×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

அடிமைத்தனத்தில் ஆழ்த்தப்பட்டிருந்த சிறுமியை காவல்துறை மீட்டது உயர்வகுப்பினர் குடியிருப்புகளை சோதனையிடத் தூண்டியுள்ளது

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Wednesday, 6 December 2017 14:06 GMT

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, டிச. 6 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - வீட்டு வேலை செய்பவர்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், நான்காண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த 13வயது சிறுமியை மீட்டதைத் தொடர்ந்து தென் இந்தியாவிலுள்ள உயர்வகுப்பினர் வசிக்கும் குடியிருப்புகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளனரா என்பதை காவல்துறை விசாரிக்கவுள்ளது.

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான பிரச்சாரகர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து திங்கட்கிழமையன்று மாலை காவல்துறையினர் அந்தச் சிறுமியை மீட்டதோடு, அவளை வேலைக்கு அமர்த்தியிருந்த ஒரு வியாபாரி, அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் இந்தியாவின் குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்த்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

“இவ்வாறு வீட்டு வேலையாட்களாக அமர்த்தப்பட்டுள்ள பெரும்பாலான குழந்தைகள் ஏழைகள் என்பதோடு, வேலை, உணவு, இருப்பிடம் ஆகிய வசதிகளுக்காக பெற்றோரே தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்” என தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் செயல்பட்டு வரும் சைபராபாத் பகுதியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஹரீஷ் சந்திர ரெட்டி கூறினார்.

“நாங்கள் இப்போது குழந்தைகளை வேலைக்கு வைத்திருக்கிறார்களா? என்பதை சோதிப்பதற்காக இரண்டடுக்கு வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், தனிப்பாதுகாப்புடைய குடியிருப்பு வளாகங்கள் ஆகியவற்றுக்கு எங்கள் ஆட்களை அனுப்பவிருக்கிறோம். இதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் தெரிவித்தார்.

சொந்த ஊரிலிருந்து 200 கிலோமீட்டர் (124 மைல்கள்) தூரத்தில் இருந்த அந்தக் குடியிருப்பு வளாகத்திலிருந்து வெளியேற விடாமல் நான்கு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு அந்தச் சிறுமி உடலளவிலும் பெரிதும் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் செயல்பாட்டாளர்கள் குறிப்பிடும் அந்தச் சிறுமியின் பெற்றோரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

“அந்தச் சிறுமியின் திருமணத்தின் போது நிதியுதவி செய்வதாக உறுதியளித்ததன் காரணமாகவே அந்தச் சிறுமியின் பெற்றோர் அந்த வியாபாரியின் வீட்டில் வேலை செய்ய அனுப்புவதற்குச் சம்மதித்தனர்” என இது குறித்த எச்சரிக்கை மணியை ஒலித்த பாலால ஹக்குல சங்கம் என்ற குழந்தைகளின் உரிமைகளுக்கான குழுவின் தலைவர் அச்சுத ராவ் கூறினார்.

இந்த ஆண்டில் பெரும்பாலும் வீட்டு வேலை செய்கின்ற 300 குழந்தைகளை விடுவிப்பதற்கு இந்த அறக்கட்டளை உதவியுள்ளது.

“பொதுமக்களின் கண்ணில் படாமல் இருப்பதன் விளைவாக, வீட்டு வேலைக்காரர்களாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள இந்தக் குழந்தைகள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் கொடுமைக்கு ஆளாகும் நிலையில் உள்ளனர்” எனவும் அவர் கூறினார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் செல்வச் செழிப்பு, உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் நிலை ஆகியவை வீட்டு வேலைக்கான ஆட்களின் தேவையை அதிகரித்துள்ளது. இந்தத் துறை பெருமளவிற்கு ஒழுங்குபடுத்தப்படாத ஒரு துறையாகவே நீடித்து வருகிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் தென் இந்திய பெருநகரமான பெங்களூரில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்துவந்த 12 வயது சிறுமி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார்.

ஐந்து வயதிற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடைய கிட்டத்தட்ட 60 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

தங்கள் மகள்களை வேலைக்கு அனுப்ப வேண்டிய நிலையில் உள்ள குடும்பங்களை நம்ப வைக்க ஆட்கடத்தல்காரர்கள் பெரும்பாலும் ஏழ்மை நிரம்பிய கிராமங்களையே குறிவைக்கின்றனர் என குழந்தைகளின் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

“குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான சட்டங்களைக் கண்டு மக்கள் இப்போது பயப்படுவதேயில்லை. வீட்டு வேலைக்காக குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது வழக்கமானதொரு நடைமுறையாகவே உள்ளது” என ராவ் கூறினார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: கேட்டி மிகிரோ. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->