ஆயத்த ஆடைத் தொழிலில் கொத்தடிமை நிலைக்கு முடிவு கட்ட இந்தியா, வங்க தேசத்தில் உள்ள நூற்பாலைகளை குறி வைக்கும் அறக்கட்டளை

by Nita Bhalla | @nitabhalla | Thomson Reuters Foundation
Thursday, 8 September 2016 23:53 GMT

Nasima mourns on the grave of her daughter Akhi after her body was identified at a mass grave yard, where all the unidentified victims of Rana Plaza were buried, in Dhaka November 7, 2013. REUTERS/Andrew Biraj

Image Caption and Rights Information

- நீதா பல்லா

புது டெல்லி, செப். 8 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) -  நூற்பாலைகளை குறி வைப்பதென்பது ஆயத்த ஆடைத்தொழிலில் நிலவும் கட்டாய உழைப்பைத் தடுப்பதற்கான மிகச்சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஆயத்த ஆடைத் தொழிலுக்கான சப்ளை சங்கிலியில் ஆதாரப் பொருட்கள் பற்றிய மதிப்புமிக்க தகவலை இங்கு பணிபுரியும் தொழிலாளர்களால்தான் வழங்க முடியும் என்று வெள்ளிக்கிழமையன்று கொத்தடிமைக்கு எதிரான அறக்கட்டளை ஒன்று தெரிவித்தது.

மூன்றாண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தில் உள்ள ராணா ப்ளாஸா வளாகம் இடிந்து விழுந்ததில் 1,136 ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தொழிற்சாலைகளின் நிலைமையையும், தொழிலாளர்களின் உரிமைகளையும் மேம்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஆயத்த ஆடைத் தொழிலுக்கு ஏற்பட்டது.

இந்தத் துயர  சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தொழில் இயங்கி வரும் கட்டிடங்களின் பாதுக்காப்பை உறுதிப்படுத்துவதிலிருந்து துவங்கி இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் மற்றும் சிறப்பான வேலை நேரங்கள் ஆகியவற்றை உறுதிப்படுத்தி, இந்த ஊழியர்களைப் பாதுகாக்கவும், இத்தொழிலில் வெளிப்படைத் தன்மையை வளர்த்தெடுக்கவும் உலகப் புகழ் பெற்ற ஆயத்த ஆடை நிறுவனங்களும், அறக்கட்டளைகளும் எண்ணற்ற முன்முயற்சிகளை மேற்கொண்டன.

எனினும், இத்தகைய திட்டங்களில் பெரும்பாலானவை வயல்களில் பருத்தியை பயிர் செய்யும் விவசாயிகள் அல்லது துணிகளைத் தைக்கும் தொழிலாளர்கள் ஆகிய பிரிவினரின் மீதே கவனம் செலுத்தி வந்தன. அவற்றில் ஒரு சில மட்டுமே இந்தத் தொழிலுக்கான சப்ளை சங்கிலியில் நடுவில் இருக்கும் நூற்பாலைகள் மீது கவனம் செலுத்தி வந்தன.

கலிஃபோர்னியாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அறக்கட்டளையான ஏஸ் யு சோ , த ரெஸ்பான்சிபிள் சோர்சிங் நெட்வொர்க் (ஆர் எஸ் என்) செப்டம்பர் 1ஆம் தேதியன்று லட்சக்கணக்கான தொழிலாளர்களை பணியில் அமர்த்தியுள்ள இந்தியாவிலும் வங்க தேசத்திலும் உள்ள நூற்பாலைகள் மீது கவனம் செலுத்துவதற்கான திட்டமொன்றைத் துவக்கியது.

“ஆயத்த ஆடைத் தொழிலுக்கான பொருட்களை சப்ளை செய்யும் சங்கிலித் தொடரில் நடுவில் அமைந்துள்ள இந்த நூற்பாலைகள் கட்டாய உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியை அடையாளம் காட்டவும், இந்த சப்ளை சங்கிலியில் இத்தகைய பருத்தி நுழைவதைத் தடுக்கவும் உதவி செய்யக் கூடிய மிகவும் தனித்துவமான நிலையில் அமைந்துள்ளன” என்று தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் ஆர் எஸ் என் – இன் இயக்குநர் பேட்ரிஷியா ஜூரேவிச் கூறினார்.

