×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புக் கட்டுரை – சிறுகுழந்தையாக தத்தெடுக்கப்பட்ட ஸ்வீடன் நாட்டுப் பெண் தனது இந்தியத் தாயை தேடும் முயற்சியில் இழிவான கடந்த காலத்தை கண்டறிய நேர்ந்தது

Tuesday, 27 June 2017 00:01 GMT

மும்பை, ஜூன் 27 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தத்தெடுக்கப்பட்டு ஸ்வீடன் நாட்டில் வளர்க்கப்பட்ட இந்திய குழந்தை என்ற வகையில் நீலாக்‌ஷி எலிசபெத் புர்வே ஜொரெண்டால் எப்போதுமே தன்னைப் பெற்றெடுத்த தாயைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆர்வமாக இருந்தார்.

அவரை தத்தெடுத்த பெற்றோர்கள் அவரது பின்னணி குறித்து மிகவும் வெளிப்படையாகவே நடந்து கொண்டனர். “முற்றிலும் வெள்ளையர்களைக் கொண்ட நாட்டில் பழுப்பு நிறம் கொண்டதொரு பெண்ணாக வளரும்போது அதைத் தவிர்ப்பது மிகவும் கடினம்” என உடன்பிறவாத மூன்று வெள்ளை சகோதாரர் சகோதரர்களுடன் இருக்கும் 44 வயதாகும் ஜொரெண்டால் குறிப்பிட்டார்.

எனவே 1990களின் இறுதிப் பகுதியிலிருந்தே தன்னைப் பெற்றெடுத்த தாயைத் தேடுவதை அவர் துவங்கினார். பல வருடங்களாக நடு நடுவே மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி இறுதியில் வெற்றி பெற்றது.

தாயுடன் மீண்டும் சேர்வது மகிழ்ச்சியை அளிக்கும் என்று அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, கடந்த பல பத்தாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த மனக் குமுறலை ஜொரெண்டால் வெளியே கொண்டு வருவதாக அந்த சந்திப்பு அமைந்துவிட்டது. மேற்கு மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பூனேவிற்கு அருகே இருந்த அனாதை இல்லத்திலிருந்து ஸ்வீடன் நாட்டின் ஹெல்சிங்போர்க் நகரத்திற்கு 1976-ல் அவரது தாயின் விருப்பத்தையும் மீறி எடுத்துச் செல்லப்பட்டார் என்பதை அவர் தெரிந்து கொள்ள நேர்ந்தது.

“என் தந்தை இறந்தபோது என் தாய் கர்ப்பமாக இருந்தார்.  ஓர் அனாதை இல்லத்தில்தான் என் தாய் என்னைப் பெற்றெடுத்தார். என்னை விட்டு விலக வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு எப்போதும் இருக்கவில்லை” என ஜொரெண்டால் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய அவரது சொந்த உறவினர்கள் என்னை விட்டுவிட வேண்டும் என்று அவரை வற்புறுத்தி, ஏமாற்றி, கட்டாயப்படுத்தியதாக அவர் என்னிடம் தெரிவித்தார்” என இந்த மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பைக்குக் கிழக்கே 670 கிலோமீட்டர் (420 மைல்கள்) தூரத்தில் உள்ள யாவட்மாலில் நோயுற்ற தன் தாயை பார்த்தபிறகு அவர் தெரிவித்தார்.

இதை ஒழுங்குபடுத்துவதற்கு எந்தவிதமான சட்டமும் இல்லாத 1970களில்  இவ்வாறு நாடுகளுக்கு இடையேயான தத்தெடுப்புகள் அதிகரித்துக் கொண்டே போன  சமயத்தில் தத்துக் கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இந்தியக் குழந்தைகளில் ஒருவர்தான் ஜொரெண்டால்.

1978க்கும் 1995க்கும் இடையே அமெரிக்காவிற்குக் குழந்தைகளை அதிகமாக அனுப்பி வைத்த முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் இதில் நடைபெறும் ஊழல்கள் பற்றிய கதைகள் வெளிவரத் துவங்கி பெரும் சச்சரவை ஏற்படுத்தின.

எனினும் 1984ஆம் ஆண்டில் தனியார் தத்தெடுப்பைத் தடை செய்து உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளிக்கும் வரை , இந்திய அரசு இதை கண்காணிக்கத் துவங்கி, தத்தெடுப்புகளை ஒழுங்குபடுத்தத் துவங்கும்வரை இது தொடர்ந்தது.

எனினும் பிரச்சாரகர்கள், இவ்வாறு தத்தெடுக்கப்பட்ட சிறுவர்கள் இப்போது பெரியவர்களாக ஆகியுள்ள நிலையில், தங்களின் உண்மையான பெற்றோர்களை கண்டறிய முயற்சி செய்யத் துவங்குகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் தாங்கள் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்ட  உண்மையும் அவர்களுக்குத் தெரியவருகிறது என்கின்றனர்.

