருளைக் கற்கள் மாநிலத்தின் கோட்டா மற்றும் பண்டி ஆகிய மாவட்டங்களிலிருந்து வருகின்றன. இங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள் மிகவும் மோசமான  நிலைமைகளின்கீழ்  கடுமையாய் உழைக்கிறார்கள். மிகவும் குறைவான ஊதியத்தில் உழைக்கும் இவர்களுக்கு அநேகமாக எவ்விதப் பாதுகாப்பு அம்சங்களும் இன்றி வேலை செய்து வருகிறார்கள்.

மாநிலத்தில் உள்ள பாதி சுரங்கத் தொழிலாளர்களில் சுமார் 2 மில்லியன் சுரங்க தொழிலாளர்கள் சில்கோசிசால் அல்லது மற்ற சுவாச நோய்களாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உரிமை ஆர்வர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் குறித்து ஓர் ஒருங்கிணைந்த தரவு எதுவும் இல்லை என்ற போதிலும்,நூற்றுக்கணக்கானவர்கள், ஆயிரக்கணக்கானவர்கள் என்று கூட கூறலாம், கற்களை வெட்டும்போது ஏற்படும் தூசியை சுவாசிப்பதால் ஏற்படும் சிலிகோசிஸ் நோயால் இறந்திருக்கிறார்கள். சிலிகோசிஸ் என்பது சுரங்கங்களிலும், மணற்பாறைகள் மற்றும் சுண்ணாம்புக் காளவாய்களிலும் எழுகின்ற தூசிகளை நீண்ட காலத்திற்கு சுவாசிப்பதால் ஏற்படும் குணப்படுத்த முடியாத   நுரையீரல் நோயாகும்.

ராஜஸ்தானத்தில் செயல்படும் மனித உரிமைகள் ஆணையம் சென்ற ஆண்டு மாநில அரசாங்கத்திடம் சுரங்கங்களை நவீனப்படுத்திடுமாறும், இந்த நோயைக் கட்டுப்படுத்திட குறிப்பிட்டக் கால இடைவெளிகளில் மருத்தவ ஆய்வுகள் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டது. மேலும் மாநில அரசாங்கம் இதுபோன்ற இடங்களில் குழந்தைகள் சிலிகோசிஸ் நோய்க்கு மிக எளிதாக ஆளாகிவிடுவார்கள் என்பதால், குழந்தைத் தொழிலாளர்கள் எவரும் பணியில் இல்லை என்பதை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்றும் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

“தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, உரிமைகள் இல்லை. அவர்கள் அடிமைகளைப் போல் வேலை செய்கிறார்கள். மிகவும் நலிவுற்று இறந்துவிடுகிறார்கள்,” என்று இங்கே  சிலிகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சோதிக்கப்படுவதற்காக உதவி வரும் ஒரு தொண்டு நிறுவனமான ஆக்‌ஷன் எய்ட் அமைப்பைச் சேர்ந்த மதன் வைஷ்ணவ் கூறினார்.

“குழந்தைகள், அவர்கள் ஏழைகளாக இருப்பதால் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. என்று நீங்கள் கூறினால். இந்த வேலை அவர்களைக் கொன்றுவிடும். இந்தக் குவாரிகள் குழந்தைகளுக்கான இடம் கிடையாது,” என்றும் அவர் கூறினார்.

உலக அளவில் சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும் கற்களில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான மூலக் கற்கள் உற்பத்தி செய்யப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இந்தியா அதிகமான மூலக் கற்கள் உற்பத்தியாகும் நாடுகளில் ஒன்றாகும். உலக அளவில் சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும் கற்களில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமாக  இங்கே வெட்டி எடுக்கப்படுகிறது.

இந்தியாவின் சுரங்கத் தொழிலாளர்களில் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் குழந்தைகள்.மிகவும் ஆபத்தான மற்றும் அழுக்கடைந்த நிலைமைகளில் நாளொன்றுக்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமாக அவர்களில் பலர் வேலை செய்கிறார்கள். 

