இந்தியாவின் குழந்தைக் கடத்தல்காரர்கள் கர்ப்பமுற்ற பாலியல் தொழிலாளிகளை குறிவைக்கின்றனர் – அறக்கட்டளை நிறுவனம் கருத்து

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Thursday, 20 April 2017 11:41 GMT

A child sleeps in a makeshift cradle as a homeless boy sleeps on the pavement in Mumbai December 3, 2009. REUTERS/Arko Datta

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, ஏப். 20 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தத்தெடுப்பு குறித்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து குழந்தைகளை விலைக்கு வாங்குவதற்கான புதிய வழிகளை ஆட்கடத்தல்காரர்கள் மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர் என்றும் மும்பை நகரின் சிவப்பு விளக்குப் பகுதியில் உள்ள பாலியல் தொழிலாளிகள் தங்கள் குழந்தைகளை விற்பதற்காக ஆசை வார்த்தைகள் காட்டப்படுகிறார்கள்; சில நேரங்களில் கட்டாயப்படுத்தவும் படுகிறார்கள் என இது குறித்த பிரச்சாரத்தை மேற்கொள்வோர் தெரிவிக்கின்றனர்.

பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கென இரவு தங்கும் காப்பகங்களை நடத்தி வரும் ப்ரேரணா எனும் ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளை கடந்த ஏழு மாதங்களில் நான்கு குழந்தைகள் விற்கப்பட்டதைப் பதிவு செய்துள்ளது. இதில் ஏதாவது குறிப்பிட்ட வழிமுறை தென்படுகிறதா என்பதை அறிவதற்காக இந்த விற்பனை ஒவ்வொன்றையும் அது ஆவணப்படுத்தி வருகிறது.

 “இதற்கு முன்பெல்லாம் இத்தகைய சம்பவங்கள் மிகவும் அரிதாகவே இருந்தன.  பாலியல் தொழில் மையங்களை நடத்தி வரும் பெண் தலைவிகளே இவற்றைக் கட்டுப்படுத்தி வந்தனர். பெண் குழந்தை பிறக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான நேரங்களில் பாலியல் தொழிலாளிகள் தங்கள் கர்ப்பத்தை நீடிக்கவும் அவர்கள் அனுமதித்தனர்” என ப்ரேரணாவின் நிறுவனர்களில் ஒருவரன ப்ரவீண் பத்கர் கூறினார்.

இந்தக் குழந்தைகள் விற்கப்படவில்லை என்ற போதிலும் அவற்றின் தாய்மார்களிடமிருந்து தனியாக விலக்கி வைக்கப்பட்டிருந்தனர்.

“ஆனால் இப்போது பாலியல் தொழிலிலுள்ள இடைத்தரகர்கள் மேலும் வலுப்பெற்றவர்களாக உருப்பெற்றுள்ளதோடு, இவ்வாறு குழந்தைகளை விலைக்கு வாங்குவோருக்கான இடைத்தரகர்களாகவும் மாறியுள்ளனர். பாதுகாப்பற்ற குழந்தைகள் இருக்கும் பகுதிகளை தேடும் தலைமறைவு குழுக்கள் இப்போது இயங்கி வருகின்றன.”

குழந்தைகளை தத்தெடுக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருப்பதே நாட்டில் இப்போது வெளியாகி வரும் குழந்தைக் கடத்தல் நடவடிக்கைகளின் மையமாக அமைகிறது என இது குறித்து பிரச்சாரம் மேற்கொள்வோர் கருத்து தெரிவித்தனர்.

புதிய உத்தி

எனினும் சிவப்பு விளக்குப் பகுதி இப்போது கவனம் பெறுவது புதிதான ஒன்றாகும். இதற்கு முன்பெல்லாம் குழந்தைக் கடத்தல்காரர்கள் ஏழைகளை, திருமணமாகாத தாய்மார்களை குறிவைத்துச் செயல்படுவது அல்லது மருத்துவ மனைக்கு உள்ளே இருப்பவர்களின் உதவியுடன் அங்கிருந்து குழந்தைகளை திருடுவது போன்றவற்றில்தான் பெரும்பாலும் ஈடுபட்டு வந்தனர் என பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

 “(சிவப்புவிளக்குப் பகுதியான) காமாத்திபுராவில் குழந்தை விற்கப்படுவது பற்றி நான் கையாளும் முதல் வழக்கு இதுதான்” என கடந்த அக்டோபரில் பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை கடத்துவதிலிருந்து மீட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் வசந்த் ஜாதவ் குறிப்பிட்டார்.

 “குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே இதற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குழந்தையை விலைக்கு வாங்கியவர் குழந்தையில்லாத ஒரு பெண்மணிதான்.”

இந்த இரண்டு பெண்களையுமே காவல்துறை கைது செய்ததோடு அந்தக் குழந்தையை அரசு நடத்திவரும் காப்பகத்தில் விட்டது. அந்தப் பாலியல் தொழிலாளியை பிணியில் விடுவிக்க யாருமே வரவில்லை. ஆனால் அந்தக் குழந்தையை விலைக்கு வாங்க முயன்ற பெண்மணி கைதான பிறகு உடனேயே பிணையில் வெளிவந்து விட்டார் என ஜாதவ் குறிப்பிட்டார்.

 “அந்தப் பாலியல் தொழிலாளியின் கதியை இப்போது நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.”

ஜனவரி மாதத்தில் ரூ. 20,000க்கு விற்கப்படவிருந்த ஒரு வயதுக் குழந்தையை காவல் துறை மீட்டது.

ஒரு மாதத்திற்குப் பிறகு பாலியல் தொழிலாளி ஒருவரின் குழந்தையை விற்பதற்கான பேச்சுவார்த்தைகள் அவர் இருந்து வரும் பாலியல் தொழில் மையத்தில் நடந்து வருகின்றன என்பதை அறிந்த பிறகு அந்தக் குழந்தையை ப்ரேரணா அதிகாரிகள் தங்கள் காப்பகத்தில் வைத்துக் கொண்டனர். அந்த நேரத்தில்தான் இதுபோன்றதொரு அபாயத்தில் இன்னுமொரு குழந்தையும் இருந்து வருவதை தாங்கள் தெரிந்து கொண்டதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தத்தெடுப்பதற்கான விதிமுறைகளை இந்திய அரசு கடுமையாக்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது தத்தெடுப்பு செயல்முறையை ஒழுங்குபடுத்தியுள்ள போதிலும் இவ்வாறு ஒரு குழந்தையை தத்தெடுக்க காத்திருக்க வேண்டிய கால அளவை மேலும் அதிகமாக்கியுள்ளது.

கடந்த டிசம்பரில் குழந்தையில்லாத தம்பதிகளுக்கு ரூ. 2,00,000 லிருந்து ரூ. 4,00,000 வரை குழந்தைகளை விற்றதற்காக மும்பை காவல்துறை ஆறு நபர்களை கைது செய்தது.

கிழக்குப் பகுதி மாநிலமான மேற்கு வங்கத்தில் பெரும் கடத்தல்  கும்பல் ஒன்றின் நடவடிக்கைகள் அம்பலமான ஒரு மாதத்திற்குள்ளேயே மும்பை நகரில் இந்த வழக்கு வெளிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: லிண்ட்ச்ய கிரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.