நேர்காணல்: நேபாள பெண்களை வளைகுடா நாடுகளுக்குக் கடத்திச் செல்வதில் நேபாள குடியேற்ற அதிகாரிகளும் உடந்தையாக இருக்கக் கூடும்

by Gopal Sharma | @imgsharma | Thomson Reuters Foundation
Friday, 31 March 2017 15:19 GMT

Tourists gather inside Nepal's Tribhuvan International Airport a day after an earthquake, in Kathmandu, Nepal in this 2015 archive photo. REUTERS/Athit Perawongmetha

Image Caption and Rights Information

- கோபால் சர்மா

காத்மாண்டு, மார்ச் 31 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – ஆயிரக்கணக்கான ஏழ்மையான, படிப்பறிவில்லாத பெண்களை வளைகுடா நாடுகளில் சட்டவிரோதமாக வேலை செய்வதற்காகக் கடத்திச் செல்வதற்கும் அவர்கள் அங்கு சுரண்டலுக்கு ஆளாவதோடு, மோசமான முறையில் நடத்தப்படுவதற்கும் ஆட்கடத்தல்காரர்களுக்கு நேபாள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வந்துள்ளனர் என நாடாளுமன்றக் குழுவின் தலைவர் வெள்ளிக்கிழமையன்று கூறினார்.

இமாலய மலைப்பகுதியில் உள்ள வறுமைநிறைந்த இந்த நாட்டின் கிட்டத்தட்ட 2 கோடியே 90 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் மத்தியக் கிழக்கு நாடுகளிலும், மலேசியா, தென் கொரியா போன்ற நாடுகளில்  குடியேறும் தொழிலாளிகளாகவும், நேபாள நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் கால் பகுதி அளவிற்கு பணத்தை தம் நாட்டிற்கு அனுப்பி வைப்பவர்களாகவும் உள்ளனர்.

வீட்டு வேலை என்ற வேலைக்காக ஆசை காட்டப்பட்டு ஆட்கடத்தல்காரர்களால் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு குறைந்த ஊதியத்திற்கு நீண்ட நேரம் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுவதோடு, அவர்களை வேலைக்கு வைப்பவர்களால் உடல்ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் கொடுமைக்கு ஆளாகின்றனர் என்ற செய்திகள் வருவதால் வளைகுடா நாடுகளுக்குப் பயணிக்கும் பெண்கள் குறித்து கடுமையான சோதனை நடவடிக்கைகளை நேபாளம் மேற்கொண்டு வருகின்றது.

இப்போதும் கூட பெண்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்றும் சர்வதேச விமான நிலையத்தின் வழியாகவே அவர்கள் கடத்தப்படுகின்றனர் என்றும் தாங்கள் கண்டறிந்ததாக மத்திய கிழக்கு நாடுகளில் குடியேறும் நேபாள நாட்டவர் கொடுமைக்கு ஆளாவதாக வரும் தகவல்கள் மீது விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் தலைவரான நேபாள நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு ஷா கூறினார்.

 “நாங்கள் சந்தித்த பெண்களில் பாதி பேர் அதிகாரிகளால் கேள்விகேட்கப்படாமல் காத்மாண்டு விமானநிலையத்திலிருந்து தாங்கள் புறப்பட்டதாகவும், மீதி பாதிப்பேர் இந்தியா, வங்கதேசம், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளின் வழியாக பயணம் செய்ததாகவும் தெரிவித்தனர்” என ஷா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

 “குடியேற்ற அதிகாரிகளுக்குத் தெரியாமல் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் விமான நிலையத்தின் வழியாகச் செல்ல முடியாது. அரசு இது பற்றி விசாரணை நடத்த வேண்டும். நமது பெண்கள் அங்கு மிக மோசமான நிலைமைகளில் வாழ்ந்து வருகின்றனர்.”

நாடாளுமன்றக் குழுவிற்குத் தலைமை வகித்து சவூதி அரேபியா, குவைத், கடார், ஐக்கிய அரபுக் குடியரசுகள் ஆகிய நாடுகளுக்கு பயணம் சென்று வந்த பிறகு ஷா இது பற்றிப் பேசினார். தங்கள் முதலாளிகளிடமிருந்து தப்பித்த பிறகு போக்கிடமின்றி இருந்த கிட்டத்தட்ட 500 நேபாள தொழிலாளர்களை இந்தக் குழு  சந்தித்துப் பேசியது. இவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல வேலை வாங்கித் தருவதாக இந்தப் பெண்களுக்கு ஆசை காட்டி வேலைக்கான நுழைவுச் சீட்டிற்குப் பதிலாக விருந்தினருக்கான நுழைவுச்சீட்டின் அடிப்படையில் ஆட்கடத்தல்காரர்கள் இந்தப் பெண்களை அழைத்துச் சென்று, அவர்கள் ஒவ்வொருவரையும் 5,000 அமெரிக்க டாலர்களுக்கு முதலாளிகளிடம் வீட்டு வேலை செய்பவர்களாக விற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார். இவர்களில் பலரும் அதிகமான அளவில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதோடு, துன்புறுத்தப்பட்டுள்ளனர்; அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கும் உரிய ஊதியமும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பலரும் இந்தியா, வங்கதேசம் ஸ்ரீலங்கா வழியாக மிகக் குறைவான  சோதனைகளைக் கடந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்கின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் பெண்களை சோதிக்கவும், நேர்முகத் தேர்வு செய்யவும் வேண்டும் என்ற உத்தரவு காத்மாண்டு விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குடியேற்ற துறை அதிகாரி கங்கா ராம் கெலால் தெரிவித்தார். இதுபற்றிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“மேற்கூறிய உத்தரவைப் பின்பற்றவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என கெலால் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

(செய்தியாளர்: கோபால் சர்மா; எடிட்டிங்: நிதா பல்லா @nitabhalla மற்றும் ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவுசெய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)  

Our Standards: The Thomson Reuters Trust Principles.