×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

உட்பார்வை – அடி-உதையிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கப்பட்ட போதிலும், இந்தியாவின் ஆயிரக்கணக்கான அடிமைகளுக்கு நீதி என்பது எட்டாத ஒன்றாகவே நீடிக்கிறது

by நீதா பல்லா | @nitabhalla | Thomson Reuters Foundation
Thursday, 26 January 2017 14:41 GMT

Dayalu Nial, 20, stands outside a conference hall in central New Delhi on Jan 21, 2017. Nial, a former bonded labour, had his hand chopped off by human traffickers is one the few victims to get justice despite a four-decade-old law abolishing slavery in India. NITA BHALLA/THOMSON REUTERS FOUNDATION

Image Caption and Rights Information

புது டெல்லி, ஜன. 26 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தன்னைக் கடத்திச் சென்று, துன்புறுத்தி, கையை வெட்டித் தள்ளி, அப்படியே உயிர் போகட்டும் என்று விட்டுச் சென்ற 8 பேருக்கு இந்தியாவின் நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை  விதித்ததைத் தொடர்ந்து தயாளு நியாலின் துயரம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

காவல்துறையிலிருந்து வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், செயல்பாட்டாளர்கள் எனப் பலரையும் அணுகி வேண்டிக்கொண்ட பிறகு இத்தகையதொரு தீர்ப்பைப் பெற அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆனது. இருந்தாலும் அவர் இப்போது உணர்கின்ற மன அமைதிக்கு அது பொருத்தமானதுதான் என 20 வயதே ஆன அந்த முன்னாள் அடிமைத் தொழிலாளி கூறினார்.

 “அவர்கள் செய்த செயலுக்காக எனக்குக் கிடைத்த நீதி உண்மையிலேயே நிம்மதி தருவதாக இருந்தது. அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றோ அல்லது எனக்கு இழப்பீடு கிடைக்கும் என்றோ நான் நினைக்கவே இல்லை” என ஒரு பழுப்பு நிற தோல் அங்கியை அணிந்தபடி, மெதுவாகப் பேசிய நியால் கூறினார்.

“அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட மற்றவர்களை விட நான் அதிர்ஷ்டசாலி என்றே நான் நினைக்கிறேன். ஊடகங்களும் எனக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த அதுவே அதிகாரிகளுக்கு நெருக்கடியைத் தந்தது”.

கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடங்கள், செங்கல் சூளைகள், விவசாய நிலங்கள், இதர பகுதிகளில் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் அதிகாரபூர்வமான அங்கீகாரத்திற்காகப் போராடி வருகின்ற நிலையில்  இத்தகைய நீதியைப் பெறுவதில் நியால் பெற்ற வெற்றி என்பது மிகவும் விதிவிலக்கான ஒன்றுதானே தவிர இந்தியாவின் விதிகள் அப்படிப்பட்டவை என்று எளிதாகக் கூறிவிட முடியாது.

2016ஆம் ஆண்டின் உலகளாவிய அடிமைத்தனத்திற்கான அட்டவணைப்படி உலகத்திலேயே அதிகமான அடிமைகளைக் கொண்டதாக இருந்தபோதிலும், இந்தியாவின் நாற்பது ஆண்டுகாலப் பழமையான தொழிலாளர் சட்டம் மிக மோசமாக அமல்படுத்தப்படுவதும், போதிய வசதிகளற்ற காவல்துறை, நீதித்துறை ஆகியவை என்பது இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் மிகக் குறைவானவர்களுக்கே ஆதரவு அளிக்கப்படுகிறது; இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களில் அதைவிட மிகக் குறைவானவர்களே தண்டிக்கப்படுகிறார்கள் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 “ தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்துவதற்கு எதிராக நம்மிடம் ஒரு சட்டம் இருக்கிறது. என்றாலும் பெரும்பாலான அதிகாரிகளுக்கு அத்தகையதொரு சட்டம் இருப்பதே தெரியாது” என இத்தகைய சட்டமீறல்களை ஆராய்வதற்கென அரசினால் உருவாக்கப்பட்ட சுயேச்சையான அமைப்பான தேசிய மனித உரிமைகள் கமிஷனின் முன்னாள் உறுப்பினராக அனில் குமார் பராஷார் குறிப்பிட்டார்.

