அமந்தா பெரேரா
யாழ்ப்பாணம், ஆக. 9 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – கடந்த மார்ச் மாதத்தில் கொழும்புவிலிருந்து மஸ்காட் நகருக்கு நற்குலசிங்கம் நேசமலர் விமானப் பயணத்தை மேற்கொண்டபோது, தன் கையில் பிடித்துக் கொண்டிருந்த விமான நுழைவுச் சீட்டு தன் கணவர் உட்பட அனைத்தையும் இழக்கும்படி செய்த பல பத்தாண்டு கால யுத்தத்திற்குப் பிறகு நல்லதொரு வாழ்க்கைக்கான அனுமதிச் சீட்டு என்றே நம்பிக் கொண்டிருந்தார்.
இலங்கையின் முன்னாள் யுத்த களத்தைச் சேர்ந்த அந்த 54 வயது விதவையிடம் வளைகுடா நாடான ஓமனில் வசதியானதொரு குடும்பத்தில் வீட்டு வேலை செய்ய வேண்டியிருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. வசதியான அறை, நியாயமான வேலை நேரம், அவரது கடனை அடைப்பதற்குப் போதுமான அளவில் மாதத்திற்கு ரூ. 30,000 ஊதியம் அவருக்குக் கிடைக்கும் என்று அவரிடம் கூறப்பட்டிருந்தது.
ஆனால் நேசமலரின் கனவு வெகுவிரைவிலேயே அச்சத்தை ஊட்டும் பயங்கர கனவாக மாறிப் போனது. மஸ்காட் நகரிலிருந்து பல மைல் தொலைவில் காற்றோட்டமில்லாத, மிகக் குறைந்த வெளிச்சமுடைய ஓர் அறையில் மேலும் பல பெண்களுடன் தான் அடைக்கப்படும் நிலையை அவர் எதிர்கொள்ள நேரிட்டது. தினமும் அவர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, வெவ்வேறு வீடுகளை சுத்தம் செய்து முடித்தபிறகு, மீண்டும் இரவில் பூட்டி வைக்கப்பட்டார்.
“அங்கே நாங்கள் 15 பேர் இருந்தோம். எங்களுக்குரிய ஊதியமும் வழங்கப்படவில்லை. இறுதியில் இலங்கை அரசு தலையிட்ட பிறகுதான் நாங்கள் வீட்டிற்குத் திரும்ப முடிந்தது “ என மூன்று குழந்தைகளுக்குத் தாயான அவர் கூறினார். அவரது கணவர் 2001ஆம் ஆண்டில் இருந்து காணாமல் போயிருந்தார்.
“இத்தகைய மோதல் சூழ்நிலையை எதிர்கொள்ளாத எவராலும் பச்சிளம் குழந்தைகளை தன்னந்தனியாகவே பராமரிப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை உணர்ந்து கொள்ள முடியாது. யுத்தம் நடைபெற்று வந்த நேரத்திலும் நாங்கள் கஷ்டப்பட்டோம்; இப்போதும் கூட கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்” என இலங்கையின் வட பகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன் வீட்டில் இருந்தபடி அவர் கூறினார்.
சவூதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், ஓமான் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்கள் மிக மோசமாக நடத்தப்படுகின்றனர் என்ற செய்தி பொதுவாகவே தெரிவிக்கப்பட்டு வருவதாகும்.
எனினும் இந்தியப் பெருங்கடலில் உள்ள அந்தத் தீவு நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் விளைவாக விதவைகளான ஆயிரக்கணக்கானோருக்கு போதிய வாய்ப்புகள் இல்லாத நிலையில் வெளிநாடுகளில் அவர்களை அடிமைகளாக விற்கும் ஆட்கடத்தல்காரர்களுக்கு மிக எளிதாக இரையாகின்ற, அதிகரித்து வருகின்ற, எனினும் இதுவரையிலும் பொதுவாக ஒப்புக் கொள்ளப்படாத போக்கை சுட்டிக் காட்டுவதாகவே நேசமலரின் இந்தக் கதை அமைகிறது.
இலங்கைக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூற்றுப்படி இலங்கையின் வடபகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் – இவர்களில் பலரும் பெண்களையே குடும்பத்தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் – 2015, 2016 ஆம் ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை தேடுகின்றனர். 2011ஆம் ஆண்டில் இத்தகைய பெண்களின் எண்ணிக்கை 300 ஆக மட்டுமே இருந்தது என மத்திய வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்ய ஆண்டுதோறும் நாட்டை விட்டு வெளியேறும் 1,00,000க்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த பெண்களை ஒப்பிடும்போது இது மிகக் குறைவான எண்ணிக்கையே ஆகும்” என யாழ்ப்பாணத்தில் இருந்து செயல்படும் அறக்கட்டளையான சோஷியல் ஆர்கனிசேஷன்ஸ் நெட்வொர்க்கிங் ஃபார் டெவலெப்மெண்ட் என்ற அமைப்பின் செயல் இயக்குநரான எஸ். செந்துராஜை தெரிவித்தார்.
“ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் வடக்கிலிருந்து வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்ய மிக அபூர்வமாகவே வெளியே சென்றார்கள் என்ற போதிலும் இதுவும் கூட மிக முக்கியமான எண்ணிக்கையே ஆகும். ஏனெனில் இங்கிருந்தபடி தங்கள் தேவைகளை அவர்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை என்பதே இதன் பொருள்.”
90,000 பேர் விதவைகள்
தனிநாடு கோரி வந்த விடுதலைப் புலிகள் 2009-ல் தோல்வியைச் சந்தித்ததன் மூலம் முடிவுக்கு வந்த 26 ஆண்டுக்கால மோதல்களுக்குப் பிறகு, அமைதி திரும்பிய எட்டாவது ஆண்டில் உள்ளது இலங்கை.
இந்தத் தீவு நாட்டைச் சேர்ந்த பூர்வகுடி மக்களான பெரும்பான்மைத் தமிழர்கள் வசித்து வரும் கிழக்கு, வடக்குப் பகுதிகளிலேயே பெருமளவிற்கு நடைபெற்ற இந்த வன்முறையின்போது 1,00,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; சுமார் 65,000 பேர் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளனர்; பல லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலிருந்து அகற்றப்பட்டனர்.
வடக்குப் பகுதியின் கட்டமைப்பு வளர்ச்சிக்காக அரசாங்கம் பல பில்லியன் டாலர்களை கொண்டு வந்து குவித்த போதிலும், இந்த மோதல்களின்போது தங்கள் கணவரை, தந்தையரை, சகோதரர்களை இழந்து நிற்பதாக மதிப்பிடப்படும் 90,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட உதவி என்பது மிகக் குறைவுதான் என இது குறித்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
பாலின சமத்துவம் என்ற அடிப்படையில் பார்க்கும்போது வடக்குப் பகுதியானது நாட்டில் மிகக் குறைவான வளர்ச்சி பெற்றுள்ள பகுதிகளில் ஒன்றாக அமைகிறது.
தேசிய சராசரியான 35 சதவீதத்தை ஒப்பிடும்போது உழைப்பாளிகளில் பெண்களின் பங்கேற்பு என்பது 21 சதவீதம் மட்டுமே ஆகும் என்று அரசுப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பேறுக்காலத்தில் இறப்போரின் விகிதம் நாடு தழுவிய அளவில் 22 சதவீதமாக இருக்கையில் இது வடக்குப் பகுதியில் 30 சதவீதமாக உள்ளது.
இலங்கையின் வடபகுதியில் உள்ள 2,50,000 குடும்பங்களில் ஐந்தில் ஒரு பகுதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள், இந்த மோதல்களில் கணவரை இழந்து விதவையான நேசமலரைப் போன்ற போர்க்கால விதவைகளை குடும்பத்தலைவராக, அதன் தேவைகளுக்காக பணிபுரிய வேண்டிய நிலையில் உள்ளவர்களைக் கொண்டதாக உள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு மதிப்பிடுகிறது.
எந்தவித வேலையும் இல்லாமல், வாழ்க்கை நடத்துவதற்காக சம்பாதிப்பதற்கான மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ள நிலையில், இந்தப் பெண்கள் – இவர்களில் பலரும் 4 பேர் வரையிலும் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர்கள் – வட்டிக் காரர்களிடமிருந்து கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இது ஆட்கடத்தல் கும்பல்களால் சுரண்டப்படும் நிலைக்கு அவர்களை தள்ளிவிடுகிறது.
“இத்தகைய வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள மிக எளிதாக நம்பச் செய்வதற்கும், இரையாவதற்கும் தகுந்தவர்களாக இவர்கள் உள்ளனர்” என நேசமலரை காப்பாற்றுவதற்காக அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்ட அசோசியேஷன் ஃபார் ஃப்ரண்ட்ஷிப் அண்ட் லவ் என்ற அறக்கட்டளையின் தலைவரான ரவீந்திர டி சில்வா கூறினார்.
