×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

கொத்தடிமைப் பொறியிலிருந்து இடம்பெயரும் ஒடிசா தொழிலாளர்களை பாதுகாக்க செயலியும் கடன் அட்டையும்

Tuesday, 21 November 2017 14:02 GMT

Rescued bonded labourer Srikrushna Rajhansiya recalls his days in bondage outside his home in Sargul village in the eastern Indian state of Odisha, August 31, 2016. Picture taken August 31, 2016. THOMSON REUTERS FOUNDATION/Anuradha Nagaraj

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, நவ. 21 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - ஒடிசா மாநிலத்தின் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வேலை தேடி இலையுதிர் காலத்தில் இடம்பெயரும் தருணத்தில் அவர்களது பயணம் அடிமைத்தனத்தில் முடிவடையாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசு முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

வசந்த கால விதைப்புப் பருவம் வரை நீடிக்கும் இந்த பருவகால இடம்பெயர்தலின் ஒரு பகுதியாக நவம்பர் மாதத்தில் கிராமப்புற ஒடிசாவில்  குடும்பங்கள் தங்கள் கிராமங்களிலிருந்து வெளியேறுவதைக் காண முடியும்.

வறட்சியும், மிக மோசமான வறுமையும் ஆண்களையும் பெண்களையும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள தொழிலாளர் ஏஜெண்டுகளிடமிருந்து கடன் வாங்கக்  கட்டாயப்படுத்துகின்றன. அடுத்த ஆறுமாதங்களுக்குத் தங்கள் கடனை அடைப்பதற்காக அவர்கள் –பொதுவாக செங்கல் சூளைகளில் – வேலை செய்கின்றனர். இவ்வாறு ‘கடனுக்காகக் கட்டுண்டு கிடப்பது’ என்பது ஒருவகையான அடிமைத்தனம் என்றே மனித உரிமைகளுக்கான குழுக்கள் குறிப்பிடுகின்றன.

எனினும் இத்தகைய தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கென ஒரு சில நடவடிக்கைகளை ஒடிசா மாநில அரசு இந்த ஆண்டு துவக்கியுள்ளது. 24 மணிநேரமும் வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படுகின்ற உதவி மையத்தில் எளிதாகப் பதிவு செய்து கொள்ள உதவி செய்யும் இணைய வழி செயலி, பாதுகாப்பான கடன்களுக்கான கடன் அட்டைகள், செங்கல் சூளை உரிமையாளர்களுடன் வேலைக்கான ஒப்பந்தம் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதாக இவை அமைந்துள்ளன.

“கடந்த பல ஆண்டுகளாகவே ஒடிசாவிலிருந்து இடம்பெயர்ந்த கொத்தடிமைத் தொழிலாளர்கள் குறித்தும், அவர்கள் மீட்கப் பட்டது குறித்தும் தொடர்ச்சியான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன” என இடம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த விஷயங்களை கவனித்து வரும் தொழிலாளர் நலத்துறையின் ஒரு பிரிவாக செயல்படும் மாநிலங்களுக்கு இடையிலான இடம்பெயர்வோருக்கான பிரிவின் ஆலோசகரான பி.பி. ஆச்சார்யா கூறினார்.

“பாதுகாப்பான இடம்பெயர்தல், மேலும் நல்ல வாழ்க்கைக்கான வாய்ப்புகளை வழங்குதல் ஆகிய இரண்டு அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில், இதுவரையில் வந்தவகைகளில் இது மிகவும் முழுமையானதொரு திட்டமாக விளங்குகிறது”

ஒடிசாவிலிருந்து 1,00,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆண்டுதோறும் இடம்பெயர்கின்றனர் என்றும், அவர்களில் பெரும்பாலோர் செங்கல் சூளைகளில் போய்ச் சேருகின்றனர் என்றும், இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட செங்கற்களை அறுத்து, வடிவமைத்து, சுட்டெடுக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் வாங்கியிருந்த கடனைத் திருப்பித் தருவது என்ற பெயரில் அவர்களின் ஊதியம் பிடித்துக் கொள்ளப்படுகிறது.