“பல நேரங்களில் ஒரு வழக்கை கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்தது  என்பதையே அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றனர்.  இதற்கான இழப்பீடு பெறுவது என்பதும் கூட பெரும் சவாலாகவே உள்ளது. எனவே உள்ளூர் அளவில் சட்டங்கள், கொள்கைகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை  உருவாக்க உதவி செய்து இத்தகைய வழக்குகளை முறையாக விசாரிக்க மேலும் அதிகமான ஆட்கள் தேசிய மனித உரிமைகள் கமிஷனுக்குத் தேவைப்படுகிறது.”

பாலியல் தொழில் மையங்களில், செங்கல் சூளைகளில் உள்ள அடிமைகள்

கொத்தடிமைத் தனம் அல்லது கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுபவர்கள் என்பது வன்முறையைப் பயன்படுத்தியோ அல்லது மிரட்டியோ அல்லது இவற்றை விட மேலும் மறைமுகமாக  திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன் என்பது போன்றோ ஒன்றைக் காட்டி ஒரு நபரை வேலை செய்ய வைப்பது உலகத்தில் உள்ள அடிமைத் தனத்தின் மிகப் புராதனமான வடிவங்களில் ஒன்றாகும்.

ஆஸ்திரேலியாவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷன் வெளியிட்டுள்ள உலகளாவிய அடிமைத்தனம் குறித்த சமீபத்திய அட்டவணையின்படி உலகம் முழுவதிலும் 4 கோடியோ 60 லட்சம் பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதில் 1 கோடியே 80 லட்சம் பேருக்கும் மேலானவர்கள் இந்தியாவில் உள்ளனர்.

இந்த கணக்கை இந்திய அரசினால் ஒப்பீடு செய்ய முடியாது என்ற போதிலும், 2030ஆம் ஆண்டிற்குள் 1 கோடியே 80 லட்சம் பேருக்கும் மேற்பட்டவர்களை கண்டறிந்து, விடுவித்து, அவர்களுக்கு உதவுவதற்கான திட்டங்களை தொழிலாளர் நலத்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது.

இவர்களில் பலரும் நல்ல வேலை, முன்பணம் போன்ற வாக்குறுதிகளால் ஆட்கடத்தல்காரர்களால் கவர்ந்திழுக்கப்பட்டு, பின்னர் வயல்களிலும், செங்கல் சூளைகளிலும் வேலைசெய்ய கட்டாயப்படும் நிலைக்கு ஆளாகின்றவர்களாக, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக பாலியல் தொழில் மையங்களில் அடைக்கப்பட்டவர்களாகவோ அல்லது வீடுகளில் வேலை செய்வதற்காக அடைக்கப்பட்டவர்களாகவோ உள்ள கிராமத்தவர்கள் ஆவர்.

வேறுவகையான அடிமைத்தனம் என்பது தலைமுறைகளுக்கு இடையேயான கொத்தடிமைத்தனம், கட்டாயமாக வேலை செய்ய வேண்டியுள்ள குழந்தைத் தொழிலாளிகள், பிச்சை எடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள், கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்படுபவர்கள், அதைப்போன்றே ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக் குழுக்களில் கட்டாயமாக சேர்த்துக் கொள்ளப்படுபவர்கள் என்பதாக அமைகிறது.

ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான கொத்தடிமைத் தொழிலாளர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.  எனினும் அவர்களது வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை; அல்லது தொடர்ந்து விசாரிக்கப்படாமல் இருப்பவை. இதன் விளைவாக நிதியுதவு, நீதி ஆகியவற்றைப் பெறவோ அல்லது தங்களின் வாழ்க்கையை மீண்டும் உருவாக்கிக் கொள்ளவோ முடியாத ஒன்றாகவும் அவை தொடர்ந்து நீடிக்கின்றன.

“ஒவ்வோர் ஆண்டும் சுமார் 500 பேரை நாங்கள் விடுவிக்கிறோம்.  இதில் சுமார் 10 சதவீதம் பேர் மட்டுமே இழப்பீடு பெறுகின்றனர். இது தொடர்பாக ஒரே ஒருவர் கூட தண்டனை பெறவில்லை” என ஆக்‌ஷன் எய்ட் இந்தியாவைச் சேர்ந்த சந்தன் குமார் குறிப்பிட்டார்.

