×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புக் கட்டுரை – ரூ. 500க்கு விற்கப்பட்ட குழந்தை அடிமை தன் பணிப்பெண் வாழ்க்கையை திறந்து காட்டுகிறார்

Tuesday, 24 October 2017 12:03 GMT

Tea garden workers arrive to weigh tea leaves after plucking them from a tea estate in Jorhat in Assam, India, in this 2015 archive photo. REUTERS/Ahmad Masood

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

பிஸ்வநாத், அஸ்ஸாம், அக். 24 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தன் முழங்காலுக்கு சற்று கூட உயரம் இருந்த போதுதான் படாய்க்கின் தந்தை அவளை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றார். பசுமை நிரம்பிய தேயிலைத் தோட்டங்கள் வழியாக நடந்து சென்று, ஒரு பஸ்ஸில் ஏறி, ‘எங்கோ ஓர் இடத்தை’  அவர்கள் அடைந்தனர்.

அவள் அந்த இடத்தைச் சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அவளது தந்தை அந்த இடத்தை விட்டுக் கிளம்பி  தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்று விட்டார். ‘அழகானதொரு வீட்டின்’ வாசலில் அவளை விட்டுவிட்டுச் சென்றிருந்தார் அவர்.

வெறும் ரூ. 500க்கு அவளை அடிமைத்தனத்திற்கு விற்றுவிட்டுப் போயிருந்தார் அவர்.

வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்தபடியே படாய்க் வளர்ந்திருந்தார். அண்டை மாநிலமான அஸ்ஸாமில் தேயிலை தோட்டம் ஒன்றில் இருந்த அவரது வீடு அங்கிருந்து சுமார் 50 கிலோமீட்டர் (30 மைல்கள்) தூரத்தில்தான் இருந்தது.

2016ஆம் ஆண்டில் தற்செயலாக, தன்னைப் போன்ற ஒரு பணிப்பெண்ணை சந்தித்த பிறகுதான் – அந்தப் பதின்பருவப் பெண்ணும் கூட இதே போன்று விற்கப்பட்டவர்தான் – அவர் தன் வீடுநோக்கிய பயணத்தைத் துவங்கினார். குழந்தைகளைக் கடத்திச் செல்பவர்கள்  மாநில எல்லைகளைக் கடப்பதற்குப் பயன்படுத்தும் சந்து பொந்துகளின் வழியாகவே படாய்க் மீண்டும் தன் பயணத்தை மேற்கொண்டார். இறுதியாக தன் தாயையும் தன் பழைய வீட்டையும் அவர் கண்டுபிடித்தார்.

அஸ்ஸாம் மாநிலத்தின் பிஸ்வநாத் மாவட்டத்தில் ஒரு தேயிலைத் தோட்டத்தின்  மத்தியில் அமைந்திருக்கும் புதுபுருபாரி கிராமத்தில் அமர்ந்தபடி “இப்போது எனக்கு 16 அல்லது 17 வயது இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம்  அவர் கூறினார்.

அவர் பிறந்தது இந்த இடத்தில்தான், என்றாலும் இதைப் பற்றி அவருக்கு மிகச் சிறிதளவே நினைவில் இருக்கிறது.

“நான் மிகச் சிறியவளாக இருக்கும்போதே இந்த இடத்தை விட்டுப் போய்விட்டேன். நன்கு வளர்ந்தபிறகு திரும்பி வந்தேன். எனது குடும்பம், எனது மொழி, எனது வீடு என்று எல்லாவற்றையுமே நான் மறந்து விட்டேன். இப்போது மெதுவாக இவற்றோடு மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வருகிறேன்.”

வழியைக் கண்டுபிடித்து அவர் மீண்டும் திரும்பி வந்த வகையில் அவர் மிகவும் அதிர்ஷ்டக்காரிதான் என்று கிராமத்தினர் கூறுகின்றனர்.

