×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

தொழிலாளர் நலன் சீர்திருத்தங்கள் இருந்த போதிலும் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் கடாரிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்படுகிறது

Wednesday, 29 March 2017 11:51 GMT

Migrant labourers work at a construction site at the Aspire Zone in Doha, Qatar, March 26, 2016. REUTERS/Naseem Zeitoon

Image Caption and Rights Information

Qatar has refused to allow scores of migrants from countries including India, Nepal and Bangladesh to return home, trade unions say.

- ரெஜிமென் குட்டப்பன்  

மஸ்கட், மார்ச் 29 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – தொழிலாளர்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான புதிய தொழிலாளர் நல சீர்திருத்தங்களை மீறிய வகையில் இந்தியா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளிகள் பலரும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப கடார் அனுமதி மறுக்கிறது என செயல்பாட்டாளர்களும், தொழிற்சங்கங்களும் புதனன்று தெரிவித்தன.

இவ்வாறு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு வேலையில் சேருவதையும் எண்ணெய் வளமிக்க அந்த வளைகுடா நாட்டை விட்டு வெளியேறுவதையும் எளிதாக்கும் சட்டம் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்தது. இந்தத் தொழிலாளர்களில் பலரும் 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பைக்கு முன்பாக கால்பந்து மைதானங்களை உருவாக்குவதற்கென வேலைக்கு நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்.

வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேறு வேலைக்கு மாறவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ தங்கள் முதலாளியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையை விதிப்பது, சுரண்டலுக்கு வழிவகுப்பது என்று உரிமைகளுக்கான குழுக்கள் கூறுகின்றன. ‘கஃபாலா’ பொறுப்பேற்பு முறை என்பதற்குப் பதிலாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தை கடார் அரசு நியாயப்படுத்தியது.

இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இப்போது அரசிடமிருந்து அனுமதி பெறவேண்டியுள்ளது என தொழிற்சங்கவாதிகளும் செயல்பாட்டாளர்களும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இடம்பெயர் தொழிலாளர்களால் கோரப்பட்ட  சுமார் 760 அனுமதி கோரிக்கைகளில் நாலில் ஒரு பங்கு மனுக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ல் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு மறுக்கப்பட்டுள்ளன.

 “கடாரின் மிக மோசமான வெளியேறுவதற்கான அனுமதி முறை இன்றும் கூட நடைமுறையில் இருந்து வருகிறது” என இண்டர்நேஷனல் ட்ரேட் யூனியன் கான்ஃபெடரேஷனின் பொதுச் செயலாளரான ஷாரன் பரோ கூறினார். “வெளியேறுவதற்கான அனுமதி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது என சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் கடார் கூறியுள்ளது வெறும் பொய்தான்.”

இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்க கடார் நாட்டு அதிகாரிகள் எவரும் கிடைக்கவில்லை. எனினும் இந்த மாதத் துவக்கத்தில் அரசு நடத்தி வரும்  கடார் செய்தி முகமை தெரிவித்த புள்ளிவிவரங்களின்படி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வெளியேறுவதற்கான அனுமதி குறித்த குறைகளுக்கான குழு பிப்ரவரி 15 வரை 213 கோரிக்கை மனுக்களை நிராகரித்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்தக் கோரிக்கைகள் மறுக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த சர்வதேச தொழிலாளர் நிறுவனம் தோஹாவிற்கு வரும் நவம்பர் வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. இல்லையெனில் உலக்க கோப்பைக்கான நிகழ்வை நடத்த இடம்பெயர்ந்த தொழிலாளர்களை கட்டாயமாக வேலை செய்ய நிர்ப்பந்தப்படுத்துவது குறித்த விசாரணை ஒன்றை அது சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்தச் சீர்திருத்தமானது போதுமான அளவிற்கு முன்னெடுத்துச் செல்லப்படவில்லை எனக் குறிப்பிடும் பிரச்சாரகர்கள், ஐந்து வருடம் வரையிலும் இருக்கக் கூடிய தங்கள் ஒப்பந்தக் காலத்தில் மாற்று வேலையை தேடுவதற்கு முதலாளியின் ஒப்புதலை பெறவேண்டிய அவசியம் தொழிலாளர்களுக்கு இருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

இத்தகைய ஒப்புதல் இல்லாமல் தொழிலாளர்கள் தங்கள் வேலையை மாற்றிக் கொண்டால், ‘தலைமறைவாகி’ விட்டதான குற்றச்சாட்டுகளை அவர்கள் சந்திக்க வேண்டியிருப்பதோடு, கைது செய்யப்படவும், அடைக்கப்படவும், நாட்டிலிருந்து வெளியேற்றப்படவும் வழிவகுக்கிறது என தொழிலாளர்களின் உரிமைகளுக்கான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“இந்த முறை இன்னும் தொடர்ந்து நீடிப்பதாகவே தோன்றுகிறது. தொழிலாளர்களை தொடர்ந்து சுரண்டவும், கட்டாய வேலை உள்ளிட்ட அவர்களின் உரிமைகள் மீறப்படுவதற்கும் வழியேற்படுத்துகிறது” என சாலிடாரிட்டி செண்டரின் ஃப்ரான்செஸ்கா ரிக்கியர்டொன் கூறினார்.

செய்தியாளர்: ரெஜிமென் குட்டப்பன்; எழுதியவர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.) 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->