இந்தியாவின் உரிமைகளுக்கான குழு மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு உதவி கிடைக்காதது குறித்து விசாரிக்க உள்ளது

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Friday, 5 January 2018 08:05 GMT

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, ஜன. 5 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - அடிமைத்தனத்தில் ஆழ்த்தப்பட்டிருந்த ஒரு தொழிலாளர் குழுவிற்கு அவர்கள் மீட்கப்பட்ட பிறகு தேவையான சட்ட, நிதி உதவிகளைச் செய்ய அதிகாரிகள் தவறியுள்ளது குறித்து இந்தியாவின் மனித உரிமைகளுக்கான தேசிய கமிஷன் விசாரிக்க உள்ளது என வெள்ளிக்கிழமையன்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.

அடிமைத்தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான தேசிய இயக்கத்திற்கான குழுவைச் சேர்ந்த உரிமைகளுக்கான இயக்கத்தினரோடு இணைந்து மாநில அரசு அதிகாரிகள் இந்தியாவின் வடபகுதி மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் உள்ள செங்கற்சூளைகளில் இருந்து கடந்த வார இறுதியில் சுமார் 100 பேரை கொத்தடிமை முறையிலிருந்து மீட்டனர்.

அடிமைத்தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான தேசிய இயக்கத்திற்கான குழுவைச் சேர்ந்த நிர்மல் கொரானாவின் கூற்றுப்படி இந்தத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் சிலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வேலை செய்து வருகின்றனர்.

“ஒரே ஒரு முறை கூட அவர்கள் செங்கற்சூளைகளிலிருந்து வெளியே காலெடுத்து வைக்கவில்லை. இது அடிமைத் தொழிலுக்காக கடத்திக் கொண்டு வரப்பட்டதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.” என அவர் தெரிவித்தார். 

இந்திய சட்ட விதிகளின்படி, இவ்வாறு மீட்கப்பட்டவர்களுக்கு அவர்கள் விடுவிக்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இந்த சட்டபூர்வமான ஆவணங்கள் இழப்பீடாக ரொக்கப்பணம், வேலை, குழந்தைகளுக்கு கல்வி வசதி போன்றவை கிடைப்பதற்கு உரியவர்களாக அவர்களை ஆக்குகின்றன.

இந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வந்த ரியாசி, சம்பா மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஏன் இதற்குரிய ஆவணங்களை அவர்களுக்கு வழங்கவில்லை என்று விசாரிக்க மனித உரிமைகளுக்கான தேசிய கமிஷன் முடிவு செய்துள்ளது என இந்தக் கமிஷனின் பதிவாளர் சுரஜித் டே கூறினார்.

 “அவர்கள் கடத்திக் கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் ஆவர். ரியாசி, சம்பா மாவட்ட ஆட்சியர்களிடம் அவர்களுக்கு கொத்தடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கான சான்றிதழை வழங்கும்படி நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.” என அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

இந்தத் தொழிலாளர்களும்  அவர்களது குடும்பத்தினரும் விருப்பத்திற்கு மாறாக அங்கே பிடித்து வைக்கப்பட்டிருந்தனர் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என சம்பா மாவட்ட ஆட்சியர் ஷீடல் நந்தா கூறினார்.

 “அவர்கள் கொத்தடிமைகள்தான் என்பதை, அதாவது கட்டாயமாக அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்களுக்குத் தரப்படவேண்டிய ஊதியம் கொடுக்கப்படவில்லை என்பதை, நாங்கள் நிரூபிக்கும் வரை அவர்கள் விடுவிக்கப்பட்டதற்கான சான்றிதழை வழங்குவது என்ற கேள்வியே எழவில்லை” என அவர் தொலைபேசி மூலமாகத் தெரிவித்தார்.

1976ஆம் ஆண்டிலேயே இந்தியா கொத்தடிமைத்தனத்தைத் தடை செய்து விட்ட போதிலும் இன்னமும் பல லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து வயல்களிலும், செங்கற்சூளைகளிலும், அரிசி ஆலைகளிலும், பாலியல் தொழில் மையங்களிலும், தனியார் வீடுகளிலும் அடிமையாக்கப்பட்டே இருந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

2030 ஆம் ஆண்டிற்குள் 1 கோடியே 80 லட்சம் கொத்தடிமைகளை விடுவிப்பதற்கான திட்டங்களையும், இவ்வாறு விடுவிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த இழப்பீட்டுத் தொகையை ஐந்து மடங்காக அதிகரித்தும் 2016ஆம் ஆண்டில் அரசு அறிவிப்பு செய்தது.

“எனினும் பல சமயங்களில் அதிகாரிகள் அவர்களை கொத்தடிமைத் தொழிலாளர்கள் என அங்கீகரிக்கத் தவறுவதோடு, சொந்த மாநிலத்திற்கு அவர்களை அனுப்பி வைத்துவிடுகின்றனர்” என ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும் எய்ட் எட் ஆக்‌ஷன் அமைப்புடன் இணைந்து செயல்படும் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர் உமி டேனியல் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் சுமார் 10 முதல் 15 சதவீதம் பேர்களுக்கு மட்டுமே இத்தகைய விடுதலைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் மதிப்பீடு செய்தார்.

கடந்த வார இறுதியில் மீட்கப்பட்ட தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே அவர்கள் தங்களுக்கு சான்றிதழ்களை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.