எக்ஸ்க்ளூசிவ் – சிறுவர்களின் மரணம் அம்பலமானதைத் தொடர்ந்து இந்தியா மைக்கா சப்ளையர்கள் பற்றிய விசாரணையை உலகத்தின் பெரும் நிறுவனங்கள் தீவிரப்படுத்தியுள்ளன

by நீதா பல்லா மற்றும் ரினா சந்திரன் | Thomson Reuters Foundation
Thursday, 4 August 2016 16:59 GMT

நீதா பல்லா மற்றும் ரினா சந்திரன்

தில்லி/மும்பை, ஆகஸ்ட் 4 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - சட்டவிரோத சுரங்கங்களில் சிறுவர்கள் உயிரிழப்பது பற்றி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனின் விசாரணை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து உலகத்தின் பெரும் நிறுவனங்கள் வியாழனன்று இந்தியாவிலிருந்து தங்களுக்கு மைக்கா சப்ளை செய்பவர்கள் மீதான சோதனைகளை தீவிரப்படுத்த உறுதிபூண்டுள்ளன.

அழகுசாதனப் பொருட்கள், கார்களுக்கான வண்ணங்கள் ஆகியவற்றை மேலும் ஒளிவிடச் செய்கின்ற மைக்காவை உற்பத்தி செய்து வரும் மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றில் மூன்று மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு  கடந்த ஜூன் மாதத்திலிருந்து  குறைந்தது ஏழு குழந்தைகள் மரணமடைந்துள்ளதைக் கண்டறிந்துள்ளது.

Blood Mica
Deaths of child workers in India's mica "ghost" mines covered up to keep industry alive
Enter

ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் பெரும் பனிப்பாறைகளின் ஒரு சிறு முனை மட்டுமே வெளியே தெரிவதைப் போன்றது என அஞ்சப்படும் இந்த மரணங்கள் வெளியே தெரிவதில்லை. இதில் வறிய நிலையிலுள்ள குடும்பங்கள் மற்றும் இந்த சுரங்கங்களை நடத்தி வருபவர்கள் ஆகியோர் இந்த கைவிடப்பட்ட சுரங்கங்கள், பாதுகாக்கப்பட்ட காடுகள் ஆகியவற்றில் செயல்பட்டு வரும் இந்தச் சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு முடிவு கட்ட விரும்புவதில்லை. ஏனெனில், இவர்களுக்கு இது மட்டுமே வருமானத்திற்கான ஒரே தொழிலாக உள்ளது.

இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இத்தகைய சிறுவர்கள் மரணம் பற்றி விசாரிக்க உறுதியளித்துள்ள அதே நேரத்தில், இந்தியாவிலிருந்து இந்தக் கனிமத்தை வாங்கி வரும் பெரும் நிறுவனங்கள் தங்களுக்கு சப்ளை செய்து வருவோர் பற்றி விசாரிப்பதாகவும், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முடிவு கட்டும் முயற்சியாக இந்தியாவிலிருந்து இந்தக் கனிமத்தை வாங்குவதையும் நிறுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளன.

“எங்களுக்கு நேரடியாக இந்தக் கனிமத்தை சப்ளை செய்து வருவோருடன் உடனடியாக விசாரணையைத் துவங்கி விட்டோம்” என்று ஜெர்மன் கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகனின் அதிகாரபூர்வ பேச்சாளர் தெரிவித்ததோடு, தங்கள் சப்ளையர்களுடன் ஒரு கூட்டத்தை இந்த மாத இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

“எங்கள் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் எங்கள் உள்ளீடான செயல்முறைகளின் அடிப்படையில் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.”

பி எம் டபிள்யூ  குழந்தைத் தொழிலாளர் முறையை தாங்கள் எப்போதுமே ஏற்றுக் கொண்டதில்லை என்று குறிப்பிட்டது.

“இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமேயானால், அத்தகைய சப்ளையர்கள் எதிர்காலத்தில் எங்களுக்கு இத்தகைய பொருட்களை வழங்கும் சப்ளையர்கள் தொடரில் இடம்பெறாமலிருப்பதை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம்” என்று அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் தெரிவித்தார்.

