தென் இந்தியாவில் சுட்டெரிக்கும் வறட்சி விவசாயிகளை கடனுக்கான அடிமைகளாக மாற்றியுள்ளது

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Tuesday, 18 April 2017 13:45 GMT

- அனுராதா நாகராஜ்

சென்னை, ஏப். 18 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - கடந்த பல பத்தாண்டுகளிலேயே மிக மோசமான வறட்சிகளில் ஒன்று தென் இந்தியா முழுவதையும் தற்போது ஆட்கொண்டுள்ளது. தாங்கள் உயிர் பிழைத்திருப்பதற்காக கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் இது தள்ளியுள்ளது. இத்தகைய நிலை அவர்களை கடனுக்கான அடிமைகள் என்ற நிலைக்குத் தள்ளும் என்பதோடு, வேலையில் அவர்கள் மேலும் சுரண்டப்படும் அபாயத்தையும் அதிகரித்துள்ளது என செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

2016ஆம் ஆண்டில் பருவமழையை பொய்த்ததைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட  பகுதிகள் என அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகரித்துக் கொண்டே போகும் வெப்பம், வற்றிப் போன நீர்நிலைகள், மிகக் குறைவான விவசாயத்தை மையமாகக் கொண்ட வேலைகள்  ஆகியவை கிராமத்து மக்களை உணவு, குடிநீர், பள்ளி மற்றும் மருத்துவத்திற்கான கட்டணங்கள் ஆகிய செலவுகளுக்காக கடன் வாங்குமாறு நிர்ப்பந்தபடுத்தியுள்ளது எனத் தெரிவிக்கும் செயல்பாட்டாளர்கள் ‘மீண்டு வர இயலாத நிலைக்கு’ விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதை இந்த நிலை தெரிவிப்பதாகவும் கூறுகின்றனர்.

“கிராமங்கள் தோறும் இந்தக் கடன்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன” என்று சென்னையிலுள்ள லயோலா கல்லூரிப் பேராசிரியரும் தமிழ்நாட்டில் நிலவும் வறட்சியின்  பாதிப்புகளை கண்காணித்து வருபவருமான க்ளாட்ஸ்டன் சேவியர் கூறினார்.

 “மிகவும் அவமானகரமான வேலைகளையும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு  மக்கள் ஆளாகி வருகின்றனர். ஆட்கட்த்தலுக்கான மேலும் அதிகமான பாதைகள் இப்போது திறந்துள்ளன. இத்தகைய அபாயம் இதற்கு முன்பு இவ்வளவு மோசமாகவும், வெளிப்படையானதாகவும்  இருக்கவில்லை.”

இந்தியாவில் கட்டாய வேலையின் மிகவும் வெளிப்படையான வடிவமாக கடனுக்கான அடிமை உழைப்பு அமைகிறது. வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷனின் உலகளாவிய அடிமைத்தனம் குறித்த சமீபத்திய அட்டவணையின்படி நவீன முறையிலான அடிமைத்தனத்தின் ஏதாவதொரு வடிவத்தில் சிக்கியவர்களாக இந்தியாவில் 1 கோடியே 80 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் வட்டிக்கு விடுபவர்கள், தொழிலாளர்களுக்கான ஏஜெண்டுகள் ஆகியவர்களிடமிருந்து அதிக வட்டிக்குக் கடன் பெறுவதன் விளைவாக இவ்வாறு கடனில் சிக்கியவர்கள் செங்கற் சூளைகள், அரிசி ஆலைகள் அல்லது வயல்வெளிகளில் வாங்கிய கடனுக்காக அல்லது தங்கள் உறவினரின் கடனைக் கழிப்பதற்காக தங்களை ஒப்புவிக்கும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர்கள் பல மாதங்களை – சில நேரங்களில் அதற்கும் மேலாகவும் – இவ்வாறு அடிமைத்தனத்தில் கழிக்க நேர்கிறது. இதன் விளைவாக அவர்கள் கடனுக்கான அடிமைத்தனம் என்ற சுழலில் சிக்கிக் கொள்கின்றனர் என மனித உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டின் கழிமுகப் பகுதியில் நிலவும் வறட்சி குறித்த ஓர் அறிக்கையை தயாரித்து வரும் மனித உரிமைகளுக்கான அறக்கட்டளையான பீப்பிள்ஸ் யூனியன் ஆஃப் சிவில் லிபர்ட்டீஸ் அமைப்பைச் சேர்ந்த ஆர்.முரளி குறிப்பிடுகையில் தற்போது நடைமுறையில் உள்ள வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்கள் போன்ற அரசின் பாதுகாப்பு கவசங்கள் போதுமானவையாக இல்லை என்று தெரிவித்தார்.