அச்சம் விளைவிக்கக்கூடிய அளவுகள்

பண்டி மாவட்டத்தில், தரிசு நிலங்களில் வரிசையாக திறந்தவெளி சுரங்கங்களும், குவாரிகளும் காணப்படுகின்றன. இங்கே புகழ்பெற்ற  வெளிறிய சிவப்பு நிறமுள்ள மற்றும் சிவப்பு-பழுப்புநிறமுள்ள கற்களும் டிரக்குகளில் ஏற்றப்படுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.  அங்கிருந்து அவை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெட்டுவதற்காகவும், வழவழப்பாக்குவதற்காகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்காகவும் அனுப்பப்படும். அல்லது, கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு அனுப்பப்படும். அங்கே பெண்கள் இவற்றை ஓடுகளாக்குவதற்காக  உளிகொண்டு சிறு சிறு துண்டுகளாக செதுக்குவார்கள்.

குவாரிகளில், கற்களைக் கண்டுபிடிப்பதற்காக நிலத்தை இடித்துத் தள்ளுவதற்காக இரசாயனப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொழிலாளர்கள் இங்கே கற்களை வெட்டி. செதுக்கிடும் பணிகளில் கண்களில் தூசி படாதவாறு கண்களைக் காப்பாற்றிக் கொள்ள எவ்வித  கண்ணாடிகளோ, முகமூடிகளோ அல்லது வேறெவ்விதமான பாதுகாப்பு உபகரணங்களோ இல்லாமல், நாளொன்றுக்கு 150ரூபாய்க்கும் குறைவான ஊதியத்துக்கு வேலை செய்கிறார்கள்.

இங்கே இத்தொழிலில் உள்ள பணி நிலைமைகள், தேசிய அல்லது சர்வதேச தரநிர்ணயத்தைவிட “மிகவும் குறைவான”தாகும். 2013   யூனிசெப் அறிக் கையின்படி.குழந்தைத் தொழிலாளர் எண்ணிகை அச்சம் விளைவிக்கக்கூடிய அளவில் இருக்கிறது.

பண்டி மாவட்டத்தில் சுரங்கத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு குழந்தைத் தொழிலாளர்களாகும். இது 50 ஆயிரத்திற்கும் அதிகமாகும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

“இந்தத் தொழில், பலதரப்பட்ட இடைத்தரகர்களால் பின்னப்பட்ட வலைப்பின்னலின் காரணமாக, பல்வேறு விதமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களைக் கொண்டிருக்கிறது. எனவே இக்கற்கள் எங்கிருந்த வந்தன என்கிற சரியாக தடயத்தைப் பெறுவது மிகவும் சிரமமாக இருக்கிறது,” என்று யூனிசெப் அறிகை கூறுகிறது.

ராஜஸ்தான், இந்தியாவில் மிகப்பெரிய அளவில் மணற்பாறைக் கற்களை உற்பத்தி செய்யும் மாநிலமாகும். பரம்பரை பரம்பரையாக வறுமையில் சிக்கித் தவிக்கும் கிராமப்புற தொழிலாளர்களுக்கும், தங்கள் எஜமானர்களிடம் அல்லது குவாரிகளின் உரிமையாளர்களிடம் பட்ட கடனை அடைப்பதற்கும் (உண்மையில் இவற்றில் பல சட்டவிரோதமானவைகளாகும்) ஒரே வாழ்வாதாரமாக இந்தத் தொழில்தான் இருந்து வருகிறது.

மத்தியப் பிரதேசம் மற்றும் கிழக்கு மாநிலங்களான பீகார் மற்றும் ஒடிசா ஆகியவற்றிலிருந்து  புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களையும், ஏஜண்டுகள் தந்திரமாக. நல்ல வேலை வாங்கித்தருவதாக ஆசைவார்த்தைகள் சொல்லி குவாரிகளுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் கட்டுமானத் தொழிலில்தான், குறிப்பாக முறைப்படுத்தப்படாத செங்கல் உற்பத்தி செய்யக்கூடிய இடங்கள் மற்றும் கல் குவாரிகளில்தான்,இந்தவிதமான சுரண்டல் பொதுவாகக் காணப்படும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  

புத்புரா கிராமத்தில், ஆறு அல்லது ஏழு வயதுக் குழந்தைகள்கூட இந்தத் தொழிலில் வேலை செய்கிறார்கள். உருளைக் கற்களை உடைக்கும் வேலையைச் செய்யத் தொடங்குகிறார்கள்.

சிறுமிகள் உருளைக் கற்களை உடைத்தல் மற்றும் ஓடுகளைத் தயாரிக்கும் பணிகளைச் செய்யும் அதே சமயத்தில்,  12 அல்லது  13 வயது பையன்கள் குவாரிகளில் வேலை செய்யத் தொடங்குகிறார்கள்.

