இந்தியாவில் கடனில் மூழ்கியிருக்கும் வீட்டுப் பணிப்பெண்கள் வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற ஊதியத்தைக் கோருகின்றனர்

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Wednesday, 13 December 2017 13:43 GMT

A woman prays as she touches the wall of a temple during Navratri festival in Kolkata, India March 31, 2017. REUTERS/Rupak De Chowdhuri

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, டிச.13 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - வேலையிலிருந்து ஒரு நாள் விடுப்பு எடுப்பதற்காக உடல்நிலை சரியில்லாததுபோல் நடித்த முத்துக்கனி முருகேசன், வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற ஊதியம் மற்றும் சிறந்த வசதிகள் ஆகியவற்றுக்காக தென் இந்தியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த சக பணிப்பெண்களோடு தன்னையும் இணைத்துக் கொண்டார்.

தொழிலாளர்களின் உரிமைகளுக்கான குழுக்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறப்பு மாநாட்டில் அவரைப் போன்ற பணிப்பெண்கள் மோசமாக நடத்தப்படுவது, குறைந்த ஊதியம், கேலிக்கு ஆளாவது போன்ற தங்களின் அனுபவங்களை விவரிக்கும்போது  அவற்றை உரக்கவே ஆதரித்த முத்துக்கனி கடந்த பத்தாண்டு காலத்தில் தனது ஊதியம் வெறும் ரூ. 3,000 மட்டுமே அதிகரித்துள்ளது என்று கூறினார்.

 “இது கிட்டத்தட்ட கேலிக்குரியதொரு விஷயம்” எனக் குறிப்பிட்ட முத்துக்கனி தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது எஜமானியிடம் தனக்கு வாந்தி வருவதாகக்  கூறியிருக்கிறார்.

“நான் விடுப்பு எடுப்பதை அவர்கள் விரும்புவதில்லை. இதில் மிகப் பெரிய பிரச்சனை என்னவெனில் எங்களில் பெரும்பாலோர் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. திருமணம், பள்ளிக் கூடச் செலவுகள் என நாங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் நாங்கள் போதுமான அளவிற்கு ஊதியம் ஈட்டுவதில்லை.”

இந்தியா மிக வேகமாக நகரமயமாகிக் கொண்டிருப்பதும், வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதும் வீட்டுப் பணிப்பெண்களுக்கான தேவையை அதிகரித்துள்ளன. எனினும் வேலை நிலைமைகள், ஊக்கப் பரிசுகள் ஆகியவை தொடர்ந்து பெயரளவிற்கே இருந்து வரும் நிலையில் வார விடுப்பு, மகப்பேறு வசதிகள், ஓய்வூதியம், பணவீக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஊதியம் ஆகியவற்றுக்கான கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

“நமது சமூகத்தளத்தில் வீட்டுப் பணிப்பெண்களின் வேலைகள் உண்மையான வேலையாகவே கருதப்படுவதில்லை” என மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெவலெப்மெண்ட் ஸ்டடீஸ் நிறுவனத்தில் வீட்டு வேலையின் மாறிவரும் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளரான தீபா எபநேசர் குறிப்பிட்டார்.

“பெண்களிடம் இவ்வாறுதான் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் வீட்டின் மீதான அன்பிற்காகவே வேலை நடப்பதாகவே குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த வேலைக்கு எந்தவிதமான மதிப்பும் இல்லை. இது பணிப்பெண்களின் ஊதியத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.”

இந்தியாவில் வீடுகளில் வேலை செய்யும் பணிசெய்வோர் சுமார் 5 கோடி பேர் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர்.  தற்போது அமைச்சரவையின் ஒப்புதலுக்காகக்  காத்திருக்கும் வீட்டுப் பணியாளர்களுக்கான தேசியக் கொள்கை போன்ற சட்டபூர்வமான பாதுகாப்பு எதுவும் இல்லாத நிலையில் இவர்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டு  வருகின்றனர் என இது குறித்த செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மிகக் குறைவான ஊதியம், ஆண்டுக்கு ரூ. 100 மட்டுமே ஊதிய உயர்வு என்ற நிலையில் இந்தப் பெண்கள் கடன் வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் ஏற்பாட்டின் விளைவாக சுரண்டல் நிரம்பிய இந்த வேலைகளை அவர்கள் விடமுடியாத நிலையை ஏற்படுத்துகிறது என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவிக்கின்றனர்.

“எங்களது உறுப்பினர்களில் பெரும்பாலோர் மிக விரைவாகவே முதுமையை எட்டுகின்றனர். எனினும் இத்தகைய கடன்களின் விளைவாக அவர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறது” என நேஷனல் டொமஸ்டிக் வொர்க்கர்ஸ் மூவ்மெண்ட் அமைப்பைச் சேர்ந்த ஜோசஃபின் வளர்மதி குறிப்பிட்டார்.

 “இன்று ரூ. 1,000 ஆக இருக்கும் ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம். ரூ. 5,00,000 வரையில் இந்தப் பெண்கள் கடன்களை அடைத்து வருகின்றனர்.”

இந்த வீட்டுப் பணியாளர்கள் தங்களை ஊழியர்களாகப் பதிவு செய்து கொள்வதற்கான உரிமை, குறைந்த பட்ச ஊதியத்திற்கான உறுதி, மோசமாக நடத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பு, உடல்நலத்திற்கான காப்பீட்டு வசதி, மகப்பேறு வசதி, ஓய்வூதியம் போன்ற வசதிகளைப் பெறுவது, அதைப் போன்றே புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதற்கென ஒரு கொள்கையை இந்திய அரசு சமீபத்தில் வகுத்துள்ளது.

எனினும் இந்தக் கொள்கை எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்பதற்கான கால வரையறை எதுவும் தற்போது இல்லை.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: லிண்ட்ச்ய கிரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.