“அனைத்து வகையான கடனையும் பெற வேண்டிய கட்டாயத்திற்கு கிராமத்து மக்கள் ஆளாக்கப் பட்டுள்ளனர். அதனைத் திருப்பிச் செலுத்த ஏதாவதொரு வகையான அடிமைத்தனத்தில் வாழ்நாள் முழுவதும் கழிக்க வேண்டியிருக்கும் என்பதையும் அவர்கள் நன்கறிந்திருக்கின்றனர். இல்லையெனில் அவர்கள் தங்களையே அழித்துக் கொள்ளத்தான் வேண்டும்.”

தற்கொலைகள்

குற்றங்கள் குறித்த ஆவணங்களுக்கான தேசியக் கழகத்தின்  புள்ளிவிவரங்களின்படி தொடர்ந்து பல வருடங்களாக நீடிக்கும் வறட்சி, பருவம் தப்பிப் பெய்யும் மழை, மாறிக் கொண்டேயிருக்கும் உலகளாவிய பொருட்களின் விலைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு 12,600க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2015-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டனர்.

தேசிய மனித உரிமைகள் கமிஷனின் கருத்துப் படி 2017 ஜனவரியில் மட்டுமே தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த்த் தற்கொலைகளில் பெரும்பாலானவை திவாலான நிலை, நீடித்த கடனில் மூழ்கிய நிலை அல்லது விவசாயப் பிரச்சினைகள் ஆகியவற்றோடு தொடர்புடையதாக உள்ளன என குற்றங்கள் குறித்த ஆவணங்களுக்கான தேசியக் கழகம் தெரிவிக்கிறது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குழுக்கள் அப்பகுதிகளின் தேவைகளை மதிப்பிட்டுள்ளன என்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கு மேலும் அதிகமான உதவி வழங்கப்படும் என்றும் இந்திய விவசாய அமைச்சகத்தில் வறட்சி மேலாண்மைக்கான பிரிவின் தலைவரான கே. ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.

 “இதற்கான நிதி வழங்கப்பட்டு வருகிறது என்றும் மேலும் வாழ்க்கை வசதிகளை வழங்குவதற்கென கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 வேலைநாட்கள் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் கூறினார்.

இத்தகைய வாழ்க்கை வசதிக்கான பணம் கொடுப்பது தாமதமாகியுள்ளதும், கிராமப் புறப் பொருளாதாரத்தில் நிலவும் பணத் தட்டுப்பாடும் பலரையும் தீவிரமாக வேலையைத் தேடிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது என இது குறித்துப் பிரச்சாரம் செய்வோர் தெரிவித்தனர்.

விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்து வந்த தலித் மற்றும் ஆதிவாசி பிரிவுகளைச் சேர்ந்த பலரும் திடீரென்று வேலையற்றவர்களாக மாறியுள்ளதோடு, கிராமப்புறங்களில் அதிகவட்டிக்குக் கடன் வழங்குவோரை நாட வேண்டிய நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 “நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3,00,000க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் ஓராண்டு முழுவதற்குமான வாழ்க்கை வசதிகளை இழந்துள்ளனர்” என லாப நோக்கற்ற வானவில் அறக்கட்டளையைச் சேர்ந்த ப்ரேமா ரேவதி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

இந்தப் பகுதி முழுவதிலுமே இளம் ஆண்களும் பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி கட்டுமானப் பகுதிகளிலும் சிறு, பெரு நகரங்களிலும் தினக்கூலிகளாக வேலை செய்ய வேலை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

“அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து, வேலை செய்து பரிச்சயமான பகுதிகளிலிருந்து வெகு தூரத்திற்கு பயணம் செய்கின்றனர். இத்தகைய நிலை அவர்கள் அதிகமான அளவில் சுரண்டலுக்கு ஆட்படும் அபாயத்திலும் அவர்களைத் தள்ளியுள்ளது” எனவும் அவர் கூறினார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.