உருளைக் கற்களை உடைக்கும் வேலைக்கு  அவ்வப்போது துண்டு துண்டாக கூலி கொடுக்கப்படுகிறது. எனவே ஒரு குடும்பத்தில் அதிகம் பேர் வேலை செய்தால் அதிக வருமானம் கிடைக்கும்.  தந்தையர்கள் இளம் வயதிலேயே சிலிகோசிஸ் நோயால் இறந்து விடுவதால், குழந்தைகள் அடிக்கடி வேலை செய்வதற்குத் தள்ளப்படுகிறார்கள்.

அரவாளி எனப்படும் ஒரு பொது - தனியார் வளர்ச்சி ஏஜன்சி மாநிலத்தில் சுரங்கங்களில்  வேலை செய்யும் தொழிலாளர்கள் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டது. இத்தொழிலாளர்கள் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக கற்களை உடைக்கும் சிலிகா தூசியை சுவாசித்ததால் சிலிகோசிஸ் நோய்க்கு ஆளானார்கள் என்று கண்டது. சமீபத்திய காலம்வரை, தொழிலாளர்கள் தொடர்ந்து இருமுவதும், எடை குறைவதும் காசநோய் என்று  தவறாகக் கணிக்கப்பட்டது.எனவே இவ்வாறு நலிவடைந்தவர்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை.

“நாங்கள் ஏழைகள். எனவே, எங்கள் குழந்தைகளும் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அவனுக்கு என்ன வயது என்று எங்கள் எஜமானர் கேட்க மாட்டார்,” என்று மதன் லால் கூறினார். அவர் தனக்கு சுமார் 35 வயது இருக்கும் என்று கூறினார். ஆனால், அவரது குழி விழுந்த கன்னங்களும், குழிந்த கண்களும் அவருக்கு மேலும் பத்தாண்டுகள் வயதானவராக இருக்கும் தோற்றத்தை அளித்திருந்தது.

“என் தந்தையும் இந்த குவாரியில்தான் வேலை செய்தார். எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது அவர் இறந்துவிட்டார். ஆகையால், நான்  வேலை செய்யத் தொடங்கினேன். அவருக்கு சிலிகோசிஸ் இருந்ததா என்று எங்களுக்குத் தெரியாது.இப்போது நானும் அதைப் பெற்றிருக்கிறேன். சில நாட்களில் வேலை செய்ய முடியாத அளவிற்கு நலிவடைவேன்.”

நோயும் மரணமும்

ராஜஸ்தான் நாட்டில் மிகக் குறைந்த எழுத்தறிவு விகிதமும் மிகவும் ஆழமாய் வேரூன்றியுள்ள சாதிய அமைப்பும் உள்ள மிகவும் வறிய மாநிலங்களில் ஒன்றாகும்.குவாரிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் மற்றும் இதர கீழ் சாதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பழங்குடி இனத்தவர்கள்.

மணற்கற்கள் தொழில் குறித்து சுற்றுச்சூழலியலாளர்களிடமிருந்தும் கடும் தாக்குதல்கள் வந்திருக்கிறது.  அவர்கள் சுரங்கங்களில் இரசாயனங்களைப் பயன்படுத்துவது நிலம் தரம் இழந்து போவதற்கும், காடுகள் அழிக்கப்படுவதற்கும் மற்றும் நிலத்தடி நீர் மாசு அடைவதற்கும் காரணமாகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.

புத்புரா கிராமத்தில் உள்ள சுமார் 150 குடும்பங்களில் குறைந்தபட்சம் 70தொழிலாளர்கள் சிலிகோசிஸ் நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். இவர்களில் 18வயதுடைய இளைஞனும் ஒருவர் என்று வைஷ்ணவ் கூறினார். இங்கே செயல்பட்டு  வரும் ஒரு தொண்டு நிறுவனம், பக்கத்து நகரத்தில் உள்ள ஸ்பெஷலிஸ்ட் கிளினிக் ஒன்றில் இவர்களை சோதித்திட உதவி இருக்கிறது,அவர்களுக்கு இந்த நோய் இருக்கிறது என்று மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்கிறது.

இந்த சான்றிதழ், அரசாங்கத்தால் அளிக்கப்படும் ஒரு லட்சம் ரூபாய் மருத்தவ உதவியைப் பெறுவதற்கு விண்ணப்பித்திட தொழிலாளர்களுக்கு வகை செய்கிறது. சிறந்தமுறையில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பாடுபட்டு வந்ததைத் தொடர்ந்து இது சாத்தியமாகி இருக்கிறது.  ஒரு தொழிலாளி சிலிகோசிஸ் நோயால் இறக்கும்போது, அவருடைய குடும்பம் 3 லட்சம் ரூபாயை இழப்பீடாகப் பெறுகிறது.

