பிரத்யோகமாக: குழந்தைத் தொழிலாளர்களின் மரணம் அம்பலமானதைத் தொடர்ந்து சட்டவிரோத மைக்கா சுரங்கங்களின் மீது இந்தியா நடவடிக்கை

Friday, 30 September 2016 14:33 GMT

A girl shows some of the mica flakes she has collected whilst working in a open cast illegal mine in Giridih district in the eastern state of Jharkhand, India, January 22, 2016. REUTERS/Nita Bhalla

Image Caption and Rights Information

- நீதா பல்லா மற்றும் ஜடேந்தரா டாஷ்

புது டெல்லி/ புவனேஸ்வர், செப். 30 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - சட்டவிரோத மைக்கா சுரங்கங்களில் நிகழும் குழந்தைத் தொழிலாளர்களின் மரணங்கள் மூடி மறைக்கப்படுகின்றன என்பதை தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனின் கள ஆய்வு அம்பலமாக்கியதைத் தொடர்ந்து, இந்தியாவிலுள்ள அதிகாரிகள் மைக்கா சுரங்கங்களின் மீது சோதனை நடத்தி வருவதாகவும், இதில் உள்ள வர்த்தகர்களை கைது செய்வதாகவும், மறைமுகமாக நடத்தப்பட்டு வரும் இத்தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருப்புச் சந்தை மிகுந்த உற்சாகமாக செயல்பட்டு வருவதன் விளைவாக, அழகுசாதனப் பொருட்கள், கார்களுக்கான வண்ணங்கள் ஆகியவற்றை மேலும் ஒளிவிடச் செய்கின்ற இந்தக் கனிமத்தை வெட்டியெடுக்கும்போது  கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறைந்தது ஏழு குழந்தைத் தொழிலாளிகளாவது கொல்லப்பட்டிருக்க வேண்டும்  என மைக்கா உற்பத்தி செய்யும் மாநிலமான ஜார்க்கண்டில் மூன்று மாத காலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று கண்டறிந்தது.

இந்தியாவின் மிகவும் ஏழ்மையான பகுதியினருக்கு வருமானம் அளித்து வரும் ஒரே ஆதாரமான இந்த சட்டவிரோதமான மைக்கா வெட்டியெடுக்கும் தொழிலானது இதன் விளைவாக முடிவுக்குக் கொண்டு வரப்படலாம் என்ற அச்சத்தினாலேயே இந்தச் சுரங்கங்களை நடத்துபவர்களும், இந்த விபத்துகளில் இறந்த சிறுவர்களின் குடும்பங்களும் இத்தகைய மரணங்கள் பற்றி புகார் எதுவும் தருவதில்லை.

Blood Mica
Deaths of child workers in India's mica "ghost" mines covered up to keep industry alive
Enter

தனது துறை கடந்த மாதத்தில் இத்தகைய நூற்றுக்கணக்கான சுரங்கங்களில் சோதனை மேற்கொண்டதாகவும், இதுவரையில் இரண்டு பேரை கைது செய்திருப்பதாகவும், சட்டவிரோதமாக சுரங்கங்களை நடத்தி  வருவதாக ஏழு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கோடெர்மா மாவட்ட வனத்துறை அதிகாரி மிதிலேஷ் குமார் சிங் தெரிவித்தார்.

“நாங்கள் இந்த சுரங்கங்களில் வேலை செய்து வரும் தொழிலாளிகளை கைது செய்வதில்லை. ஏனெனில் அவர்கள் ஏழைகள். அவர்களை இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தி வேலைக்கு வைத்திருக்கும் நபர்களை மட்டுமே நாங்கள் கைது செய்து வருகிறோம்.” எனவும் அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

இத்தகைய சோதனைகளின்போது, சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டு மலையெனக் குவிந்திருக்கும் மைக்காவை  எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டு வந்த ட்ரக்குகள், வேன்கள் ஆகியவை உள்ளிட்ட ஐந்து வாகனங்களை  தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கார் உற்பத்தி, கட்டுமானத் துறை, எலெக்ட்ரானிக்ஸ், ‘இயற்கை’ அழகு சாதனப் பொருட்கள் என உலகத்தின் மிகப்பெரும் புகழ் பெற்ற நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு  வரும் இந்தக் கனிமமானது சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒன்றாகவும் திகழும் நிலையில் சமீப ஆண்டுகளாக பிரபலமாகியுள்ளது. வெள்ளி நிறத்தில், பளபளப்பாக ஜொலிக்கும் இந்தக் கனிமத்தை உலகத்தில் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா விளங்குகிறது.

