குழந்தைப்பருவ அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச ஒப்பந்தங்களை இந்தியா ஏற்றுக் கொண்டது

by Nita Bhalla | @nitabhalla | Thomson Reuters Foundation
Tuesday, 13 June 2017 15:08 GMT

A schoolboy walks amid fumes emitted from fumigation work carried out by a municipal worker (unseen) in a residential locality in New Delhi, India, in this 2015 archive photo. REUTERS/Anindito Mukherjee

Image Caption and Rights Information

- நீதா பல்லா

புது டெல்லி,ஜூன். 13 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - சிறார்களை வேலைக்கு வைப்பது குறித்த சர்வதேச தொழிலாளர் தரநிலைகள், அதன் அமலாக்கம் குறித்த சோதனைகளை மேற்கொள்ள இதர நாடுகளை அனுமதிக்கும் ஆகிய இரு சர்வதேச உடன்படிக்கைகளை கடந்த செவ்வாய் அன்று இந்தியா  ஏற்றுக் கொண்டதன்  மூலம் குழந்தைப் பருவ அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டில் 5 முதல் 14 வயதிற்கிடையே 40 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தியிருந்தது. உலக அளவில் இந்த எண்ணிக்கை 16 கோடியே 80 லட்சம் ஆகும். எனினும், வறுமையின் காரணமாக மேலும் பல லட்சக்கணக்கான சிறுவர்கள் இதில் ஆட்படுவதற்கான அபாயம் நீடிக்கிறது என இது குறித்த செயல்பாடுகளில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச நியமத்தை ஏற்றுக் கொள்வதென்ற இந்த நடவடிக்கையின் மூலம் “குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத சமூகம் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை”  மீண்டும் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது என இந்திய தொழிலாளர் நல அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

குழந்தைத் தொழிலாளர் முறையின் மிக மோசமான வடிவங்கள் மற்றும் (வேலை செய்வதற்கான) குறைந்த பட்ச  வயதுக்கான சிறப்பு மாநாடு ஆகியவற்றின் அடிப்படையிலான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சிறப்பு மாநாடு தேசிய அளவில் இதற்கான சட்டங்களை நாடுகள் இயற்றுவதற்கு உலக அளவிலான வழிகாட்டி விதிமுறைகளின் அடிப்படையாக அமைகிறது.

வேலையில் அமர்த்துவதற்கான குறைந்தபட்ச வயது, ஆயுதம் தாங்கிய மோதல்கள், விபச்சாரம் அல்லது போதை மருந்துக் கடத்தல் போன்ற விஷயங்களில் குறைந்த வயதுடையவர்களை ஈடுபடுத்துவதைத் தடை செய்வது போன்றவை குறித்து குறிப்பாக சுட்டிக்காட்டும் இந்த சிறப்பு மாநாட்டு முடிவுகளை ஏற்றுக் கொள்வது என்பதன் பொருள்,  உலக நாடுகள் இதற்கான நியமங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, இவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பரிசீலனை செய்வது என்பதும் ஆகும்.

தலைகீழ் மாற்றம்

தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்துவந்த அரசுகள், இந்தியாவில் இத்தகைய குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்று பொதுவாக மறுத்து இந்த சர்வதேச முடிவை ஒப்புக்கொள்ள மறுத்து வந்தன என செயல்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நோபல் பரிசு பெற்றவரும் குழந்தைகளின் உரிமைகளுக்கான செயல்பாட்டாளருமான கைலாஷ் சத்யார்த்தி இவ்வாறு அரசு சர்வதேச முடிவை இந்தியா ஏற்றுக் கொண்டது இப்போதுள்ள நிலைமைக்குத் தலைகீழான மாற்றம் ஆகும் எனக் குறிப்பிட்டார்.

“கடந்த பல வருடங்களாகவே நமது நாட்டில் குழந்தை அடிமைத்தனம் என்பதே இல்லை என இந்தியா கூறி வந்ததோடு, குழந்தைத் தொழிலாளர்களின் மிக மோசமான வடிவங்கள் இங்கு நிலவி வருகின்றன என்பதையும் ஏற்றுக் கொள்ளத் தயங்கி வந்தது. எனினும் இப்போது இது ஒரு பிரச்சனை என்றும், எனவே இந்த சர்வதேச சிறப்பு மாநாட்டு முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம் என்றும் அரசு ஒப்புக் கொண்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

இவ்வாறு ஏற்றுக்கொண்டதன் விளைவாக குழந்தைகளுக்கான அரசு மேற்கொள்ளும் செலவு அதிகரிக்கும். மேலும் நாட்டின் நீதிமன்றங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த கொள்கையை வலுப்படுத்த முயற்சித்து வரும் அறக்கட்டளைகளுக்கு வலுவானதொரு சட்டக் கருவியையும் அது வழங்கும் எனவும் சத்யார்த்தி மேலும் குறிப்பிட்டார்.

2011ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, அதன் 120 கோடி மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் 18 வயதிற்குக் கீழே உள்ளவர்கள் என்பதோடு, உலகத்தில் குழந்தைகள் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதாரச் செழிப்பின் விளைவாக லட்சக்கணக்கானோர் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளதோடு, சமூக நலத்திட்டங்கள், கல்வி பெறுவதை உறுதிப்படுத்துவது போன்ற குறைந்த வயதுடையவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், 2016ஆம் ஆண்டில் உலகவங்கி மற்றும் யுனிசெஃப் அறிக்கையின்படி, உலகில் உள்ள மிகவும் வறுமையில் வாடும் நிலையில் உள்ள 38 கோடியே 50 லட்சம் சிறுவர்களில் 30 சதவீத சிறுவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்.

இத்தகைய சிறுவர்கள் ஆட்கடத்தல்காரர்களுக்கு மிக எளிதான இரையாகின்றனர்..  நல்ல வாழ்க்கை அமைத்துத் தருவதாக ஆட்கடத்தல்காரர்கள் கொடுக்கும் உறுதிமொழியை நம்பும் இவர்கள் இறுதியில் பெரும்பாலும் கட்டாய உழைப்புக்கோ அல்லது கடன் அடிமையாக விற்கப்படுவதற்கோ ஆளாகின்றனர்.

இந்தியாவின் குழந்தைத் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயத்தில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். கால் பகுதிக்கும் மேலானோர் எம்ப்ராய்டரி துணி தயாரிப்பு, தரைவிரிப்புகளை நெய்வது அல்லது தீக்குச்சி செய்வது போன்ற உற்பத்தித் தொழில்களில் வேலை செய்கின்றனர்.

இத்தகைய குழந்தைகள் உணவகங்களிலும், தங்கும் விடுதிகளிலும் வீட்டு வேலை செய்பவர்களாகவும் வேலை செய்கின்றனர். இவர்களில் பெரும்பாலான சிறுமிகள் பாலியல் ரீதியான அடிமைத்தனத்திற்காக பாலியல் தொழில் மையங்களுக்கு விற்கப்படுகின்றனர்.

(செய்தியாளர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: அஸ்த்ரிட் ஸ்வேநெர்ட் @azweynert. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.