அவரது தேடல் முயற்சியில் ஜொரெண்டாலுக்கு உதவி செய்த குழந்தைக் கடத்தலுக்கு எதிரான (ஆக்ட்) அறக்கட்டளை இவ்வாறு நாடு விட்டு தத்துக் கொடுக்கப்பட்ட சுமார் 40 பேரை அவர்களின் உண்மையான தாய்மார்களுடன் கடந்த ஆறுவருட காலத்தில் சேர்த்து வைத்துள்ளது. உண்மையைத் தெரிந்து கொள்வதற்காக மேலும் அதிகமான எண்ணிக்கையினோர் அதன் உதவியை நாடி வருகின்றனர்.

குழந்தைக் கடத்தல்

 “இந்தக் குழந்தைகள் அதிகாரிகளால் கைவிடப்பட்டவை என்ற வகையில் நடத்தப்பட்டு, தத்தெடுப்பிற்காக முன்வைக்கப்பட்டனர்; ஆறு மாதங்களுக்குள் அந்தக் குழந்தைகள் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டன” என இந்தியாவிலிருந்து ஜெர்மனியில் ஆச்சேன் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டவரும் ஆக்ட் அறக்கட்டளையைச் சேர்ந்தவருமான அருண் தோஹ்லே குறிப்பிட்டார்.

 “இதனை குழந்தைகள் கடத்தலாகவே கருத வேண்டும்.”

தன்னைப் பெற்றெடுத்த தாயின் இரண்டாவது திருமணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக  2015-ல் முதன்முதலாக ரகசியமாக அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டபோது தான் எதையும் தவறாகவே கருதவில்லை என்றும் அந்த சந்திப்பு வெறும் பகட்டாகவே இருந்தது என்றும் ஜொரெண்டால் குறிப்பிட்டார்.

எனினும் இந்த மாதம் நடைபெற்ற தன் தாயுடனான இரண்டாவது சந்திப்பு மிகவும் அன்பாகவும், இயற்கையாகவும் இருந்தது.  ஏனெனில் மராத்தி மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் ஸ்வீடனில் இருந்து அவர் செய்த தொலைபேசி அழைப்புகளின் மூலம் இந்த இரண்டு பெண்களும் நல்ல உறவுடையவர்களாக மாறியிருந்தனர். இந்த இரண்டாவது சந்திப்பில்தான் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை அவரால் தெரிந்து கொள்ள முடிந்தது.

மருத்துவமனை படுக்கையிலிருந்து கொண்டு அவரை அனாதை இல்லத்தில் விட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டது; மீண்டும் திருமணம் செய்து கொண்டது; தன் முதல் குழந்தையுடனான எல்லா தொடர்புகளையும் வெட்டிக் கொண்டது போன்ற தன் தாய் தன்னிடம் பகிர்ந்து கொண்ட “தகவலை இன்னமும் அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

 “எனது உடல்நலம் குறித்தே (என் தாய்) மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எனக்குத் திருமணம் ஆக வேண்டும் என்பதிலும் அவர் ஆர்வமாக இருந்தார்” என சட்டம் படித்திருந்த போதிலும் வலிப்பு நோய் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடு  ஆகியவற்றால் வேலை செய்ய முடியாமல் போன ஜொரெண்டால் மேலும் குறிப்பிட்டார்.

எனினும் என்னதான் நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஜொரெண்டால் விரும்பினார். எனவே தற்போது 90 வயதாகி, ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் அனாதை இல்லத்தின் கண்காணிப்பாளருக்கு தனது கேள்விகளை அவர் அனுப்பி விட்டு பதிலுக்காகக் காத்திருக்கிறார்.

சட்டரீதியான தேடல்கள்

தன்னைப் பெற்றெடுத்த தாய் ஏன் கைவிட்டார் என்பதை தெரிந்து கொள்ள அவர் புறப்பட்டபோதுதான் 1970களில் இருந்து இத்தகைய சுரண்டலுக்கு ஆளான பல விஷயங்களை, இந்தியாவிலிருந்து இவ்வாறு தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தைகள் சந்திக்கும் சவால்களை தாம் உணர்ந்ததாக தோஹ்லே குறிப்பிட்டார்.

17 வருடப் போராட்டத்திற்குப் பிறகே, தன்னைத் தத்தெடுத்த விவரங்கள் அடங்கிய மூல ஆவணத்தை அணுகுவதில் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் மூலம் அவருக்கு வெற்றி கிட்டியது. பூனேயில் இருந்த தனது தாயை அவர் ஒருவழியாகச் சந்திக்கவும் முடிந்தது. இந்தச் செய்தி பரவியது, ஜொரெண்டாலைப் போன்று குழந்தைகளாகத் தத்தெடுக்கப்பட்ட மற்றவர்களும் அவரை தொடர்பு கொள்ளத் துவங்கினர்.