ஒரு காலத்தில் இந்தத் தொழிலில் 700 சுரங்கங்களுக்கு மேல் செயல்பட்டு வந்ததாகக் கூறப்பட்டு வந்தபோதிலும், 1980இல் காடுகளை அழிப்பதைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று  நிறைவேற்றப்பட்டதைத்  தொடர்ந்தும், இயற்கையான மைக்காவிற்குப் பதிலாக  மாற்றுப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும்,  பெரும்பாலான சுரங்கங்கள் மூட வேண்டிய நிர்ப்பந்தம்  ஏற்பட்டது.

எனினும் மைக்காவின் மீது மீண்டும் துளிர்விடத் துவங்கியிருக்கும் ஆர்வமானது ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடெர்மா, கிரிடிஹ் ஆகிய மாவட்டங்களில் உள்ள காடுகளில்  மூடப்பட்டிருந்த, இற்றுப்போன நிலையில் இருந்த  நூற்றுக்கணக்கான சுரங்கங்களை இவ்வாறு சட்டவிரோதமாகப் பயன்படுத்த தூண்டிவிட்டது.

18 வயதிற்குக் கீழுள்ள சிறுவர்களை சுரங்கங்களிலும், இதர அபாயகரமான தொழில்களிலும் வேலைக்காக ஈடுபடுத்துவதை இந்திய சட்டங்கள் தடை செய்கின்றன. எனினும் மிகவும் கடுமையான வறுமையில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் வருமானத்தை பெருக்குவதற்கு தங்கள் குழந்தைகளையே நம்பியுள்ளன.

சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு ‘மிகப்பெரிய அடி’

தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனின் இந்தக் கள ஆய்வு ஆகஸ்ட் மாதத்தில் வெளியானதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர் நலத்துறை விசாரணை ஒன்றை நடத்தப் போவதாக அறிவித்தது.

இத்தகைய சட்டவிரோதமான மைக்கா சுரங்கங்கள்தான் உள்ளூர் மக்களுக்கு வருமானத்திற்கான ஆதாரமாக உள்ளது என்றும், சுரங்கங்கள் சரிந்ததால் ஒரு சில தொழிலாளர்கள் இறந்தார்கள் என்றும், இந்த மாதத் துவக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை முடிவுகள் தெரிவித்தன. எனினும் குழந்தைத் தொழிலாளர்கள் எவரும் இறந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அது குறிப்பிட்டது.

கோடெர்மா மாவட்டத்தில் ஹரையா கிராமத்திலிருந்து மூன்று பெண்கள் கடந்த மே 5ஆம் தேதி மைக்காவை வெட்டியெடுக்கும்போது மரணமடைந்ததாகத் தெரிவிக்கும் அந்த விசாரணை அறிக்கை, மைக்காவை சேகரிப்பதில் குழந்தைகள் எவரும் ஈடுபடுத்தப்படுவதில்லை என்றும் அவர்கள் அனைவரும் பள்ளிக்குச் சென்று வருகிறார்கள் என்றும் உள்ளூர் கிராமத் தலைவர்கள் கூறியதாகவும் குறிப்பிட்டது.

எனினும், குழந்தைத் தொழிலாளர் முறையை நிறுத்துவதற்காக மாநிலம் முழுவதிலும் பொது விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை தாங்கள் துவக்கியுள்ளதாகவும், சிறிய கடைகள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் வேலை செய்து வந்த 250 சிறுவர்களை விடுவித்துள்ளதாகவும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர்.