கடனில் மூழ்கியுள்ள, வறுமையில் வாடும் பெண்களைத் தேடிச் செல்லும் வேலைக்கு ஆளெடுக்கும் அமைப்புகள் இந்தக் குடும்பங்களில் நன்கு தெரிந்த, நம்பிக்கைக்கு உரிய உள்ளூர் கிராமத்தவர்களை பயன்படுத்திக் கொள்கின்றன.
இந்த அமைப்புகள் நல்ல வேலை, தாராளமான சம்பளம் ஆகியவற்றுக்கு உறுதியளித்து, வசதியானதொரு நாட்டில் நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியும் என்ற கவர்ச்சிகரமான சித்திரத்தை அவர்கள் முன் காட்டுகின்றன. அந்தப் பெண்கள் செய்ய வேண்டியதெல்லாம் சாதாரண ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு, ஒரு சில ஆவணங்களை நிரப்பித் தருவது மட்டும்தான். என்றாலும் பெரும்பாலான நேரங்களில் இந்த வேலை குறித்த விதிமுறைகள், நிபந்தனைகள் பற்றியெல்லாம் ஏதுமறியாதவர்களாகவே இவர்கள் உள்ளனர்.
அந்த வகையில் இது அடிமை உழைப்பிற்கான ஓர் ஒப்பந்தமாகவே ஆகிவிடுகிறது. இங்குதான் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வேலை தேடித்தரும் நிறுவனங்கள் இதற்கான கட்டணம் எதையும் செலுத்த வேண்டியதில்லை என்று இதில் பாதிக்கப்படுவோரை நம்ப வைத்து ஏமாற்றுகின்றன என்றும் டி சில்வா குறிப்பிட்டார்.
நேசமலரை ஓமன் நாட்டுக்கு அனுப்பி வைத்த வேலைவாய்ப்பு நிறுவனம், அவரை வேலைக்கு அமர்த்தியவர் அவருக்கு ரூ. 3,00,000 கொடுத்திருக்கிறார் என்றும், வீட்டிற்குத் திரும்பி வரவேண்டுமானால் அவர் அந்தப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று கூறி அவரை மீண்டும் நாட்டுக்குத் திரும்ப அழைத்து வர மறுத்து விட்டது.
பெரும்பாலானவர்களைப் பார்க்கையில் நேசமலர் கொஞ்சம் அதிர்ஷ்டக்காரர்தான். பல வாரங்களுக்கு இவ்வாறு அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவரோடு அடிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றொரு பெண்ணின் உறவினர் மூலம் இந்தப் பெண்களின் நிலைமையை இலங்கை அதிகாரிகள் தெரிந்து கொண்ட போதுதான் அவர் மீட்கப்பட்டார்.
எனினும் இவ்வாறு பாதிப்பிற்கு ஆளாகுவோரில் பலரும் மீட்கப்படுவதில்லை; அல்லது தங்கள் வீட்டிற்குத் திரும்ப வருவதற்குத் தேவையான பணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதன் விளைவாக இவர்கள் பல ஆண்டுகளுக்கு சுரண்டலுக்கு ஆளாவதோடு, தவறாகவும் நடத்தப்படும் நிலைக்கும் ஆளாகின்றனர். இது குறித்த பெரும்பாலான வழக்குகளில் இவ்வாறு வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் அல்லது வேலைக்கு வைக்கும் முதலாளிகள் கைது செய்யப் படுவதும் இல்லை.
தலைவெட்டப்பட்டவர்கள்; சூடான இரும்புக்கம்பியால் தீக் காயங்கள்
இவற்றில் ஒரு சில வழக்குகள் மட்டுமே பொதுவெளியில் தலைப்புச் செய்திகளாக ஆகின்றன.
