சிறப்புக் கட்டுரை - “கற்பனை இல்லங்கள்” தங்களை அடிமைத்தனத்திலிருந்து விலக்கி வைக்கும் என இந்தியாவின் பாம்பு பிடிப்போர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Wednesday, 23 August 2017 00:00 GMT

Project supervisor Sathish Sivaprakasam at the site of an upcoming residential colony for families rescued from debt bondage in Thiruvannamalai in southern Indian state of Tamil Nadu, August 18, 2017. Thomson Reuters Foundation /Anuradha Nagaraj

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

திருவண்ணாமலை, ஆக. 23 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தேவியும் செல்வமும் தமிழகத்தைச் சேர்ந்த திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள வயல்களைத் தாண்டி தங்களது எம்பாலம் கிராமத்தை அடைந்ததும் முடிவு பெறாமல் இருக்கும் குடிசை வீட்டை பார்த்து வியந்து போய் நின்றனர் அந்த இளம் தம்பதியினர்.

இன்னும் ஒரு சில மாதங்களில் இது எங்களின் வீடாக இருக்கும்என 20களின் இறுதியில் இருக்கும் கற்குவாரி தொழிலாளியான தேவி கூறினார்.

முதல் முறையாக மழையினால் பறந்து போகாத கூறையும், தனிமையை ஓரளவிற்கு உறுதிப்படுத்த நாங்கள் தொங்கவிடும் கிழிந்த துணிக்குப் பதிலாக முறையான கதவு ஒன்றைக் கொண்ட ஒரு வீட்டில் நாங்கள் வசிக்கப் போகிறோம்.”

பாம்புகளைப் பிடிப்பதில் பெயர்பெற்ற பழங்குடிப் பிரிவான இருளர்கள் என்ற, ஒரு காலத்தில் ஊர் ஊராக இடம்பெயரும் பிரிவைச் சார்ந்த தேவியும் செல்வமும் திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி நகருக்கு வெளியே இருக்கும் கிராமப்புற சமூக குடியிருப்பான அப்துல் கலாம் புரத்தின் முதல் குடிவாசிகள் ஆவர்.

முடிவடையும்போது கிட்டத்தட்ட 300 பேர் வசிக்கக் கூடியதாக அமையும் இந்த குடியிருப்பு வளாகம் ஆட்கடத்தல்  வடிவங்களில் இந்தியாவில் மிகவும் பரவலாக நிலவி வரும் கடன் அடிமைத்தனத்தில் பெரும்பாலான நேரங்களில் சிக்கிக் கொண்டு வரும் ‘பெரும் அபாயத்திற்கு’ உட்பட்ட பிரிவினராக அறியப்படும் மிகவும் நலிந்த இனத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு மறுவாழ்வு தருவதற்கான முதல் முயற்சியாக அமையும்.

இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற லாப நோக்கமற்ற அறக்கட்டளையின் கருத்துப்படி தமிழ்நாட்டில் 11 தொழில்களில் 4, 63, 000 கொத்தடிமைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பலரும் திருப்பித் தருவதற்கு பல தசாப்தங்கள் இல்லையென்றாலும் பல ஆண்டுகள் பிடிக்கக்கூடிய வகையில் தான் வாங்கிய கடனுக்காகவோ அல்லது தனது உறவினர் வாங்கிய கடனுக்காகவோ பிணையாக தங்கள் உழைப்பைத் தருமாறு ஏமாற்றப்படுகின்றனர்.

அரசுப் புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இருளர்கள் வசித்து வருகின்றனர்.  இவர்களில் பெரும்பாலோர் கொத்தடிமையினால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். 1976ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்ட போதிலும், இந்தப் கொத்தடிமை செங்கற் சூளைகள், அரிசி ஆலைகள், பாலியல் தொழில் மையங்கள் ஆகியவற்றில் பரவலாக இருந்து வருகிறது.

2030ஆம் ஆண்டிற்குள் 1 கோடியே 80 லட்சத்திற்கும் மேற்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை கடந்த ஆண்டு இந்திய அரசு அறிவித்தது. நவீன அடிமைத்தனத்தினை சமாளிப்பதற்கான தனது முயற்சிகளின் ஒரு பகுதியாக தொழிலாளர்களின் இழப்பீட்டுத் தொகையையும் அது ஐந்து மடங்கு அதிகரித்தது.

எனினும் பாரம்பரியமாக பாம்பு பிடிப்பவர்களாக இருந்து வரும் இருளர் மக்கள், நீர்நிலைகளுக்கு அருகே தற்காலிக இல்லங்களை உருவாக்கிக் கொண்டு வாழும் அவர்கள் மீண்டும் அடிமைத்தனத்தில் விழமாட்டார்கள் என உறுதிபடச் சொல்வது மிக கடினம் என்கிறார்கள் பிரச்சாரகர்கள்.