“எஜமானர் நாங்கள் டாக்டரிடம் செல்வதை விரும்ப மாட்டார். எங்களுக்கு சிலிகோசிஸ் இருக்கிறது என்று அவர்கள் கண்டுபிடிப்பதை அவர்கள் விரும்புவதில்லை. ஏனெனில், இது இங்கே சுரங்கத்தில் வேலை செய்வதால் ஏற்படுகிறது,” என்று, லால் கூறினார். அவர் தன்னுடைய சான்றிதழின் போட்டோநகலை மடித்து தன் சட்டைப் பைக்குள்ளேயே  வைத்திருக்கிறார்.

“எங்கள் குழந்தைகளுக்கும் இந்த நோய் பற்றிக் கொள்ளுமோ என்று நாங்கள் சங்கடப்படுகிறோம். ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும்?  வேறு வேலைகள் பெறும் அளவிற்கு நாங்கள் படிக்கவும் இல்லை.” என்று அவர் கூறினார்.

இங்கிருந்து கற்களை வாங்கும் பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களான பெல்ட்ராமி, மார்ஷல்ஸ் மற்றும் ஹார்ட்ஸ்கேப் உட்பட பல நிறுவனங்களிடம் இத்தொழிலில் உள்ள தொழிலாளர்களின் நிலைமைகளை எடுத்துச் சொல்லி அவர்களின் கவனத்திற்கு ஆர்வலர்கள் கொண்டுவந்த பின்னர்,இந்த கற்கள் உருவாகி எங்களிடம் வரும் வரும் இருக்கின்ற சங்கிலித்தொடர்களை சரி செய்திட நெறிமுறை வர்த்தக முன்முயற்சிகளை மேற்கொள்வதாக ஒப்புக் கொண்டார்கள்.

மார்ஷல்ஸ் நிறுவனத்தின் இணையப் பக்கத்தின்படி. அந்நிறுவனம்.தாங்கள் கற்கள் வாங்கும் இந்தியா மற்றும் சீனத் தொழில் குவாரிகளில்.  குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை என்பதையும். நியாயமான ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதையும்.குவாரிகளில் பாதுகாப்பான வேலை நிலைமைகள் இருக்கின்றனவா  என உத்தரவாதம் செய்துகொண்டுதான்  கற்களை வாங்குவதாகக் கூறி இருக்கிறது,

ராஜஸ்தான் அரசாங்கம் குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்விற்கு நடவடிக் கைகள் எடுத்திருப்பதாக, மாநில அரசால் பக்கத்தில் உள்ள கோட்டா மாவட்டத்தில் நடத்தப்படும் குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் புக்ராஜ் பாட்டியா கூறினார். 

“ஆனால் வறுமை மிகப் பெரிய பிரச்சனையாகும். பல குடும்பத்தினருக்குத் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை,” என்று அவர் கூறினார். “இதற்குக் கொஞ்சம் காலம் பிடிக்கும். குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையைத் தீர்த்திட விழிப்புணர்வு மற்றும் பல நலத் திட்டங்கள் தேவை.”

அதுவரைக்கும், லால் குழந்தைகளுக்கும், மத்தியப் பிரதேசத்தில் ஜாபுவா என்னுமிடத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள வைஷ்ணவ் ரமேஷ் அண்ணன் பையனான 16 வயதுடைய நீருவுக்கும் அநேகமாக வேறு வழியில்லை.

உணவு உண்பதற்காக சிறிது நேரம் இடைவேளை விட்ட சமயத்தில். “நான் எப்போதுமே பள்ளிக்குப் போனதில்லை. நான் எப்போதும் குவாரியில் குடும்பத்தினருடன் வேலை செய்து வந்திருக்கிறேன்.” என்று அவர் கூறினார். அப்போதும் அவர் முகம் மற்றும் கைகள் தூசியுடன்தான் காணப்பட்டன.

“எனக்கு செய்யத் தெரிந்த வேலை இது மட்டுமே,” என்று அவர் கூறினார்.

(சிறப்புக் கட்டுரை செய்தியாளர்: ரினா சந்திரன்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பாrர்க்கலாம்.) 

Our Standards: The Thomson Reuters Trust Principles.