செழிப்பான தேர்வுகள்

வறுமை மிக ஆழகாக வேரூன்றியுள்ள அஸ்ஸாம் மாநிலத்தின் தேயிலைத் தோட்டங்களில் லட்சக் கணக்கில் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர் என இது குறித்த சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 “இடைத்தரகர்களும், சில நேரங்களில் அருணாச்சல பிரதேசத்திலிருந்து குடும்பங்களும் இந்தத் தேயிலைத் தோட்டங்களுக்கு வண்டிகளில் வந்து கண்ணில் தென்படும் எந்தவொரு குழந்தையையும் எடுத்துக் கொண்டு போய் விடுகின்றனர்” என குழந்தைக் கடத்தல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்திவரும் லாபநோக்கற்ற அறக்கட்டளையான ஜாக்ரிதி சமிதியைச் சேர்ந்த மோனி தர்னால் குறிப்பிட்டார்.

“மூன்று அல்லது நான்கு வயது குழந்தைகளையே அவர்கள் எடுத்துக் கொண்டு செல்கின்றனர். இதன் மூலம் வீட்டு வேலைகளைச் செய்வதற்கு அவர்களை பயிற்றுவிக்க முடிகிறது. இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்கமாகவும் இருக்கிறது. இந்த விஷயம் இவ்வளவு எளிமையாகத்தான் இருக்கிறது.”

உலகம் முழுவதிலும் 5 முதல் 14 வயது வரையுள்ள 16 கோடியே 80 லட்சம் குழந்தைத் தொழிலாளர்களில் 40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் உள்ளனர் என 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. எனினும் வறுமையின் விளைவாக மேலும் பல லட்சக்கணக்கானவர்கள் இத்தகைய அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றனர் என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விவசாயப் பண்ணைகளிலும், நால்வரில் ஒருவர் உற்பத்தித் தொழில்களிலும், மற்றவர்கள் வீடுகளிலும் ஓட்டல்களிலும் பாத்திரங்களைக் கழுவியபடி, காய்கறிகளை நறுக்கியபடி, தரைகளை தேய்த்து சுத்தம் செய்தபடி இருக்கின்றனர்.

அவசரமாகப் பணம் தேவைப்படுகின்ற பெற்றோரால் ஒரு சில நூறு ரூபாய்களுக்கும் சில நேரங்களில் லாபத்தை மட்டுமே பார்க்கும் இடைத்தரகர்களால் ரூ. 1 லட்சத்திற்கும் (1,540 அமெரிக்க டாலர்கள்) மேலாகவும் குழந்தைகள் விற்கப்படவும் கூடும் என குழந்தைகளின் உரிமைகளுக்கான சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

“கடந்த திங்கட்கிழமையன்று ஒரு முன்னாள் அமைச்சர் வீட்டிலிருந்து ஒரு குழந்தையை நாங்கள் மீட்டெடுத்தோம்” என அருணாச்சலப் பிரதேச மாநில தலைநகரான இட்டாநகரில் குழந்தைகளுக்கான உதவிச் சேவையை நடத்தி வரும் ஜும்டும் மிங்கா கூறினார்.

 “அவரைப் போலவே இவ்வாறு குழந்தைகளை வேலைக்கு வைத்திருக்கும் பெரும்பாலான முதலாளிகள் செல்வாக்கு மிக்கவர்களாக, அவர்களில் பலரும் அரசில் பொறுப்புகளை வகிப்பவர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே குழந்தைகளை வேலைக்கு வைத்திருக்கின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு எந்தவித ஊதியமும் கொடுக்கத் தேவையில்லை. குழந்தைகளும் அதைக் கோரும் நிலையில் இல்லை. எனவே இந்த முதலாளிகள் அவர்களை தங்களின் தனிப்பட்ட சொத்தாகவே பாவிக்கின்றனர்.”

2016 ஜனவரியிலிருந்து 2017 ஜூலை வரை இட்டாநகரில் செயல்படும் குழந்தைகளுக்கான உதவி சேவை அந்த நகரத்தில் குழந்தைத் தொழிலாளர் பற்றிய 91 புகார்களைப் பதிவு செய்திருந்தது. இதில் 26 குழந்தைகளை மீண்டும் அவர்களது வீட்டோடு சேர்த்து வைத்தது.