“பல்வேறு வகையான பருத்தியை ஒன்றாகக் கலந்து நூல்நூற்பவர்கள்  பணிபுரிகின்ற, இந்த சப்ளை சங்கிலியில் மிகவும் தெளிவில்லாத பகுதியை குறி வைப்பதாக எங்கள் முன்முயற்சி அமைகிறது” என அவர் கூறினார். “நமது துணிகள் உருவாக்கப்படும் நூலிழையானது கட்டாய உழைப்பு நிலைமைகளில் அறுவடை செய்யப்பட்ட பருத்தியை அடிப்படையாகக் கொண்டதா? என்பதை அறிவதற்கு அவர்களே முக்கியமானவர்களாக இருக்கின்றனர்.”

மேலும், தென் இந்தியாவில் உள்ள நூற்பாலைகளில் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும், நல்ல வேலை தருவதாக ஆசை காட்டி, உறுதியளித்து வீடுகளிலிருந்து அவர்கள் கவர்ந்திழுத்து வரப்படுகின்றனர் என்றும், எனினும் நடைமுறையில் படுமோசமான வேலை நிலைமைகளில்தான் அவர்கள் வேலை செய்து வருகின்றனர் என்றும் ஜூரேவிச் கூறினார்.

எவ்வித ஒப்பந்தமும் இன்றியும், ஊதியத்துடன் கூடிய விடுமுறை இன்றியும், மிகக் குறைந்த நடமாடும் சுதந்திரத்துடனும் இந்த நூற்பாலைகளில் பெண்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதைத் தாங்கள் கண்டறிந்ததாக செண்டர் ஃபார் ரிசர்ச் ஆன் மல்டிநேஷனல் கார்ப்பரேஷன்ஸ் (சோமோ) என்ற டச்சு  அமைப்பின் 2014ஆம் ஆண்டிற்கான அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்யும் வகையிலும், அல்லது கொத்தடிமை நிலை மற்றும் ஆட்கடத்தல் ஆகியவை குறித்து தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் வகையிலும் அமெரிக்காவும் பிரிட்டனும் சட்டங்களை இயற்றியுள்ளன.

இத்தகைய பொருட்களை பயன்படுத்துவோரும், இத்தகைய தொழில்களில் முதலீடு செய்வோரும் சமூக ரீதியாக விழிப்புணர்வு பெற்றுள்ள நிலையில், நிறுவனங்களின் மனித உரிமைகள் குறித்த செயல்பாடு, உற்பத்தியில் நெறிமுறையான போக்கு ஆகியவற்றை அவர்கள் கோருகின்றனர்.

தங்களது யார்ன் எதிக்கலி அண்ட் சஸ்டெய்னப்ளி சோர்ஸ்ட் (யெஸ்) என்ற முன்முயற்சியானது நூற்பாலைகளில் கட்டாய உழைப்பு மற்றும் ஆட்கடத்தல் ஆகியவற்றை அடையாளம் காண தொழிலாளர்களுக்கு உதவி செய்வதாக இருக்கும் என ஆர் என் எஸ் தெரிவித்தது.

தொழிலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்துவது, அவற்றை முறையாக அமல்படுத்தியுள்ளார்களா? என்பதை மதிப்பிடுவது, அதுகுறித்த சான்றிதழை வழங்குவது ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலான கொள்கைகளை அமல்படுத்த இந்த முன்முயற்சியானது நூற்பாலைகளுக்கு உதவி புரிவதாகவும் அமையும்.

யெஸ் முன்முயற்சி துவங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே அடிடாஸ், ஹட்ஸன்’ஸ் பே கம்பெனி, பீஜே’ஸ் வோல்சேல் க்ளப் மற்றும் வூல்வொர்த்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் அதற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தன என்பதோடு, இந்தியாவில் உள்ள ஒரு நூற்பாலை இதற்கான சான்றிதழை தாங்கள் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுத் தங்களை தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறினார்.

“இவ்வகையான பரிசோதனைகளுக்கு தொழில் ரீதியான தேவை இருக்கிறது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது” என அவர் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: நிதா பல்லா; எடிட்டிங்: எலன் உல்ஃப்ஹோர்சட். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.) 

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.