பாலியல் அடிமைத்தனத்திலிருந்து 12,000 பெண்களை விடுவித்த 67 வயது நேபாளிப் பெண்மணிக்கு இந்தியா விருது

Friday, 27 January 2017 12:33 GMT

A girl drapes a shawl over herself as she stands outside her house on the bank of Chepay River at Sapay, Achham 900 km from Kathmandu in this archive picture from 2014. REUTERS/Navesh Chitrakar

Image Caption and Rights Information

"The pain of victims has motivated me to continue my work"

   காத்மாண்டு/புது டெல்லி, ஜன. 27 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - பாலியல் அடிமைத்தனத்திலிருந்து ஆயிரக்கணக்கான பெண்களை விடுவித்ததற்காக இந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய விருதுகளில் ஒன்றின் மூலம் கவுரவிக்கப்பட்ட 67 வயது நேபாளி பெண்மணி இதில் பாதிக்கப்பட்டவர்களின் தாங்கமுடியாத வலிதான் இத்தகைய ஆட்கடத்தலை எதிர்த்துப்  போராடத் தன்னைத் தூண்டியது என்று வெள்ளிக்கிழமையன்று கூறினார்.

மைத்தி நேபாள் என்ற ஆட்கடத்தலுக்கு எதிரான  அறக்கட்டளையின் நிறுவனரான அனுராதா கொய்ரலாவிற்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள விழா ஒன்றில் இந்திய குடியரசுத் தலைவர் இந்த விருதை அவருக்கு வழங்குவார் என அரசின் அறிவிப்பு இந்த வாரம் தெரிவித்தது.

இந்த மதிப்பிற்குரிய பத்ம விருதுகளைப் பெறவுள்ள 89 பேரின் பெயர்களையும் சாதனைகளையும் சித்தரித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இணைய தளம்  “பாலியல் நோக்கங்களுக்காகக் கடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட 12, 000 பெண்களை விடுவித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்ததோடு, 45,000க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு கடத்திச் செல்லப்படுவதிலிருந்தும் கொய்ரலா தடுத்து நிறுத்தினார்” என குறிப்பிட்டிருந்தது.

ஆசிரியராக இருந்து செயல்பாட்டாளராக மாறிய, மெலிந்தும், குள்ளமாகவும் இருந்த இந்தப் பெண்மணி,  தனக்கு அளிக்கப்படவுள்ள இந்த விருது பாலியல் தொழிலில் பெண்கள் விற்கப்படுவதைத் தடுக்க மேலும் கடுமையாக செயல்பட தனக்கு ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டார்.

“இதில் பாதிக்கப்பட்டவர்களின் வலிதான் என் வேலையை தொடர்ந்து செய்வதற்கு உத்வேகம் அளித்து வந்தது” என கொய்ரலா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தொலைபேசியின் மூலம் தெரிவித்தார்.

 “அவர்களின் வலியை – அதாவது அவர்களின் மனவலியையும் உடல் வலியையும்- கண்டபோது நான் மிகவும் கலங்கிப் போனேன். என்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்ளவே முடியவில்லை. இதுவே இந்தக் குற்றத்திற்கு எதிராகப் போராடவும், அதை முற்றிலுமாக அழித்தொழிக்கவும் எனக்கு வலுவைத் தந்தது.”

ஐ.நா. சபையின் போதை மருந்துகள், குற்றங்கள் ஆகியவற்றுக்கான அலுவலகத்தின் தகவலின்படி உலகத்திலேயே ஆட்கடத்தல் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக தெற்காசிய பகுதி உள்ளது.

ஆட்கடத்தல் கும்பல்களால் நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளிலில் உள்ள பெரும்பாலும் ஏழ்மை நிறைந்த கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்டு கொத்தடிமைகளாக விற்கப்படுகின்றனர் அல்லது இத்தகையவர்களை மிக மோசமாக நடத்தும்  முதலாளிகளிடம் வேலை செய்ய வாடகைக்கு விடப்படுகின்றனர் என ஆட்கடத்தலுக்கு எதிரான செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏராளமான பெண்களும் சிறுமிகளும் பாலியல் மையங்களுக்கு விற்கப்படுகின்றனர். மற்றவர்கள் வீட்டுப் பணியாளர்களாகவோ அல்லது செங்கல் சூளைகள், சாலையோர உணவு விடுதிகள் அல்லது சிறு நெசவாலைகள், கைவேலை செய்யும் தொழிலகங்கள் ஆகியவற்றில் வேலை செய்யுமாறு விடப்படுகின்றனர்.