தாங்கள் எங்கிருந்து வந்தோம் என்பது மற்ற குழந்தைகளுக்குத் தெரியவில்லை.

அவர்கள் வெறும் ‘தேயிலைத் தோட்டத்துக்  குழந்தைகள்’ அவ்வளவுதான். அவர்கள் தங்களது பெற்றோருடன் எந்தவித தொடர்பும் இல்லாதிருப்பதை உரிமையாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்கின்றனர் என இதுகுறித்த சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 “இந்த நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டு வருகிறது” என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் அஸ்ஸாமைச் சேர்ந்த அறக்கட்டளையான பஜ்ராவைச் சேர்ந்த  ஸ்டீஃபன் எக்கா குறிப்பிட்டார்.

உலகத்தின் மிகப்பெரிய அஸ்ஸாம் தேயிலைத் தொழிலானது கடந்த பல வருடங்களாகவே நெருக்கடியில் இருந்து வருகிறது. கொத்தடிமைத்தனம், மோசமான சுரண்டல் நிரம்பிய வேலை நிலைமைகள் ஆகியவை குறித்த புகார்கள் இத்தொழிலின் மீது சுமத்தப்படுகிறது. இது தொழிலாளர் தொடர்பான சச்சரவுகளுக்கு இட்டுச் செல்வதோடு, ஒரு சில தேயிலைத் தோட்டங்கள் மூடப்படுவதற்கும் இட்டுச் செல்கிறது.

கொத்தடிமை ஆவதற்கான அபாயம் அதிகரித்து வருகிறது என குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அஸ்ஸாம் கமிஷனின் தலைவரான சுனிதா சங்காகதி கூறினார்.

 “பல குழந்தைகளின் குழந்தைப் பருவங்கள் காணாமல் போகின்றன” என அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.  “விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆட்கடத்தல், குழந்தைத் தொழிலாளர் முறை ஆகியவற்றை தடுப்பதற்கும் நாங்கள் மிகுந்த அவசரத்தோடு வேலை செய்து வருகிறோம். இது மிகவும் கடினமானதொரு வேலைதான்.”

ஒரு மூடியைத் திறக்கும்போது

குழந்தை அடிமைத் தனத்துடன் கூடிய வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை நேரடியாகத் தெரிந்து கொள்ள முடிந்த வகையில் படாய்க்கின் விஷயம் மிகவும் அபூர்வமானதுதான். ஏனென்றால் அவர்களை விற்றபிறகு அந்தக் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி அதிகமாக எதுவுமே தெரிவதில்லை.

“முதலில் நான் எந்த வேலையும் செய்யவில்லை என்பது என் நினைவில் இருக்கிறது. வீட்டில் வெறுமனே விளையாடிக் கொண்டுதான் இருந்தேன்.” என்று படாய்க் நினைவு கூர்ந்தார்.

“பின்பு பூண்டு எப்படி உரிப்பது என்று எனக்குக் காண்பித்தார்கள். சிறிது நாட்கள் கழித்து எப்படி பெருக்கித் துடைப்பது என்பதையும், பின்பு பாத்திரங்களைக் கழுவுவது, துணி தோய்ப்பது போன்றவற்றையும் கற்றுத் தந்தார்கள். இது எல்லாமே படிப்படியாகத்தான் நடந்தது. எனக்கு எட்டு வயதாக இருக்கும் போது இந்த வேலைகள் அனைத்தையுமே என்னால் செய்ய முடியும்.”

நாளொன்றுக்கு அவர் 17 மணி நேரம் வேலை செய்து வந்திருக்கிறார். வீட்டை விட்டு வெளியே போக அனுமதிக்கப்படவே இல்லை. நண்பர்கள் என்று எவருமில்லை. படாய்க் வளர்ந்துவிட்ட பிறகு, அவருக்கு மாத சம்பளம் ரூ. 100 (1.54 அமெரிக்க டாலர்கள்) என்று சொல்லப்பட்டது.

