×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

கொல்கத்தா சிவப்பு விளக்கு பகுதியிலுள்ள பாலியல் தொழிலாளிகளுக்கு மாற்று வழி வழங்கும் ''சுதந்திர வர்த்தகம்''

Tuesday, 22 November 2016 13:51 GMT

Women work at the factory of Indian quilt and bag company Sari Bari, Kolkata, India, in this undated photo. (Courtesy of Sari Bari)

Image Caption and Rights Information

சென்னை, நவ. 22 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - பாலியல் தொழிலில் சிக்கியிருந்த பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை தந்து வரும் குவில்ட் என அழைக்கப்படும் மெல்லிய மெத்தை மற்றும் கைப்பைகளை தயாரிக்கும் இந்திய நிறுவனம் ஒன்று முன்னாள் பாலியல் தொழிலாளிகளை தனது இயக்குநர் குழுவில் இணைத்துக் கொண்டுள்ளது. இத்தகையதொரு நடவடிக்கை இத்தொழிலில் முதலாவதாகும் என அந்த நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவர் குறிப்பிட்டார்.

பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட பெண்களின் வாழ்க்கைக்கான மாற்று வழியை உருவாக்கும் வகையில் பத்தாண்டுகளுக்கு முன்பு சாரி பாரி என்ற நிறுவனத்தை ஏற்படுத்த உதவிய சாரா லான்ஸ், இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக ஆகும்படி அதில் பணிபுரியும் 19 பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கொல்கத்தாவின் சிவப்பு விளக்குப் பகுதியான சோனாகாச்சிக்கு அருகேயுள்ள இந்த நிறுவனம் பழைய புடவைகளைக் கொண்டு குவில்ட் என அழைக்கப்படும் மெல்லிய மெத்தைகள், கைப்பைகள் ஆகியவற்றை தயாரிப்பதற்கென 120 பெண்களை பணியில் அமர்த்தியுள்ளது. இதில் தயாராகும் ஒவ்வொரு பொருளும் அதைத் தயாரித்தவரின் பெயரைத் தாங்கியதாக இருக்கும்.

லாப நோக்கற்ற கண்டுபிடிப்பு மற்றும் மனிதநேய பணிகளுக்கான 2016ஆம் ஆண்டின் ஓபஸ் பரிசைப் பெற்ற லான்ஸ்இந்த நிறுவனம் அவர்களுடையதுஎன்று குறிப்பிட்டார்.

பத்தாண்டுகளாக செயல்பட்டு வருகின்ற, “சுதந்திர வர்த்தகம்என்று தன்னை கூறிக்கொள்ளும் இந்த நிறுவனம் பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வகையான முயற்சிகளில் ஒன்றாகும்.

An employee works at the factory of Indian quilt and bag company Sari Bari, Kolkata, India, in this undated photo. (Courtesy of Sari Bari)

“பாலியல் தொழிலிலிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பெண்கள் 18 வயதான பிறகோ அல்லது அவர்களின் வழக்குகள் முடிந்த பிறகோ அந்த இல்லங்களிலிருந்து வெளியேறுமாறு கூறப்படுகின்றனர். இத்தகைய பெண்களைக் கருத்தில் கொண்டே இந்த நிறுவனம் பற்றிய கருத்து உருவானது” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் தெரிவித்தார்.

“இத்தகைய கடத்தலுக்கு இரையாக அவர்களை ஆளாக்கிய அதே நிலைக்கு அவர்கள் திரும்பிச் சென்றனர்.”

துவக்கத்தில் சாரி பாரி நிறுவனத்தில் வேலை செய்வதற்கு இந்தப் பெண்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியிருந்தது.

“ஆனால் இப்போதோ எங்களுடன் இணைவதற்குத் தயாராக உள்ள பெண்களின் காத்திருப்பு பட்டியல் உள்ளது.” என்று குறிப்பிட்ட லான்ஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 150 பெண்களை வேலையில் அமர்த்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் 5,466 ஆக இருந்த ஆட்கடத்தல்  குறித்த வழக்குகள் கடந்த ஆண்டில் 6,877 ஆக அதிகரித்தது என்றும், இது 25 சதவீதத்திற்கும்  மேற்பட்ட உயர்வு என்றும் தேசிய குற்றங்கள் குறித்த பதிவேடுகள் கழகம் கடந்த செப்டம்பரில் தெரிவித்தது.

அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், 2015ஆம் ஆண்டில் பாலியல் தொழிலில் விற்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை 53 சதவீதம் அதிகரித்துள்ளது.  இது குறித்து 2015ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 82 சதவீதம் கொல்கத்தா நகரத்தை உள்ளடக்கிய மேற்குவங்க மாநிலத்திலிருந்தே ஆகும்.

 

An employee works at the factory of Indian quilt and bag company Sari Bari, Kolkata, India, in this undated photo. (Courtesy of Sari Bari)

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற சாரி பாரியின் இயக்குநர்கள் கூட்டத்தில் முன்னாள் பாலியல் தொழிலாளிகளான சாயா, சுப்ரியா ஆகிய இருவரும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தங்களை அந்தப் பெயரைக் கொண்டே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினர்.

இத்தகைய ஆட்கடத்தலில் இருந்து மீண்டவர்களுக்கு பாலியல் தொழிலுக்கு பதிலாக மாற்று வருமானத்திற்கான ஆதாரத்தை வழங்குவதன் மூலமே அவர்கள் மீண்டும் ஆட்கடத்தலுக்கு இரையாவதிலிருந்து தடுக்க முடியும் என்று பிரச்சாரகர்கள் கூறினர்.

தங்களின் புதிய திறன்கள் குறித்து பெருமைப்படுவதை ஊக்குவிப்பதும் கூட இவர்கள் தங்களது மோசமான அனுபவத்திலிருந்து மீள்வதற்கு மிக முக்கியமானதாகும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

“இத்தகைய பெருமித உணர்வுதான் மிகவும் முக்கியமானது” என ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் குறித்து பல நூல்களை எழுதியுள்ளவரும் மேற்கு வங்க சட்ட அறிவியல் தேசிய பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியருமான சர்ஃபராஸ் அகமத் கான் குறிப்பிட்டார்.

பாலியல் தொழிலிலிருந்து மீண்டவர்கள் “ஏதாவதொரு வேலையை செய்வது” என்பது மிகவும் கடினமாகும் என்றும் கான் தெரிவித்தார்.

“பொருளாதார ஸ்திரத் தன்மை மட்டுமின்றி, மதிப்பானதொரு வாழ்க்கையையும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இத்தகைய வாய்ப்புகள் அவர்களுக்கு அதைத்தான் தருகின்றன” என்றார் அவர்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: அலிசா டாங் மற்றும் கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->