“உங்கள் செய்தி அறிக்கை வெளியான பிறகு, இந்த விசாரணையை நாங்கள் நடத்தினோம். தொழிலாளர்களுக்கான கமிஷனும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர் நலம், வேலைவாய்ப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கே. ஜி.ரஹாத்தே தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“குழந்தைத் தொழிலாளர் முறையை நிறுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் ஒன்றை நாங்கள் ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் முதல் இரு வாரங்களில் நடத்தியிருக்கிறோம். செப்டம்பர் முதல் இரு வாரங்களிலும் இந்தப் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்றது.”

சட்டவிரோதமாக செயல்படும் ஒரு சில மைக்கா சுரங்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே துவங்கியுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தகைய சுரங்கங்கள்தான் இந்தியாவின் வருடாந்திர மைக்கா உற்பத்தியில் 70 சதவீதத்தை உற்பத்தி செய்வதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் மாநிலத்திற்கு முக்கியமாக வருவாய் தேடித்தரும் என்பதோடு, இத்துறையை ஒழுங்குபடுத்தவும் அவை உதவி செய்யும். மேலும் சிறுவர்களைப் பயன்படுத்தாமல் பாதுகாப்பான வகையில் மைக்காவை வெட்டியெடுப்பதையும் அவை உறுதிப்படுத்தும்.

இப்பகுதியில் உள்ள மைக்காவின் இருப்பைக் கண்டறிய புவியியல் ஆய்வு ஒன்றும் துவங்கியுள்ளது. இந்த ஆய்வு முடியும்போது, மைக்கா உள்ள பகுதிகளை முறையாகப் பிரித்து, 2017ஆம் ஆண்டுத் துவக்கத்தில் சுரங்கங்களின்  குத்தகைகளுக்கான ஏலம் துவங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தகைய ஆய்வை மேற்கொள்ள தமது அதிகாரிகள் ஏற்கனவே கோடெர்மா, கிரிடிஹ் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றிருக்கிறார்கள் என்றும், வரும் வெள்ளிக்கிழமையன்று அவர்கள் தங்கள் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பார்கள் என்றும் ஜார்க்கண்ட் புவியியல் துறையின் இயக்குநர் குமாரி அஞ்சலி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் இதை அம்பலப்படுத்தியதானது இப்பகுதியில் செயல்பட்டு வரும் சட்டவிரோத மைக்கா சுரங்கத் தொழிலுக்கு ‘மிகப்பெரிய அடி’ என்று குறிப்பிட்ட ஜார்க்கண்ட் மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான குழுக்கள், அதைத்தொடர்ந்து அரசால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை வரவேற்கும் அதே நேரத்தில் இவ்விஷயத்தில் மேலும் அதிகமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்றும் குறிப்பிட்டன.

“தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனின் அறிக்கை பெரும் கலக்கத்தை   ஏற்படுத்தியது. திறந்த நிலையில் அமைந்துள்ள சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமான மைக்கா வர்த்தகத்தில்  ஈடுபடுவோர் மீது திடீர்ச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என ஜார்க்கண்டில் உள்ள பாஜ்பான் பச்சாவ் அந்தோலன் (குழந்தைப் பருவத்தைப் பாதுகாப்போம்) என்ற அமைப்பைச் சேர்ந்த ராஜ் பூஷண் குறிப்பிட்டார்.

“இது சட்டவிரோதமான மைக்கா வர்த்தகத்திற்கு மிகப்பெரிய அடியாகும். மைக்காதான் அவர்களது ஒரே வாழ்வாதாரம் என்ற வகையில், இந்த மக்கள் குழுக்களின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு இதர வகையான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அல்லது இந்தச் சுரங்கங்கள் சட்டபூர்வமானதாக மாற்றப்பட்டதும் அவற்றில் இவர்களுக்கு வேலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.”

(செய்தியாளர்கள்: டெல்லியிலிருந்து நிதா பல்லா புவனேஸ்வரிலிருந்து ஜடேந்தரா டாஷ்; எழுதியவர்: நிதா பல்லா. எடிட்டிங்: டிமோதி லார்ஜ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.