“அதை வங்கியில் போட்டு வருவதாக வீட்டு எஜமானி என்னிடம் சொன்னார். எனக்கு உடல் நிலை சரியில்லாதபோதோ அல்லது எனக்கு ஏதாவது தேவைப்படும்போதோ அவர்கள் அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.”

இந்த குழந்தைத் தொழிலாளர்களுக்கு உணவும் தங்குமிடமும் கொடுப்பதே போதுமானது என்று பெரும்பாலான உரிமையாளர்கள் நம்புகின்றனர் என பெயர் சொல்ல விரும்பாத அருணாச்சல பிரதேச மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“இதற்கான தேவை இருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது. இது சட்டத்திற்குப் புறம்பானது என்பதாக பல குடும்பங்களும் நினைப்பதில்லை. நடவடிக்கை எடுக்கும் வகையில் எந்தப் புகாரும் எங்களிடம் மிக அபூர்வமாகவே வருகிறது” என அவர் குறிப்பிட்டார்.

முகத்தில் விட்ட அறை

தன்னைப் போன்ற வேலைக்காரப் பெண்ணை எதேச்சையாக சந்தித்த பிறகு தன் வீட்டிற்குத் திரும்பிப் போவதற்கான வழிகளை படாய்க் தேடத் துவங்கினார்.

வேறு ஒருவரிடமிருந்து வாங்கிய கைபேசியைக் கொண்டு தன் உறவினர் ஒருவரைக் கண்டுபிடிக்கும் வரை ஒரு எண்ணிலிருந்து மற்றொரு எண்ணை அவர் அழைத்துக் கொண்டே இருந்தார்.

திரும்பிப் போக வேண்டும் என்று உறுதியோடு இருந்த படாய்க் தனது எஜமானர்களிடம் உதவி கோரினார்.

அவர்கள் உதவி செய்ய மறுத்ததோடு, அவரை அடைத்தும் வைத்தனர்.

“குடும்பத்தில் ஒருவராகத்தான் தன்னை வைத்திருப்பதாக எஜமானி என்னிடம் சொன்னார். ஆனால் நான் வளர்ந்த பிறகு அவர்கள் என் குடும்பத்தினர் இல்லை என்பதை நான் தெரிந்து கொண்டேன்” என அவர் சொன்னார்.

 “அவரது மகள் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்ததையும் கடந்த 10 ஆண்டுகளில் நான் எனது வீட்டிற்கே போகவில்லை என்பதையும் நான் எஜமானிக்கு எடுத்துச் சொன்னேன். இறுதியில் அவர் ஒப்புக் கொண்டார்.”

கடந்த ஆண்டும் புதிய புருபாரி கிராமத்திற்குள் படாய்க் அடியெடுத்து வைத்தபோது அந்த கிராமத்தின் சர்ச் எங்கே இருக்கும் என்பது மட்டுமே அவரது நினைவில் இருந்தது.

“எனது உறவினர் என்னை தூக்கிச் சென்றார். என் அம்மா கட்டி அணைத்து அழுதபோது என் அப்பா ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார்.” என அவர் சொன்னார்.

“நான் அவரது கன்னத்தில் அறைந்தேன். என்னை அங்கே அப்படியே விட்டுவிட்டு நான் எப்படி இருக்கிறேன் என்று விசாரிக்கக் கூட வராமல் எப்படி அவரால் இருக்க முடிந்தது? நான் ஒன்றும் அநாதை அல்ல; என்றாலும் நான் எப்போதும் ஒரு அனாதையைப் போலத்தான் உணர்ந்து வந்தேன்.”

இப்போது ஒரு கடைசி வேலையாக படாய்க் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சிறு சிறு வழிகளில் போய் வந்து கொண்டிருக்கிறார். தன்னைப் போலவே வீட்டு வேலை செய்வதற்காக அவரது தந்தையால் விற்கப்பட்ட தனது தங்கையைக் கண்டுபிடிக்கும் வேலையில் அவர் இப்போது ஈடுபட்டுள்ளார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: லிண்ட்ச்ய கிரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->