ஆஸ்திரேலியாவை தலைமையகமாகக் கொண்ட வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷன் தயாரித்துள்ள 2016ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அடிமைத்தனம் குறித்த அட்டவணையின்படி உலகில் உள்ள மொத்தம் 4 கோடியே 60 லட்சம் அடிமைகளில் 40 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர்.

20 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றி வந்த கொய்ரலா 1993ஆம் ஆண்டில் வேலையை விட்டுவிட்டு மைத்தி என்ற இந்த அறக்கட்டளையை நிறுவினார். நேபாளி மொழியில் “தாய்வீடு” என்று பொருள்படும் இந்த அறக்கட்டளை பாலியல் தொழிலுக்காக கடத்தி வரப்பட்டு விடுவிக்கப்பட்ட  பெண்களுக்கு உதவி செய்வதாகும். பொதுவாக இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களது குடும்பத்தினராலும், இனத்தவராலும் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.

கடந்த 24 ஆண்டுகளில் காத்மாண்டு நகரில் ஒரு தங்குமிடம், நேபாள-இந்தியா எல்லைப் பகுதியை ஒட்டி பதினோரு தற்காலிக தங்குமிடங்கள் ஆகியவற்றை உருவாக்கியுள்ள மைத்தி அமைப்பு இவ்வாறு ஆட்கடத்தலுக்கு ஆட்படும் அபாயம் அதிகமுள்ள சிறுமிகளுக்கென மூன்று ஆட்கடத்தல் தடுப்பு இல்லங்களையும் நடத்தி வருகிறது. இவற்றில் தையல், மெழுகு வர்த்தி செய்வது ஆகியவற்றில் பயிற்சி அளித்து ஆலோசனைகளை வழங்குவதோடு, இரண்டு மருத்துவமனைகளையும் நடத்தி வருகிறது. மேலும் ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வியளிக்கும் ஒரு பள்ளியையும் அது நடத்தி வருகிறது.

ஆட்கடத்தல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கான இயக்கங்களை இந்த அமைப்பு நடத்தி வருவதோடு, இவ்வாறு ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்டரீதியான உதவியையும் வழங்கி வருகிறது. இத்தகைய பெண்களை விடுவிப்பது, இதில் ஈடுபடுவோரை பிடிப்பது ஆகியவற்றிலும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுடனும் அது இணைந்து செயல்பட்டு வருகிறது.

நேபாளி மொழியில் தேஜா (அக்கா) என்று அன்புடன் அழைக்கப்படும் கொய்ரலா, அவரது இத்தகைய பணிக்காக ஐக்கிய நாடுகள் உள்ளிட்டு உலகம் முழுவதிலுமிருந்தும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். 2010ஆம் ஆண்டில் சிஎன்என் ஹீரோக்கள் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

“குடும்பங்கள் தங்கள் மகன்களையும் மகள்களையும் சமமாக  நடத்தும் வரையில் இத்தகைய ஆட்கடத்தலையும் அடிமைத்தனத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவது மிகவும் கடினம்” என அவர் குறிப்பிட்டார்.

சமூக சேவை, பொதுச் சேவைகள் ஆகியவற்றிலிருந்து துவங்கி மருத்துவம் – இலக்கியம் வரை பல்வேறு துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகளை அங்கீகரிக்கும்  வகையிலேயே பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது பெற்றவர்கள் பட்டியல் இந்திய குடியரசு தினத்திற்கு முந்தைய நாளான ஜனவரி 25 அன்று அறிவிக்கப்படுகிறது.

(செய்தியாளர்கள்:கோபால் சர்மா @imgsharma மற்றும் நிதா பல்லா @nitabhalla; எழுதியவர்: நிதா பல்லா; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.) 

Our Standards: The Thomson Reuters Trust Principles.