தாங்கள் வாங்கிய ரூ. 20,000 கடனை திருப்பிச் செலுத்துவதற்காக அடுத்த ஆறு முதல் எட்டு மாத காலத்தில் கிட்டத்தட்ட 7,00,000 செங்கற்களை தயாரிக்க வேண்டியிருக்கிறது.

“தொடர்ந்து நீடித்து வரும் வறட்சிகள், இறுதியில் அடிமைத்தனத்தில் கொண்டு செல்கின்ற இத்தகைய முன்பணமாக பணத்தைப் பெற்றுக் கொள்ளும் முறையினை உருவாக்கியுள்ளன” என இத்தகைய தொழிலாளர்களைக் கண்டறிவதற்காக அரசுடன் இணைந்து செயல்பட்டு வரும் அறக்கட்டளையான டாட்டா டிரஸ்ட்-ஐச் சேர்ந்த மேரி சுரின் தெரிவித்தார்.

இத்தகைய இடம்பெயர்தலில் ஈடுபடும் 11 மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட 300 கிராமங்களில் பாதிப்பிற்கு ஆளாகக் கூடிய நிலையில் உள்ள 28,000 குடும்பங்களை ஒடிசா அரசு கண்டறிந்துள்ளது.

இவ்வாறு இடம்பெயர்வதற்கு முன்னதாக இணையம் வழியாகப் பதிவு செய்து கொள்ள கிராமப் புற மக்களை அனுமதிக்கும் ‘ஷ்ராமிக் சஹாயதா’ (தொழிலாளர்களுக்கான உதவி) என்ற செயலியையும், உதவிமையங்களையும், இடம் பெயர்பவர்களுக்கென்றே செயல்படும் தொலைபேசி உதவிசேவையையும் மாநில அரசு இந்த ஆண்டு துவக்கியுள்ளது.

“அடுத்த ஆறு முதல் எட்டு மாத காலத்திற்கு வேலை செய்வதற்காக இவர்கள் சென்று சேருகின்ற மாநிலங்களில் ஐந்து உதவி மையங்களை நாங்கள் நிறுவியுள்ளோம்” என ஒடிசா மாநில தொழிலாளர் நல ஆணையர் சச்சின் ராமச்சந்திர ஜாதவ் கூறினார்.

 “ஏற்கனவே செயல்பட்டு வரும் கட்டணமில்லா தொலைபேசி மையங்களோடு கூடவே, ஒவ்வொரு கட்டத்திலும்  தொழிலாளர்களுக்கு உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

அதைப் போன்றே ஏஜெண்டுகளை நீக்கவும், கடனுக்கான அடிமைத்தனம் என்ற வழக்கத்திற்கு முடிவு கட்டவும் ஒரு முயற்சியாக தென் மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகியவற்றில் உள்ள 100 செங்கற்சூளை உரிமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே நேரடியான ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் ஒடிசா மாநில அரசு உதவியுள்ளது.

 “இவர்களை சுரண்டி வரும் இடைத்தரகர்கள் மெதுவாக காணாமல் போய் விடுவார்கள்” என ஜாதவ் கூறினார்.

“வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளைப் பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்கவும் நாங்கள் வங்கிகளுடன் இணைந்து செயலாற்ற முயற்சித்து வருகிறோம். இதன் மூலம் அவர்கள் தொழிலாளர்களுக்கான கடன் அட்டைகள் மூலம் முன்பணத்தையும் பெற முடியும்”

இத்திட்டம் 2018 மார்ச் மாதத்திற்குள் 25 லட்சம் தொழிலாளர்களை  சென்றடையும் என்று நம்பப்படும் இத்திட்டமானது அவர்கள் இந்த அமைப்பிற்குள் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர் என்பதையும், பாதுகாப்பான இடம்பெயர்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இருப்பதையும் உறுதி செய்வதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->