தமிழ்நாடு நூற்பாலையில் நிகழ்ந்த தற்கொலை குழந்தைத் தொழிலாளர் முறை குறித்த விசாரணைக்குத் தூண்டியுள்ளது

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Thursday, 8 February 2018 15:18 GMT

ARCHIVE PHOTO: An employee works at the production line of a textile mill in India, September 10, 2013. REUTERS/Amit Dave

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, பிப். 8  (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – நெசவுத் தொழிலில் நிலவும் மிக மோசமான வேலை நிலைமைகள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது குறித்து ஒரு தொழிற்சங்கமும் மனித உரிமைகளுக்காகப் போராடி வருபவர்களும் குரலெழுப்பியதைத் தொடர்ந்து 16 மணி நேர வேலை நேரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ள ஒரு நெசவாலையில் 14 வயதுச் சிறுமி செய்து கொண்ட தற்கொலை இப்போது விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.

அருகிலுள்ள நெசவாலையில் ரூ.2576 போனஸ் தொகைக்காக வேலை செய்து பதின் பருவச் சிறுமி ஒருவர் உயிரிழந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு கடந்த செவ்வாயன்று தர்ஷிணி பாலசுப்பிரமணி தான் தங்கி வரும் பொது அறையில் தூக்கில் தூங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என முற்றிலும் பெண்களையே உறுப்பினர்களாகக் கொண்ட தமிழ்நாடு டெக்ஸ்டைல் அண்ட் காமன் லேபர் யூனியன் (சிசிடியு) தெரிவித்தது. இந்த மரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

“14வயது சிறுமையைப் பொறுத்தவரையில் இந்த வேலை தாங்க முடியாத ஒன்று” என டிடிசியுவின் தலைவரான திவ்யராகினி சேசுராஜ் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

தென்னக மாநிலமான தமிழ்நாட்டில் பஞ்சை இழையாகவும், நூலாகவும், ஆயத்த ஆடையாகவும் மாற்றி வரும் 1,500க்கும் மேற்பட்ட நூற்பாலைகளில் சுமார் 4,00,000 பேர் வேலை செய்து வருகின்றனர். இவற்றுள் கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்ட நிறுவனமான டாலர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு நூற்பாலையில்தான் தர்ஷிணி வேலை செய்து வந்தார்.

15லிருந்து 18 வயது வரையிலானவர்கள் மட்டுமே குறிப்பிட்ட கால அளவிற்கு வேலை செய்ய, அதுவும் உடலுக்கு ஊறுவிளைவிக்காத தொழிற்சாலைகளில் – நூற்பாலைகள் இந்த வகையில் அடங்குவதாகும் - மட்டுமே வேலை செய்ய, இந்திய சட்டம் அனுமதிக்கிறது. 15 வயதிற்குக் கீழே இருப்பவர்கள் வேலை செய்வதற்கு இந்தச் சட்டம் தடை விதிக்கிறது.

நூற்பாலையில் கூடுதல் வேலை நேரம் என்பது அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும், கடந்த இரண்டு மாதங்களாக மட்டுமே வேலை செய்து வரும் தர்ஷிணி கூடுதலான நேரத்திற்கு வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும்  டாலர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ பேச்சாளரான கோபாலகிருஷ்ணன் சாரங்கபாணி கூறினார்.

 “எங்களது ஆலைகளில் எந்தவிதமான அத்துமீறல்களும் இல்லை” என்று குறிப்பிட்ட கோபாலகிருஷ்ணன் சாரங்கபாணி, அந்தப் பெண்ணுக்கு 14 வயது மட்டுமே என்பது நிறுவனத்திற்குத் தெரியாது என்றும் மேலும் கூறினார்.

 “அந்தப் பெண் எங்களிடம் காண்பித்த ஆவணங்களின்படி, அவர் 2000ஆம் ஆண்டில் பிறந்தவர். அதன் அடிப்படையில்தான் நாங்கள் அவரை வேலைக்கு எடுத்துக் கொண்டோம். எங்கள் தொழிலாளர்களை நாங்கள் எங்களது சொந்தக் குழந்தைகளைப் போலவேதான் நடத்துகிறோம். காவல்துறையின் விசாரணைக்கும் நாங்கள் உதவி செய்து வருகிறோம்.”

டாலர் இண்டஸ்ட்ரீஸ் தனது இணையதளத்தில் இந்தியாவின் முன்னோடியான பின்னாலாடை நிறுவனங்களில் ஒன்று எனவும், கிட்டத்தட்ட 600 பேர் தங்களிடம் வேலை செய்து வருவதாகவும், தங்களின் ஆடைத் தயாரிப்புகளை மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் நேபாளத்திற்கும் ஏற்றுமதி செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தது.

உள்ளூரிலும், சர்வதேச அளவிலுமான சந்தைகளுக்கு சப்ளை செய்து வரும் உலகின் மிகப்பெரிய நெசவு மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.

இந்தத் தொழிலில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த, படிப்பறிவில்லாத, சமூக அளவில் தாழ்ந்த பிரிவுகளைச் சேர்ந்த இளம் பெண்களாகவே உள்ளனர் என்றும், இவர்கள் நாள்தோறும் 12 மணி நேரம் அளவிற்கு வேலை செய்வதாகவும், பெரும்பாலான நேரங்களில் அச்சுறுத்தல்களையும், பாலியல் ரீதியான வன்சொற்களையும், துன்புறுத்தலையும் எதிர்கொள்கின்றனர் என்று இது குறித்த இயக்கங்களை நடத்தி வருவோர் கூறுகின்றனர்.

அந்தப் பெண் தர்ஷிணிக்கு 14 வயது மட்டுமே என்றால்  “அது மிகவும் கவனத்திற்குரியதொரு விஷயம்தான்” என இந்த ஆலை அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் தலைவரான டி.ஜி.வினய் தெரிவித்ததோடு, இந்த வழக்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

“எங்களது விசாரணை முடிவுகளுக்காகவே நாங்கள் காத்திருக்கிறோம். சிறுமிகள் பள்ளிகளை விட்டு நின்றுவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவோம். இத்தகைய சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் ஆலைகளில் மேலும் அதிகமான சோதனைகள் நடைபெறுகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு மாத காலத்தில் மட்டுமே தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஆலைகளில் 10 தொழிலாளர்களின் மரணத்தை தாங்கள் பதிவு செய்துள்ளதக உள்ளூர் அளவில் செயல்படும் மனித உரிமைகளுக்கான குழுவான செரீன் செக்கூலர் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி குறிப்பிட்டது.

 “தொழிலாளர்களின் வேலை நிலைமைகளை மேம்படுத்த முயற்சிப்பதற்குப்  பதிலாக, இத்தகைய மரணங்களுக்கான ஒரே தடவைக்கான இழப்பீடாக ஒரு சிறிய தொகையைக் கொடுத்து இந்த ஆலைகள் இறந்தவர்களின் குடும்பத்தினரின் மவுனத்தை விலைக்கு வாங்குகின்றன” என திண்டுக்கல் நகரில் இருந்து செயல்பட்டு வரும் அறக்கட்டளை ஒன்றின் இயக்குநரான எஸ். ஜேம்ஸ் விக்டர் கூறினார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ராபர்ட் கார்மைக்கேல் மற்றும் கேட்டி மிகிரோ. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.