இவர்களுக்கென நிரந்தரமான வீடின்றி, குறைவான வேலைவாய்ப்புகள் உள்ள நிலையில் செலவு குறைவான, பருவ காலத்திற்கான தொழிலாளர்களை தேடி அலையும் இடைத்தரகர்களுக்கு இவர்கள் மிகவும் எளிதான இரையாக அமைகிறார்கள் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்

Devi and Selvam outside their future home in Thiruvannamalai, India, August 18, 2017. Thomson Reuters Foundation /Anuradha Nagaraj

 ‘கற்பனை இல்லங்கள்’

நாட்டின் மிகவும் முழுமையான திட்டமாக விளங்கும் இந்த மறுவாழ்வுத் திட்டம் தமிழ்நாடு அரசின் இளம் அதிகாரியான பிரபுசங்கர் தங்கராஜ் குணாளன் உருவாக்கிய திட்டமாகும். 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்குப் பிறகு வீடிழந்து நின்ற இருளர்களை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

மிக மலிவான தொழிலாளர்கள் நிரம்பிய பகுதியின் பொறுப்பாளராக இருந்த 34 வயது குணாளன் தனது அலுவலகத்திற்குச் சென்று கொத்தடிமைத்தனத்தில் மீண்டும் வீழ்ந்து விடாமல் மக்களைத் தடுக்க புதியதொரு யுத்தியை உருவாக்கத் தொடங்கினார்.

“இவ்வாறு மீட்கப்பட்டு, வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களின் மறுவாழ்வு எங்கள் மீது விழுந்தது” என  பயிற்சி ரீதியாக ஒரு மருத்துவரான குணாளன் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

 “அவர்கள் திரும்பி வந்தபோது, அவர்களை அனுப்புவதற்கு சொந்தமாக ஒரு வீடு கூட அவர்களுக்கு இல்லை. தற்போதுள்ள மறுவாழ்வுக்கான செயல்பாடுகளும் கூட பெயரளவிற்கு தான். நீடித்து நிற்கக் கூடிய ஒன்றை உருவாக்கவே நான் விரும்பினேன்.”

“பண்ணை வகையிலான ஒரு கற்பனைத் திட்டம்’தான் அது என்று குணாளன் குறிப்பிடும் கிராமப்புற மக்களுக்கு நகர்ப்புற வசதிகளைத் தரவேண்டும் என்று விரும்பிய முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பெயரில் அமைந்த அப்துல்கலாம் புரம் என்ற இடத்தின் வரைபடத்தை  அடுத்த சில மாதங்களில் வரைந்தார் அவர்.

தானாகவே நிலைத்து நிற்கும்படியான குழுவாழ்க்கையாக திட்டமிடப்பட்ட அப்துல் கலாம் புரம் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்; கால்நடைகளுக்கான கொட்டகை, தீவணப் பண்ணை, மக்களின் பொது நிகழ்வுகளுக்கான மையம், இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட ஒவ்வொரு வீட்டிற்கு கழிப்பறை என ஒருங்கிணைந்த இருளர் வாழ்க்கை மையமாக அது விளங்குகிறது.

இத்திட்டத்தின் முதல் கட்டம் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டிலானது இது நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இத்தருணத்தில் அது 43 குடும்பங்களைக் கொண்டதாக இருக்கும்.

வாழ்வாதார பயிற்சி

மிகவும் அபூர்வமான வகையில் பல்வேறு அரசு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியுள்ள  இத்திட்டம் இப்பகுதியில் பலராலும் பேசப்படும் தலைப்பாக மாறியுள்ளது. 

இந்தத் திட்டத்தை மேற்பார்வையிட்டு வரும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் சதீஷ் சிவப்பிரகாசம் கூறுகையில் “குறைந்தபட்சமாக இத் திட்டம் மிக தொலைநோக்கு கொண்டதொரு திட்டமாகும்.” என்றார்.

“அந்த இடம் முழுவதுமே சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாக அமைந்துள்ளது. மிக வேகமாகவும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இருளர்களைப் பொறுத்தவரையில் இவை அவர்களுக்கு கனவு இல்லங்கள் ஆகும்.”

    அப்துல்கலாம் புரத்தில் வசிப்பவர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்ய இரண்டாவது கட்டத்தில் வாழ்க்கை வசதிகளுக்கான மையம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மதராஸ் கிறித்துவக் கல்லூரியின் மாணவர்கள் முன்னாள் கொத்தடிமைகள் இங்கு குடியேற மறுபயிற்சியினை வழங்கி வருகின்றனர்.

விஷம் எடுக்கும் பிரிவு, பாரம்பரிய மருத்துவ மூலிகைகளை வளர்ப்பதற்கான தோட்டம், கரி உருவாக்கும் பிரிவு, செங்கற்சூளைகள் ஆகியவை இந்தக் குழுவினரின் உள்ளார்ந்த வலிமைகளைப் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அமையும்.

தேவிக்கும் செல்வத்திற்கும் இந்தச் செயல்முறை “நம்பவே முடியாத ஒன்றாக” இருக்கிறது.

வீடுகளுக்கு வண்ணமடிப்பதை பார்க்கும் அந்தத் தம்பதியினர் தங்கள் வீட்டுக்குப் பின்னால் ஒரு மாட்டுக் கொட்டகையை கற்பனையில் தீட்ட முயற்சித்தபடி “இது மிகவும் அழகாக இருக்கிறது” என்று கூறினர்.

குணாளனைப் பொறுத்தவரை இது பாராட்டே ஆகும்.

“இத்திட்டம் பற்றி நான் முதலில் சிந்திக்கத் துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று ஏதோ கொஞ்சம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற திருப்தி உருவாகியுள்ளது.” என அவர் குறிப்பிட்டார். “நியாயமாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டியதைத்தான் இருளர்கள் பெறுகின்றனர்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.