சிறப்புக் கட்டுரை – தமிழகத்தில் மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் தங்கள் ‘கனவு இல்லங்களில்’ தங்கள் வாழ்க்கையை மீண்டும் வடிவமைக்கின்றனர்

Friday, 7 April 2017 09:48 GMT

Rescued bonded labourers work with students and contractors to build their first homes in Annaisathyanagar village in southern Indian state of Tamil Nadu in 2016. Picture courtesy: Madras Christian College

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

  சென்னை, ஏப். 7 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – வாங்கிய கடனுக்கான கொத்தடிமை வாழ்க்கையுடனே பிறந்த எஸ். அப்பு தனது தந்தை வாங்கிய கடனை உழைப்பைக் கொண்டு திருப்பிச் செலுத்துவதை பார்த்தபடி வளர்ந்து, பின்னர் அதைச் செலுத்துவதற்காக ஓய்வின்றி தானே உழைக்கும் வகையில் தனது 25 வருட கால வாழ்க்கையை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த ஒரு அரிசி ஆலையில்தான் கழித்தார்.

தமிழ்நாடு மாநிலத்தின் கூடுவாஞ்சேரியில் இருந்த ஓர் ஆலையிலிருந்து 2015ஆம் ஆண்டில் அவர் மீட்கப்பட்டபோது , வீடு என்று சொல்வதற்கு அவருக்கு ஒரு இடம் கூட இருக்கவில்லை.

“என் வீடு என்பது எப்போதுமே அரிசி ஆலையாகத் தான் இருந்தது” என்று 27 வயதான அப்பு தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார். “எனக்கு அங்குதான் திருமணம் நடந்தது. அந்த இடத்திற்கு வெளியே ஓர் உலகம் இருக்கிறது என்பது தெரியாமலேயே நான் இருந்தேன்.”

ஆனால் இன்றோ விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்பதற்கு உதவி செய்யும் வகையில் அரசு, அறக்கட்டளைகள் ஆகியவற்றின்  நிதியுதவியைப் பெற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை கிறித்துவக் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்ட அவருக்கே சொந்தமான வீட்டில் அப்பு வாழ்ந்து வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் ஓர் அறையைக் கொண்ட செங்கற்களால் கட்டப்பட்ட இந்த வீட்டிற்கு வருவதற்கு முன்பாக அதே ஆலையிலிருந்து மீட்கப்பட்ட அவருக்கும் இதர எட்டு குடும்பங்களுக்கும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட ஒரு சிறு இடத்தில்தான்  தற்காலிகமாக ஒரு குடியிருப்பை உருவாக்கிக் கொண்டு அப்பு வசித்து வந்தார்.

“2015ஆம் ஆண்டில் இந்தப் பகுதியையே மூழ்கடித்த  வெள்ளத்தின்போது  இத்தகைய தற்காலிக குடியிருப்பில் அவர் வாழ்ந்து வந்ததை  நாங்கள் பார்த்தோம்” என அப்புவின் புதிய இல்லத்தை கட்டுவதற்கு உதவிய 22 வயது மாணவனான ஜெசர்சன் ஜோயல் குறிப்பிட்டார்.

“கிட்டத்தட்ட அவர்கள் எவ்வித பாதுகாப்புமின்றி, அனைத்து அபாயங்களையும் எதிர்கொள்ளும் வகையில் வெட்டவெளியில்தான் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு பாதுகாப்பானதொரு இல்லம் தேவைப்பட்டது.”

இந்தியா 1976ஆம் ஆண்டில் கொத்தடிமை முறைக்குத் தடை விதித்திருந்தது. என்றாலும் அது தொடர்ந்து பரவலாக நீடித்தது. அப்புவைப் போன்ற சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தலித், பழங்குடி பிரிவுகளைச் சேர்ந்த பல லட்சக்கணக்கானவர்கள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக வயல்களிலும், செங்கற்சூளைகளிலும், அரிசி ஆலைகளிலும், பாலியல் மையங்களிலும் அல்லது வீட்டுப் பணியாளர்களாகவும் வேலை செய்து வந்தனர்.

2030ஆம் ஆண்டிற்குள் 1 கோடியே 80 லட்சம் கொத்தடிமைத் தொழிலாளர்களை விடுவிக்க திட்டங்கள் தீட்டப்பட்டிருப்பதாக சென்ற ஆண்டு அரசு அறிவித்தது. மேலும் நவீன காலத்து அடிமைத்தனத்தை முறியடிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இவ்வாறு மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கான இழப்பீட்டையும் அரசு ஐந்து மடங்கு உயர்த்தியது.

என்றாலும் வீடோ, நிலமோ, வேலையோ இல்லாத நிலையில் இவ்வாறு விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் கடன் மீதான கொத்தடிமை நிலைக்கு மீண்டும் திரும்பிச் செல்வது மிகவும் எளிதாக உள்ளது என இந்த முறைக்கு எதிரான பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

 “இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்படுகிறது. என்றாலும் வீட்டுவசதி, நிலம் போன்ற இதர நலவாழ்வுத் திட்டங்களுக்கென அவர்கள் விண்ணப்ப படிவங்களை நிரப்பித் தந்து, அதற்குரிய நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டியுள்ளது” என கொத்தடிமைத் தொழிலாளர்களை விடுவிக்கவும், அவர்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கையை புனரமைத்துக் கொள்வதற்கு உதவி செய்ய  செயல்பட்டு வரும் இண்டர்நேஷனர்ல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற அறக்கட்டளையைச் சேர்ந்த சாம் ஜெபதுரை கூறினார்.

