×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

மகிழ்ச்சியோடு இருக்கலாம் என ஆசை காட்டி கவர்ந்திழுக்கப்படும் ரோஹிங்கியா பெண்கள் இந்தியாவில் விற்கப்படுகின்றனர்

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Monday, 22 January 2018 12:15 GMT

A girl belonging to Rohingya Muslim community walks past a makeshift settlement on the outskirts of Jammu, May 6, 2017. Picture taken on May 6, 2017. REUTERS/Mukesh Gupta

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

நுஹ், ஹரியானா, ஜன. 22 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – ரஹீமா தன் 15வயதில் மியான்மரில் ராகைன் மாநிலத்தில் உள்ள தன் வீட்டில் இருந்து வெளியேறி இரண்டு சர்வதேச எல்லைகளைக் கடந்து சென்றபோது இந்தியாவில் அவரது தந்தையை விட ஒரு சில ஆண்டுகளே வயது குறைவான ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காக விற்கப்பட்டார்.

“இதற்கு முன் எனக்குத் திருமணம் ஆகியிருக்கிறதா? என்று அவர் ஏஜெண்ட்டிடம் கேட்டார். நான் திருமணம் ஆகாதவள் என்று அறிந்ததும் ரூ. 20,000க்கு என்னை விலைக்கு வாங்கினார். திருமணமான பெண்கள் ரூ. 15,000க்கு விற்கப்படுகின்றனர்” என தனது முதல் பெயரை மட்டுமே குறிப்பிட்ட ரஹீமா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

வட இந்தியாவில் மியான்மரிலிருந்து தப்பியோடி வந்த ரோஹிங்கியா முஸ்லீம்கள்  வசிக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியில் இப்போது வசித்து வரும் ரஹீமா, “அவர் எனது தந்தையை விட சற்றே இளையவர்… மின் கம்பிகளைக் கொண்டு என்னை அடிப்பார்; அவரை விட்டுச் செல்வதற்கு அனுமதிக்கமாட்டார்; கேட்டால் என்னை விலைக்கு வாங்கியிருப்பதாகக் கூறுவார்” எனக் கூறினார்.

ஐந்தாண்டு கால கொடுமைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் தன்னைவிட்டுச் செல்வதற்கு ரஹீமாவின் கணவர் அனுமதி அளித்திருக்கிறார். அப்போது அவர் தன் இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்த ஐந்துமாத கர்ப்பிணியாக இருந்தார்.

அதிகரித்துக் கொண்டே போகும் அகதிகள் பிரச்சனையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்  ரோஹிங்கியா தீவிரவாதிகள் பாதுகாப்புப் படைகளின் மீது தாக்குதல் தொடுத்ததைத் தொடர்ந்து மியான்மர் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து சுமார் 6,60,000 ரோஹிங்கியாக்கள் மியான்மர் நாட்டின் மேற்குப் பகுதியில்  அமைந்துள்ள ராகைன் மாநிலத்தில் இருந்து தப்பியோடி எல்லையைக் கடந்து வங்க தேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.

ஏற்கனவே வங்க தேசத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம்களுடன் அவர்களும் இணைந்தனர்.  புத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் பாரபட்சம், அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து தப்பி தெற்கு ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் ரோஹிங்கியா இனத்தவர் வசித்து வருகின்றனர்.

இந்தப் புதிய வரவை சமாளிக்க அதிகாரிகளும் உதவிக்கான குழுவினரும் போராடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இவ்வாறு புதிதாக வந்தவர்கள் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமாக உள்ள நிலையில் இவர்கள் ஆட்கடத்தலுக்கு எளிதாக இரையாகும் நிலையில் உள்ளனர் என இடம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு(ஐஒஎம்) குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் தங்களின் அடிமைத் தனத்தில் இருந்து தப்பித்து வந்தோ அல்லது மீட்டெடுக்கப்பட்டோ  இந்தியாவில் நுஹ் போன்ற ரோஹிங்கியாக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு வந்து சேரும்போதுதான் கொத்தடிமைத் தனத்தில் ஆட்படுத்தப்பட்ட அல்லது திருமணத்திற்காக கடத்திச் செல்லப்பட்ட ஆண்கள், பெண்களைப் பற்றிய விவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. 

பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ரோஹிங்கியாக்கள் இந்தியாவிற்கு குடிபெயரத் தொடங்கிவிட்டனர். தற்போது நாட்டில் சுமார் 40,000 வரையிலான ரோஹிங்கியா முஸ்லீம்கள் நாட்டில் வசித்து வருகின்றனர்.