மிகக் குறைந்த  தண்டனை விகிதம்

இந்தியத் தலைநகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு பழைய மாநாட்டுக் கூடத்தில் நடுங்க வைக்கும் குளிர் காலத்தின் ஒரு காலை நேரத்தில் கம்பளிக் குல்லாயும் கழுத்துப் பட்டையுடன் கூடிய மேலாடையும் அணிந்தபடி சுற்றி அமர்ந்திருந்த சுமார் அரை டஜன் முன்னாள் கொத்தடிமைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றியும், அடிமைப்பட்டிருந்தது பற்றியுமான விவரங்களை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

இந்தியாவில் அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டுவதற்காகச் செயல்பட்டு வரும் அறக்கட்டளைகள், செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அமைப்பான கொத்தடிமைத் தனத்தை ஒழிப்பதற்கான தேசிய பிரச்சாரக் குழுவின்  ஒரு கூட்டத்தில் பங்கேற்கவே  இந்த இளம் வயதினர் கூடியிருந்தனர்.

பெரும்பாலும் தங்கள் 20 களிலும் 30 களிலும் இருந்த இந்த நபர்கள் தாங்கள் தாக்கப்பட்டது குறித்தும், கட்டுமானப் பகுதிகளில் அறைகளில்,  அல்லது பருத்திப் பண்ணைகளில் மாட்டுக் கொட்டடிகளில் அடைக்கப்பட்டிருந்தது பற்றியும் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

“நிலப்பிரபு எனது குடும்பத்திற்கு ரூ. 10,000 கடனாகக் கொடுத்திருந்தார். அதற்குப் பதிலாக அவரது பண்ணையில் வேலை செய்வதற்காக நான் போனேன்” என இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள மாநிலமான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது பரத் கூறினார்.

“ஆனால் அவர் என்னை இரண்டு வருடங்கள் அடைத்து வைத்திருந்ததோடு, தினமும் 15 மணிநேரம் வேலையும் செய்யுமாறு செய்தார். 2015 ஜனவரியில்தான் நான் செயல்பாட்டாளர்களால் விடுவிக்கப்பட்டேன். காவல்துறையும் வழக்கு பதிவு செய்தது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.”

வடக்கில் உத்திரப்பிரதேசத்திலிருந்தும், கிழக்கில் ஒடிசாவிலிருந்தும் வந்திருந்த மற்றவர்கள் இழப்பீட்டிற்காக தாங்கள் காத்துக் கொண்டிருப்பதைப் பற்றியும், தங்களை அடைத்து வைத்தவர்கள் சிறைக்குப் போவதைப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்து கொண்டிருப்பதையும் தெரிவித்தனர்.

“என்னை விடுவித்தது பற்றிய அரசாங்கத்தின் விடுதலைச் சான்றிதழ் என்னிடம் உள்ளது. இழப்பீடு பெறுவதற்கு நான் தகுதியானவன். என்றாலும் இதுவரை நான் எதையும் பெறவில்லை” என தில்லிக்கு அருகேயுள்ள நொய்தாவில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கட்டுமானப் பகுதி ஒன்றில்  அடைக்கப்பட்டு வைத்திருந்த 26 வயது புஷுப் தெரிவித்தார்.

 “என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய கட்டுமான ஒப்பந்தக்காரர் ஓடிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அவர் சிறைக்குச் செல்வார் என்றும் நான் நம்பவில்லை”.

இதுபோன்ற வழக்குகள் அதிகமாக இருந்தபோதிலும், 2015ஆம் ஆண்டில் கொத்தடிமைகள் குறித்து 92 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. இதில் ஒரே ஒரு வழக்கில் மட்டுமே நான்கு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்றனர் என தேசிய குற்ற பதிவேடுகள் கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கொத்தடிமைகள் குறித்த சட்டம், அவர்களின் மறுவாழ்வுக்கான கொள்கைகள் ஆகியவை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை, அதைப் போலவே மிகக்  குறைந்த வசதிகள், போதிய நிதியற்ற நிலை ஆகியவற்றைக் கொண்ட காவல்துறை மற்றும் நீதிமன்ற அமைப்பு ஆகியவற்றின் விளைவாகவே இது போன்ற விவரங்கள் வெளியாவது, வழக்கு தொடுப்பது, தண்டனை தருவது ஆகியவை மிகக் குறைந்த விகிதத்திலேயே உள்ளன என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

காவல்துறைக்கு இதுகுறித்து போதுமான பயிற்சி இல்லை என்பதோடு, இதில் பாதிக்கப்பட்டவர்கள் வறுமையில் உழலுகின்றவர்களாக, படிப்பறிவில்லாதவர்களாக உள்ள நிலையில் வழக்கு பதிவு செய்யாமல் தடுக்கப்படுகின்றனர். ரூ. 3 லட்சம் வரை இழப்பீடு தரவேண்டிய நிலையில் உள்ளூர் அதிகாரிகளும் அதைத் தருவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர்.

கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டாலும் கூட, இதில் பாதிக்கப்பட்டவர்கள் தீர்ப்பைப் பெறுவதற்காக வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவின் 130 கோடி மக்களுக்கென மிகக் குறைவான எண்ணிக்கையில் நீதிமன்றங்கலும், நீதிபதிகளும் அரசு வழக்கறிஞர்களும் உள்ள நிலையில், பல லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.

காவல் துறையும், அரசு வழக்கறிஞர்களும் பலவீனமான வகையில் விசாரணைகளை மேற்கொள்வதாலும்,  இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் போதுமான பாதுகாப்பு இல்லாத நிலையில் தங்கள் வாக்குமூலங்களை மாற்றுமாறு அல்லது வழக்கு நடைபெறும்போது புகார்களை விலக்கிக் கொள்ளுமாறு மிரட்டலுக்கு ஆளாவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில் இத்தகைய வழக்குகளில் தண்டனை விகிதம் என்பது மிகக் குறைவாகவே உள்ளது என்றும் செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். 

சட்டங்களை தெரிந்து கொள்; ஊடகத்தையும் பயன்படுத்து

தங்களுக்கான நீதியையும் இழப்பீட்டையும் பெறுவதற்காக இந்த முன்னாள் கொத்தடிமைகள் எதிர் கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும் ஒடிசாவில் ஒரு நீதிமன்றம் நியால் வழக்கில் வழங்கிய ஒரு தீர்ப்பைச் சுட்டிக் காட்டி நம்பிக்கை கொள்வதற்குக் காரணம் உள்ளது என மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

2013ஆம் ஆண்டு டிசம்பரில் வேலை செய்வதற்காக ஆட்கடத்தல்காரர் ஒருவரால் பணம் தரப்பட்ட 12 தொழிலாளர்களில் ஒருவர்தான் நியால். ஆனால் அவர் கொத்தடிமையில் சிக்கிக் கொண்டார்.

ஒப்புக் கொண்டதற்கு மாறாக தங்களை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர் என்பதைத் தெரிந்து கொண்டதும்  இந்தத் தொழிலாளர்கள் தப்பிக்க முயன்றனர். ஆனால் நியாலும் நிலாம்பர் தங்டாமாஜி என்ற மற்றொருவரும் ஆட்கடத்தல்காரர்களால்  பிடிக்கப்பட்டு அவர்கள் இருவரின் வலது கைகளும் துண்டிக்கப்பட்டன.

துன்புறுத்தல், அடைத்து வைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த வழக்கில் போராடுவதற்காக கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த  சட்டத்தை தான் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது என நாடு முழுவதும் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக மாறிய இந்த வழக்கில் பங்கேற்ற அரசு வழக்கறிஞரான திரேந்திர நாத் பத்ரா குறிப்பிட்டார்.

“இந்த வழக்கு விசாரணைக்கு மூன்று வருடங்கள் ஆயிற்று. அதுவே மிகவும் விரைவானது என்றுதான் கூற வேண்டும். எட்டு பேருக்கு மிகவும் கடுமையான தண்டனை, அதாவது ஆயுள் தண்டனை கிடைத்தது” என அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கிற்குக் கிடைத்த ஊடக விளம்பரத்தின் காரணமாக, 2014ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றம் இதில் தலையிட்டு இந்த ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிரான புகாரை மிக விரைவாக விசாரிக்கும்படியும், இதில் பாதிக்கப்பட்ட இருவருக்கும் உதவியளிக்குமாறும் ஒடிசா மாநில அரசைக் கேட்டுக் கொண்டது.

இவர்கள் இருவருக்கும் தலா ரூ. 8 லட்சம் இழப்பீடு அரசின் தரப்பிலிருந்து வழங்கப்பட்டது. என்றாலும் நியால் மட்டுமே தன்னைத் தாக்கியவர்கள் தண்டிக்கப்பட்டதைக் காண முடிந்தது.

மற்றொருவரான 35 வயதுடைய தங்டாமாஜி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக, அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி உயிர் நீத்தார்.

“அவரது மறைவு குறித்து தெரிந்தபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன்.” என்றார் நியால். “இந்தத் தீர்ப்பைக்  கேட்பதற்கு அவர் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும். இப்போது எனக்குக் கிடைத்துள்ள மன அமைதியை ஒருவேளை அவரும் உணர்ந்திருக்கலாம்.”

(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->