 “இவற்றுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதோடு, இவர்களில் பலரும் தொடர்ந்து அதைப் பின்பற்றுவதில்லை.”

முகாம்களில் வாழ்க்கை

சுதந்திர மனிதனாக எங்கு வாழ்வதற்கு அவருக்கு விருப்பம் என்று அவரை கொத்தடிமை முறையிலிருந்து விடுவித்த அதிகாரிகள் கேட்டபோது , தன் தோளைக் குலுக்கியபடி  “அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை” என்று முணுமுணுத்ததை அப்பு நினைவு கூர்ந்தார்.

“உண்மையில் என் பெற்றோர் எந்தக் கிராமத்திலிருந்து வந்தார்கள் என்று கூட எனக்குத் தெரியாது” என தன் புதிய வீட்டின் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு, அருகில் தனது மகள் முகப்பவுடரை எடுத்து முகத்தில் பூசுவதைப் பார்த்தபடியே அவர் சொன்னார்.

“அதுபோக என் விருப்பம் என்னவென்று அதுவரை எவருமே கேட்டதில்லை.”

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தின் வெளிப்புறத்தில் அரசு முறை சாரா அமைப்பு ஒன்றினால் வழங்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தன்னைப் போன்றே மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் சேர்ந்து அப்பு வாழ வேண்டியதாயிற்று.

“பரம்பரை பரம்பரையாக கொத்தடிமைகளாக இருந்துவருகின்ற, இருளர் என்ற பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த  இவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட  சமூகத்தால் முற்றிலும் மறக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்” என இந்தக் கல்லூரி திட்டத்தின் கள ஒருங்கிணைப்பாளரும் உதவிப் பேராசிரியருமான பிரின்ஸ் சாலமன் கூறினார்.

“என் மாணவர்களில் ஒருவர் அவர்களை சென்றடைவதற்கு ஓர் ஏரியை நீந்திக் கடக்க வேண்டியிருந்தது.”

அவர்களது நிலைமையைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அவர்களின் தேவைகள் பற்றி அந்தக் குடும்பங்களிடம் விசாரித்துள்ளனர். அதன் பிறகே அவர்களுக்கு நிரந்தரமான இல்லங்களை கட்டித் தருவதற்கான ஒரு திட்டத்தை வடிவமைத்திருக்கின்றனர்.

“கனவு இல்லம்”

2016ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் இந்த இல்லங்களுக்கான முதல் தொகுதிக்கு அடித்தளம் போடப்பட்டது. அப்போதிருந்து பிளாஸ்டிக் தகடுகள், ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் ஆகியவற்றுக்குப் பதிலாக கான்க்ரீட் –ஆல் ஆன தூண்கள், கூரை ஆகியவற்றுடன் தங்கள் இல்லங்களை உருவாக்குவதற்காக மாணவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதாக ஒவ்வொரு குடும்பமும் உறுதி அளித்தன.

அதன் தோட்டம், முற்றிலும் மூடிய வகையிலான குளியலறை, ஓடு போட்ட மேற்கூரை ஆகியவற்றுடன் கூடிய தனது வீடு ஒரு கனவு இல்லம்தான் என்று அப்பு கூறினார்.

இந்த வீடுகள் எதிர்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தரை மட்டத்திலிருந்து மூன்றடி உயரத்திற்கு வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன.

மற்றொரு முக்கிய அம்சம் என்பது ‘நான்கு குச்சிகளும் ஒரு புடவையும்’ என்று கூறப்படும் தரையில் கம்புகளை ஊன்றி அதைச் சுற்றி நாற்புறமும் ஒரு புடவையைச் சுற்றுவது என்ற பெண்கள் வெட்டவெளியில் யாரும் பார்க்காத வகையில் குளிப்பதற்காகப் பயன்படுத்தும் முறைக்கு பதிலாக முறையான குளியலறை- கழிப்பறை வசதி ஆகும்.

“ஒருவழியாக தான் பாதுகாப்பாக உணர்வதாக ஒரு பெண் என்னிடம் சொன்னார்” என ஜோயல் குறிப்பிட்டார்.

“(முன்பெல்லாம்) காட்டைத்தான் அவர்கள் கழிப்பறையாகப் பயன்படுத்தி வந்தனர். எப்போதும் பாம்புகள் பற்றிய பயமும் அவர்களுக்கு இருந்தது. சூரியன் மறைந்த பிறகு அவர்கள் வெளியே போவதே இல்லை.”

இந்தக் கட்டுமான வேகம் கிடைக்கக்கூடிய நிதியைப் பொறுத்ததாகவே இருந்தது. அந்தத் தெருவில் கட்டப்படவுள்ள கடைசி வீடான 12ஆம் எண் வீட்டைக் கட்டி முடிக்க இன்னும் பணம் வருவதற்காக மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 “எங்கள் தலைக்கு மேல் ஒரு கூரை இருப்பதும் நல்லதுதான்” என பெண்கள் குழு ஒன்று மாணவர்களிடம் கூறியது.

“எங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும்; நன்றாக இருக்க வேண்டும்; நாங்கள் அனைவரும் ஒன்றாக வாழும் அளவிற்கு இதை விடப் பெரிய வீட்டைக் கட்ட வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: கேட்டி நகுயென். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.