வங்க தேசத்தில் ஒரு அகதிகள் முகாமில் இருந்த தனது தந்தையுடன் சேர்ந்து கொள்வதற்காக மியான்மரில் உள்ள “உயரமாக வளர்ந்து நிற்கும் புற்கள், நெல்வயல்கள் சூழ்ந்த” தங்கள் வீட்டிலிருந்து ரஹீமா 2012ஆம் ஆண்டில் வெளியேறினார்.

“வீட்டில் உணவு ஏதுமில்லை. என் தந்தையுடன் சேர்ந்தால் எனக்கு நல்லது என்று என் தாய் நினைத்தார். ஆனால் அந்த முகாமில் இருந்த எனது அத்தையிடம் இந்தியாவில் எனக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைப்பதாக அந்த ஏஜண்ட் கூறியதை அடுத்து அவள் என்னை விற்று விட்டாள்” என இப்போது 22 வயதாகும் ரஹீமா கூறினார்.

“திருமணம் என்று கேட்டதும் நான் செயலற்றுப் போனேன். அந்த ஏஜெண்ட்டையே பின் தொடர்ந்து சென்று கொல்கத்தாவை சென்றடைந்தேன். எந்தவொரு இந்திய மொழியும் எனக்குத் தெரியாது. இருந்தாலும் நான் பாதுகாப்பாக இருப்பேன் என்றுதான் நினைத்தேன்”என ஹரியானா மாநிலத்தில் உள்ள நுஹ் பகுதியில் உள்ள தன் வீட்டில் இருந்தபடி சரளமான இந்தியில் அவர் சொன்னார்.

A makeshift Rohingya settlement at Mewat, India, on Dec. 27, 2017. THOMSON REUTERS FOUNDATION/Roli Srivastava

பாதுகாப்பு குறித்த பாடங்கள்

ரஹீமாவை விலைக்கு வாங்கி இந்தியாவில் விற்ற ஏஜெண்ட்டைப் போன்றவர்களுக்கு வங்கதேசத்தில் சந்தடிமிக்க அகதிகள் முகாம்கள் வசதியான வேட்டைக் களங்களாக இருந்தன. இத்தகைய முகாம்களில் இளம் பெண்களைக் கவர்வதற்கு இந்த  ஏஜெண்டுகள் மேற்கொள்ளும்  வழக்கமான பாணி என்பது திருமணத்திற்கான வாக்குறுதிகளாகவே இருந்தன.

“இத்தகைய இளம் பெண்களுக்கு திருமணம் என்பது மிகப்பெரியதொரு விஷயமாகும். தங்களின் பெண்கள் பொருளாதார ரீதியாக ஸ்திரத் தன்மை பெறுவார்கள் என்ற காரணத்தால் பெற்றோர்களும் அதற்கு ஒப்புக் கொள்கின்றனர்” என உதவி மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பான ப்ராக்-கின் அதிகாரபூர்வ பேச்சாளரான இஃபாட் நவாஸ் கூறினார்.

கடந்த டிசம்பரில் ப்ராக் அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள் காக்ஸ் பஜாரில் இருந்த அகதிகள் குடியிருப்புகளுக்குச் சென்று அங்குள்ள இளம் பெண்களை சந்தித்து முன்பின் தெரியாத பல நபர்களுக்கு இடையே எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்த தகவலையும் ஆதரவையும் வழங்கி வந்தனர். “பல ஆண்களுக்கு மத்தியில் இந்தப் பெண்கள் இருந்ததே இல்லை. அவர்கள் எண்ணற்ற புதிய மனிதர்களை சந்தித்து வருகின்றனர்.” என நவாஸ் கூறினார்.

பொருத்தமற்ற வகையில் தொடுதல், பணம், அல்லது உணவு அல்லது தங்குமிடம் ஆகியவற்றை வழங்க முன்வருதல், உண்மையான மனிதாபிமானம் மிக்க தொண்டர்களுக்கும் ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கும் இடையே வேறுபாட்டை உணர்தல் போன்ற  இந்தப் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அறிகுறிகள் பற்றி 12 அமர்வுகளில் பயிற்சி தரப்பட்டது.

“பெண்கள் காணாமல் போன சம்பவங்கள் பலவும் போதுமான அளவிற்கு வெளியே வந்தனர்.. அவர்கள் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு கடத்தப்படுகின்றனர். இத்தகைய அபாயத்தைக் குறைக்கும் வகையில்தான் இந்தத் திட்டத்தை நாங்கள் துவக்கினோம்” என நவாஸ் குறிப்பிட்டார்.

Rohingya refugees stand in a queue to collect aid supplies in Kutupalong refugee camp in Cox's Bazar, Bangladesh, January 21, 2018. REUTERS/Mohammad Ponir Hossain

அடையாளம்

இந்தியாவின் எல்லையைத் தாண்டி ரஹீமாவுக்கு நடந்ததைப் போன்ற சம்பவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத்துவங்கின.