இது பற்றி கருத்து கேட்க தொடர்பு கொண்டபோது, இந்தியாவில் உள்ள இதர பெரும் கார் தயாரிப்பு நிறுவனங்களான  மாருதி சுஸுகி, ஹுண்டாய், ஹோண்டா, ஆடி, மெர்சிடெஸ் பென்ஸ், ரெனால்ட், மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை பதில் எதுவும் தரவில்லை.

புறக்கணிப்புகளும் மாற்றுகளும்

சட்டப்படி 18 வயதிற்குக் குறைவான வயதுடையவர்கள் சுரங்கங்களிலும், இதர அபாயகரமான தொழில்களிலும் வேலை செய்ய முடியாது. என்றாலும் கடுமையான வறுமையில் வாடும் குடும்பங்கள் தங்கள் குடும்ப வருமானத்தைப் பெருக்குவதற்காக குழந்தைகளையே நம்பியிருக்கின்றன.

கார் உற்பத்தி, கட்டுமானத் துறை, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தக் மைக்கா உலகளவில் அதிகளவில் உற்பத்தியும் செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இது சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒன்றாகவும் திகழ்வதால், சமீப காலத்தில் வெளிர் பழுப்பு நிற, கண்ணைப் பறிக்கும் இந்தக் கனிமம் அதிக அளவில் முன்னுக்கு வந்தது.

இதன் தேவை அதிகரித்ததன் விளைவாக, 1980களில் காடுகளை வெட்டுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து 20,000 பேர் வேலை செய்து வந்த 700 சுரங்கங்களில் பெரும்பாலானவை மூடப்பட்டிருந்த இந்தியாவில் நலிவடைந்திருந்த இத்தொழிலை மீண்டும் உயிர்ப்பித்தது.

இந்திய சுரங்கக் கழகத்தின் தகவல்களின்படி, 2013-14 ஆண்டு காலத்தில் இந்தியா 19,000 டன் மைக்கா உற்பத்தி செய்தது. ஆனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான மைக்காவின் அளவோ 1,28,000 டன்கள் ஆகும். இதில் பெரும்பகுதியை சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன.

சிதிலமடைந்த சட்டவிரோத சுரங்கங்களில் இருந்தே இந்தியாவின் 70 சதவீத மைக்கா உற்பத்தி செய்யப்படுகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் ஏழ்மையான பகுதிகளாக உள்ள இந்த மைக்கா சுரங்கப் பகுதிகளில் கல்விக்கான, மாற்று வாழ்க்கை ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளுக்கு மேலும் அதிகமான தேவை என செயல்பாட்டாளர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

இந்தச் சுரங்கப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனுக்காக அரசு பிரத்தியேகமான நிதி வைத்துள்ளது என்றும் இதன் மூலம் பல்வேறு திட்டங்களுக்கு உதவும் வகையில் ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு  நிதி உருவாக வழியேற்படும் என்றும் மின்சாரம், நிலக்கரி மற்றும் மறுசுழற்சி மின்சாரம் ஆகியவற்றின் மத்திய அமைச்சகத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் ராஜேஷ் மல்ஹோத்ரா கூறினார்

குடிநீர், சுகாதாரம், கல்வி, பயிற்சி, குழந்தைகள் நலம் மற்றும் நீடிக்கக் கூடிய வாழ்க்கை நிலைமைகள் ஆகியவை முன்னுரிமையாக அமைகின்றன எனவும் அவர் பட்டியலிட்டார்.

இத்தகைய மக்கள் குழுக்களுக்கான முன்முயற்சிகளை ஒரு சில நிறுவனங்கள் ஆதரித்து வருகின்றன.

மைக்காவை கொள்முதல் செய்யும் பெரிய நிறுவனமும் சீனாவின் சாய உற்பத்தியாளருமான ஃபூஜியான் குன்சாய் மெட்டீரியல் டெக்னாலஜி கம்பெனி லிமிடெட் இதில் “உடனடியான மாற்றங்கள் தேவை” என்று குறிப்பிட்டதோடு இந்த சப்ளை தொடரில் தொடர்புடைய அனைவருமே செயலில் இறங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது.