2013ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பணிப்பெண்ணின் பொறுப்பில் இருந்த குழந்தை உயிரிழந்தபோது, அவரது கவனக்குறைவால் தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று குற்றம் சுமத்தப்பட்டு, அதற்குத் தண்டனையாக அவர் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். அதைப் போன்றே 2010ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவிலிருந்து மீட்கப்பட்ட 50 வயது பெண் பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சூடு வைக்கப்பட்டிருந்தார் என்பதையும், அவரது தோலிற்குள் உலோகத் துண்டுகள் காணப்பட்டதையும் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இத்தகைய உடல்ரீதியான, மன ரீதியான கொடுமைகள் குறித்த தகவல்கள் வெளியாவது பொதுவாக இருந்த போதிலும், அவமானம், அவப்பெயர் ஆகியவற்றுக்கு பயந்து கொண்டு தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் ரீதியான கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை குறித்துப் பேசுவதற்கு இந்தப் பெண்கள் தயங்குகின்றனர் என்றும் இதுகுறித்த செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான நேரங்களில் இந்தப் பெண்கள் பரம ஏழைகளாகவும், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்குக் கூட இயலாத வகையில் மிகவும் பயந்து போய் உள்ள நிலையில், இந்த ஆட்கடத்தல்காரர்கள் அல்லது வேலையில் அமர்த்திக் கொண்ட முதலாளிகள் ஆகியோரை கைது செய்வதற்கும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் முன்வராத நிலையில், இந்த வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பதிவை தங்களால் ரத்து செய்ய முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலமாகவே செல்வதோடு, அவர்கள் வேலைக்குப் புறப்படுவதற்கு முன்பாக வீட்டுப் பணிப்பெண்களுக்கான 40 நாட்கள் பயிற்சியை முடித்து விட்டே செல்கின்றனர் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தங்கள் விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக யாராவது ஒருவர் புகார் தெரிவித்தால் மட்டுமே அரசாங்கம் இதில் தலையிட முடியும்.
“இந்த (நேசமலரின்) விஷயத்தைப் பொறுத்தவரையில், இந்தப் பெண்களை திரும்பக் கொண்டுவருவதை நாங்கள் உறுதி செய்தோம். இதுபோன்ற இதர வழக்குகள் இருக்குமானால், எங்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்” என வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான அமைச்சர் தலத அடுகொரலே தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.
வடக்குப் பகுதியில் நிலவும் வறுமையே யுத்தத்தினால் விதவைகள் ஆனோரின் சுரண்டலுக்கு வழிவகுக்கிறது என்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் அடுகொரலே கூறியதோடு, இந்தப் பகுதியில் ஆட்கடத்தல்காரர்கள் குறித்து அதிகாரிகள் மேலும் அதிகமான கவனத்துடன் செயல்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
எனினும் இத்தகைய மோதலில் உயிர் பிழைத்தவர்களுக்கு தங்கள் வாழ்க்கையை மீண்டும் புனரமைத்துக் கொள்ளவும், வருமானம் ஈட்டவும் மேலும் அதிகமான உதவி தேவைப்படுகிறது என இது குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
“அரசு, அரசுசார்பற்ற அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் சின்னச் சின்ன முன்முயற்சிகள் ஏராளமாக எடுக்கப்பட்டு வருகின்றன” என சர்வதேச நெருக்கடிக்கான குழுவின் இலங்கை ஆய்வாளரான ஆலன் கீனன் தெரிவித்தார்.
“எனினும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஏராளமான பெண்கள் சந்தித்து வரும் மோசமான நிலைக்கு ஒத்திசைவான அல்லது தேவையான பதில் நடவடிக்கையாக அவை இருப்பதில்லை.”
நேசமலரைப் பொறுத்தவரையில், அவர் வீட்டுக்குத் திரும்பி வந்ததில் இருந்தே வாழ்க்கை மேலும் மோசமாகியுள்ளது. மீண்டும் வளைகுடாவிற்கு வேலைக்குப் போகலாம் என்று அவர் கருதும் அளவிற்கு அந்த நிலை உள்ளது. அவரது கடன் அதிகரித்துக் கொண்டே போகிறது; ஒமானில் ஒரு பாலியல் தொழிலாளியாகத்தான் அவர் இருந்தார் என்று அவரது இனத்தவர்கள் குற்றம் சாட்டும் நிலையில் சமூகத்தின் அவதூறையும் அவர் எதிர் நோக்க வேண்டியுள்ளது.
“வெளியே போவதற்கே தாங்கள் வெட்கப்படுவதாக என் குழந்தைகள் சொல்கின்றன. என்னாலும் கூட வெளியே போக முடியவில்லை. ஒன்று இங்குள்ள மக்கள் என்னைப் பார்த்து நகைக்கிறார்கள்; அல்லது அவர்களுக்கு நான் பணம் கொடுக்க வேண்டியுள்ளது” என்கிறார் நேசமலர். “இதிலிருந்தெல்லாம் தப்பித்து நான் வெளியே போனால்தான், என்னால் கொஞ்சம் பணம் சம்பாதிப்பேன்; எனது கடன்களையும் அடைக்க முடியும்.”
(செய்தியாளர்: அமந்தா பெரேரா; எழுதியவர்: நிதா பல்லா @nitabhalla; எடிட்டிங்: எம்மா பாதா. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)
Our Standards: The Thomson Reuters Trust Principles.