இந்தியாவில் உள்ள 15 ரோஹிங்கியா பெண்களை அவர்களின் குடும்பத்தினருடன் மீண்டும் சேர்த்து வைப்பதற்கான முயற்சிகளை தங்கள் குழு மேற்கொண்டு வருகிறது என இந்தியா, வங்க தேசம், மியான்மர் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையான இம்பல்ஸ் என் ஜி ஓ நெட்வொர்க் அமைப்பின் நிறுவனரான ஹசீனா கர்பிஹ் கூறினார்.

“இந்தப் பெண்கள் 6 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்பாக பாலியல் ரீதியான அடிமைத்தனம் அல்லது திருமணத்திற்காக இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்டு விற்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் அரசு நட்த்திவரும் தங்குமிடங்களில் வசிக்கின்றனர்” என அவர் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

“மியான்மரில் அவர்களது குடும்பங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியாத நிலையில் மீண்டும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை.”

வங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் உள்ள குடும்பங்களில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட  பெண்களை தேடுவதாக கடந்த ஆறு மாதங்களில் ஐந்து வழக்குகளைப் பெற்றுள்ளதாகவும் கர்பிஹ் அமைப்பினர் கூறினர்.

இந்தியாவில் விற்கப்பட்ட மேலும் அதிகமான பெண்கள் குறித்து தகவல்கள் வந்துள்ளபோதிலும் அவர்களை அடையாளம் காண்பதில் சவால்கள் உள்ளன என்றும் இது குறித்த இயக்கத்தினர் தெரிவித்தனர்.

“ மொழிப்பிரச்சனையின் காரணமாக அவர்களை ரோஹிங்கியாக்களா அல்லது  வங்க தேசத்தவரா என்று அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளது. ஏனெனில் அவர்களின் மொழி கிட்டத்தட்ட ஒன்றுபோலவே உள்ளது” என ஆட்கடத்தலுக்கு எதிரான அரசு முறை சாரா அமைப்பான ஜஸ்டிஸ் அண்ட் கேர் அமைப்பின் அட்ரியன் பிலிப்ஸ் கூறினார்.

இந்தியாவில் செயல்படும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பான யு என் எச் சி ஆர்  உடன் சுமார் 17,000 ரோஹிங்கியா அகதிகளும் புகலிடம் தேடுவோரும் பதிவு செய்துள்ளனர். ரஹீமாவைப் போன்ற பலரும் அகதிகளுக்கான அடையாள அட்டையைக் கோரும் மனுவை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சிக் கடிதத்தையே தங்களின் அடையாளத்திற்கான சான்றாக வைத்துள்ளனர்.

எனினும் ரஹீமா அல்லது அவரைப் போன்றவர்களின் விஷயங்கள் குறித்து தாங்களோ அல்லது தங்களுடன் இணைந்து செயல்படும் அமைப்புகளோ எந்தவித பதிவையும் செய்யவில்லை என யு என் எச் சி ஆர் அமைப்பின் அலுவலர்கள் தெரிவித்தனர்.

“யு என் எச் சி ஆர் அமைப்பிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் இனத்தவரிடையே திருமணத்திற்காக கடத்தி வரப்படுவது  போன்ற வகையிலான பதிவு ஏதும் இல்லை” என யு என் எச் சி ஆர் அமைப்பைச் சேர்ந்த இப்ஷிதா சென்குப்தா இ-மெயில் மூலம் தெரிவித்தார்.

நுஹ் பகுதியில் ஒரு குடிசைப் பகுதியில் டின் மற்றும் கார்ட்போர்ட் அட்டைகளால் ஆன, ஒரு ப்ளாஸ்டிக் ஷீட்-ஐ மட்டுமே கூரையாகக் கொண்ட ஒரு  குடிசையில் ரஹீமா இப்போது தன் இரு குழ்ந்தைகளுடன் வசித்து வருகிறார். உணவு சமைப்பதற்காக சிறு பகுதியில் களிமண்ணால் தான் தயாரித்திருந்த ஒரு சமையல் அடுப்பை அவர் சுட்டிக் காட்டினார்.

இப்போதும் மியான்மரில் வசித்து வரும் தாயாருடன் அவர் தொடர்பில் இருந்து வருகிறார்.

“இங்கே நான் ஒரு வீட்டு வேலைக்காரியாக பணிபுரிந்து வருகிறேன். மாதம் ரூ. 1200/- ஈட்டுகிறேன். என் தாயாரிடம் நான் திரும்பிச் சென்றால் யார் எனக்குச் சோறு போடுவார்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ராஷ் ரஸ்ஸல். செய்தியை வெளியிடும் பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->