குன்சாய் யூரோப்-இன் பொதுமேலாளரான மைக் டிஜ்டிங்க் ,உற்பத்தியாளரான தமது நிறுவனம் சுரங்கங்களிலிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதற்காக இந்தியாவில் தனது சொந்த நிறுவனத்தை இந்த மாதம் துவங்குகிறது என்றும், இது தொடர்பான மக்கள் குழுவினருக்கு உதவுவதற்கென  அரசு சாரா அமைப்பான டெரே டெஸ் ஹோமெஸ் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும், செயற்கை மைக்காவையும் தயாரிக்கத் துவங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

“குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத, சட்டபூர்வமான மைக்கா தொழிலை இந்தியாவில் நம்மால் உருவாக்க முடியவில்லை எனில், சச்சரவே இல்லாத செயற்கை மைக்கா போன்ற பொருளை நோக்கி மாறுவது பற்றி சிந்திக்கத் துவங்கலாம்.” என்றும் அவர் கூறினார்.

ஜெர்மனி நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமான மெர்க் கேஜி ஏ தங்களுக்கு  மைக்கா சப்ளை செய்து வந்த சுரங்கங்களில் குழந்தைகள் மைக்காவை சேகரித்து வருவதை 2008 ஆம் ஆண்டில் கண்டறிந்த பிறகு, அவற்றுடனான தொடர்புகளை  நிறுத்தியுள்ளதோடு,  குழந்தைத் தொழிலாளர் குறித்த தமது கண்டனத்தை மீண்டும் வலியுறுத்தியது.

ஒரு சில நிறுவனங்கள் மக்கள் குழுக்களில் முதலீடு செய்துள்ள நிலையில், சப்ளை செய்யப்படும் பொருட்கள் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தாதவை என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் மைக்காவை பயன்படுத்துவதையே  நிறுத்தி விட்டன. உற்பத்தியாகும் மைக்காவில் 10 சதவீதம் அழகு சாதனப் பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது.

தங்கள் கைகளால் உருவாக்கப்பட்ட பொருட்கள்,  நியாயமான வர்த்தகம் ஆகியவை குறித்து பெருமை கொள்ளும்  பிரிட்டிஷ் அழகுசாதன நிறுவனமான லுஷ், 2014ஆம் ஆண்டில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த கவலையினால் இயற்கையான மைக்காவிலிருந்து செயற்கை மைக்காவிற்கு மாறிவிட்டது. சுரங்கங்களில் இவ்வாறு குழந்தைகளின் மரணம் குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளதைப் பற்றிக் குறிப்பிடுகையில் “மிகக் கொடுமையானதொரு விஷயம்” எனக் குறிப்பிட்டது.

“எந்தவொரு தொழிலுமே குழந்தைகளின் உயிரை மட்டுமல்ல; எந்தவொரு உயிரையும் பறிப்பதாக இருக்கக் கூடாது” என லுஷ் நிறுவனத்தின் நியாயமான வர்த்தகப் பிரிவின் தலைவரான சிமோன் கான்ஸ்டாண்டின் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

“நியாயமான வகையில் சப்ளை செய்வதற்கான உறுதிமொழிகளும் மேலும் அதிகமான வெளிப்படைத்தன்மையும் பெறும் வரையில் இயற்கையான மைக்காவை புறக்கணிப்பது என்பதையே நாங்கள் தேர்ந்தெடுத்து தொடர்ந்து வருகிறோம்…. மற்ற நிறுவனங்களும் இந்த செய்தியை  கவனித்து, நாங்கள் அதிர்ச்சி அடைந்ததைப்  போலவே  அதிர்ச்சி அடையும் என்றே நாங்கள் நம்புகிறோம்.”

அழகு சாதன நிறுவனமான லா’ஓரியல்-இன் அதிகாரபூர்வ பேச்சாளர் இதுபற்றிக் கூறுகையில், “ வேலைநிலைமைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்ற, மனித உரிமைகள் மதிக்கப்படுகின்ற சட்டபூர்வமான சுரங்கங்களில் இருந்து மட்டுமே வாங்குவது என்பதில் உறுதியாக உள்ள நம்பிக்கையான குறைந்த எண்ணிக்கையான சப்ளையர்களிடமிருந்து மட்டுமே” தமது நிறுவனம் வாங்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.

இது பற்றி கருத்து கேட்க எஸ்டீ லாடர் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது பதில் எதுவும் அளிக்கவில்லை.

(கூடுதல் செய்தியாளர்: ஜடேந்தர் டாஷ், நிகம் புருஷ்டி; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith; செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.