நாடுகளுக்கு இடையே தத்தெடுப்பு முறையை எதிர்த்து வரும் முன்னணி பிரச்சாரகரும், ஐரோப்பிய கமிஷனில் இருந்து கொண்டு ஊழல்களை அம்பலப்படுத்துபவருமான டச்சு நாட்டைச் சேர்ந்த ரோயெலி போஸ்ட் உடன் இணைந்து 2008-ல் ஆக்ட் அறக்கட்டளை துவக்கிய தோஹ்லே “எனது அடையாளத்தை நிறுவுவதில் மிகுந்த தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது” எனக் குறிப்பிட்டார்.

ஓராண்டிற்குப் பிறகு இவ்வாறு தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பிற்கான  மூல ஆவணங்களை அணுகும் வகையில் இந்தியா விதிகளை தளர்த்தியது.

ஒரு சில வழக்குகளைப் பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு இது மிகவும் சோகமான ஒன்றாக இருந்தது; ஏனெனில் சுரண்டல் குறித்த ஒருவிதமான சித்திரம் அதன் மூலம் வெளிப்பட்டது என்றும் தோஹ்லே கூறினார்.

 “வட்டிக்குக் கடன் கொடுப்பவரால் தர வேண்டிய கடனுக்காக தாயிடமிருந்து பறித்துக் கொள்ளப்பட்ட ஒரு குழந்தையின் வழக்கும் எங்களிடம் வந்தது. வேறொரு வழக்கில் திருமணமாகாத ஒரு பெண் பிரசவத்திற்குப் பிறகு அதற்கான கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் அந்த மருத்துவமனை அந்தக் குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டது.”

தோஹ்லேயின் விஷயத்திலும் கூட அவரது தாயின் ஒப்புதல் இன்றியே அவர் பிரித்து எடுத்துச் செல்லப்பட்டிருந்தார்.

“இது குழந்தை வர்த்தகம்தான். உண்மையான ஒப்புதல் என்ற எதுவும் இதில் இல்லை. அப்படி  ஒப்புதல் இருந்தாலும் கூட, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டனர்” என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்குகள் தத்தெடுப்பு ஏற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படுவதற்கு முன்பான காலத்தைச் சேர்ந்தவை என இந்தியாவின் முக்கிய அமைப்பு இத்தகைய தத்தெடுப்புகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தி வருகின்ற 1990-ல் உருவாக்கப்பட்ட  தத்தெடுப்பு ஆதாரங்களுக்கான மத்திய ஆணையம் குறிப்பிட்டது.

 “எதிர்காலத்தில் இத்தகையதொரு நிலை உருவாகாது. ஏனெனில், குழந்தைகள் சட்டபூர்வமான வகையில் தத்தெடுப்பிற்கு உள்ளன என முறையான ஏற்பாடுகளுக்குப் பிறகு குழந்தைகள் நல குழுவனால் இப்போது அறிவிப்பு செய்யப்படுகிறது” என தத்தெடுப்பு ஆதாரங்களுக்கான மத்திய ஆணையத்தின் (காரா) தலைமைச் செயல் அலுவலர் தீபக் குமார் தெரிவித்தார்.

குழந்தையை தத்தெடுக்க விட்டுக் கொடுக்கத் தயாராக உள்ள தாய்மார்கள் அல்லது தம்பதிகளுக்கு உரிய ஆலோசனை வழங்குவது, குழந்தையின் பெற்றோர்கள் தங்களின் முடிவை மாற்றிக் கொள்ள முடியும் வகையில் அதை மறுபரிசீலனை செய்வதற்கான இரண்டு மாத காலக்கெடு ஆகியவையும் இந்த செயல்பாட்டு முறையில் அடங்கும்.

இத்தகைய ஒழுங்குமுறைகள் மிகவும் கடுமையாக ஆகியுள்ள நிலையில், சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பது அதிகரித்துள்ளது என்றும் குழந்தைக் கடத்தல் வழக்குகள் அதிகமான அளவில் வெளிப்படும் நாடாக இந்தியா மாறியுள்ளது என்ற கவலையை இதற்கான பிரச்சாரகர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

தனியாக இருக்கும் தாய்மார்களை நம்பவைத்து அவர்களிடமிருந்து குழந்தைகளை எடுத்துக் கொண்டு சென்று பின்பு அவற்றை விற்றதற்காக கடந்த ஆண்டு மும்பை காவல்துறை ஒரு கும்பலை கைது செய்தது.  அதே போன்று மருத்துவ மனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் குழந்தை இறந்தே பிறந்தது என்று தாய்மார்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து திருடப்பட்ட குழந்தைகளை மேற்கு வங்க காவல்துறை கண்டுபிடித்தது.

குழந்தையாக தன்னை தத்தெடுத்த தாய் 12 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார் என்று குறிப்பிட்ட  ஜொரெண்டாலைப் போன்றவர்களைப் பொறுத்தவரையில் தனது கடந்த காலத்தை ஒன்றிணைப்பதே முக்கிய கவலையாக இருந்தது.

“ஸ்வீடனில் வாழ்க்கை மிக நன்றாகவே இருக்கிறது. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று நான் எப்போதுமே நினைத்ததில்லை. ஆனால் ஏதோ சரியாக இல்லை என்பதை நான் இப்போது உணர்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->