உலகவங்கியின் ஆதரவில் செயல்படும் தேயிலைத் தோட்டங்களில் இந்திய தொழிலாளிகள் இறந்து கொண்டிருக்கின்றனர் என பிரச்சாரகர்கள் கூறுகின்றனர்

Friday, 27 April 2018 08:35 GMT

Tea garden workers carrying tea leaves over their heads after plucking them from a tea estate, walk at Jorhat in Assam, India, April 20, 2015. REUTERS/Ahmad Masood

Image Caption and Rights Information

  - அனுராதா நாகராஜ்

சென்னை, ஏப். 27 – (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - பகுதியளவில் உலகவங்கி நிதியுதவி செய்துவரும் இந்திய தேயிலை தோட்டங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஏழு தொழிலாளர்கள் இறந்துள்ளனர் என தொண்டு அமைப்புகள் வெள்ளியன்று வழங்கிய அதிகாரபூர்வமான புகாரில் தெரிவித்துள்ளன.

உலக வங்கியின் ஓர் அங்கமான சர்வதேச நிதிக் கழகத்தின் (ஐஎஃப்சி) பொறுப்புணர்வுக்கான ஏற்பாடாக இருக்கும் கம்ப்ளைன்ஸ் அட்வைஸர் ஓம்பட்ஸ்மென் (சிஏஓ) நடத்திய 2016ஆம் ஆண்டின் ஓர் விசாரணையில் இந்தத் தேயிலைத் தோட்டங்களில் சுரண்டலும் மோசமான வேலை நிலைமைகளும் அம்பலமானபிறகும் கூட இன்னும் தொடர்ந்து நிலவுகின்றன என இந்த பொதுநலன் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

2009ஆம் ஆண்டில் சர்வதேச நிதிக் கழகமும் டாட்டா க்ளோபல் பிவரேஜஸ் நிறுவனமும் இணைந்து அமால்கமேட்டட் ப்ளாண்டேஷன்ஸ் ப்ரைவேட் லிமிடெட் (ஏபிபிஎல்) என்ற நிறுவனத்தை உருவாக்கின. இதில் தொழிலாளர்களுக்கும் பகுதியளவு உரிமையுண்டு. வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் முன்பு டாட்டா நிறுவனத்தால் நடத்தப்பட்டுவந்த தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களின் மீதான அத்துமீறல்களுக்கு முடிவு கட்டும் நோக்கத்துடனேயே இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.

“இந்த நிறுவனம் துவங்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் ஆனபிறகும், வேலை தொடர்பான விபத்துக்கள், ஊறுவிளைவிக்கும் பூச்சிக் கொல்லிகளை தொடர்ந்து கையாள வேண்டிய கட்டாயம், போதுமான மருத்துவ வசதி இல்லாமை ஆகியவற்றின் விளைவாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் நாங்கள் கேள்விப்பட்டோம்” என பீப்பிள்ஸ் ஆக்‌ஷன் ஃபார் டெவலெப்மெண்ட் அமைப்பைச் சேர்ந்த வில்ஃப்ரெட் டோப்னோ கூறினார்.

2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு, நிலைமைகளை மேம்படுத்த ஏபிபிஎல் நிறுவனத்துடன் இணைந்து தாங்கள் செயல்பட்டுவருவதாக ஐஎஃப்சி கூறியிருந்தது. எனினும் இந்த விஷயத்தில் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சிஏஒ க்கு அளித்த புகாரில் இது குறித்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அமைப்புகள் தெரிவித்திருந்தன.

 “சிஏஒ நிர்வாகத்தைக் குறைகூறும் வகையிலான முடிவுகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் உலக வங்கி முற்றிலுமாக தவறியுள்ளது” என அக்கவுண்டபிலிட்டி கவுன்சல் அநிருத்த நகார் கூறினார்.

இது குறித்து அனுப்பியிருந்த மின்னஞ்சலில் (இமெயில்) டாட்டா நிறுவனம் இந்தப் புகார்களை மறுத்துள்ளது.

“ஏபிபிஎல் நிறுவனத்தின் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்ற புகார் குறித்த அறிக்கை தவறானது என்று தெளிவுபடுத்த நாங்கள் விரும்புகின்றோம்” என அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் தெரிவித்தார்.

பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைப்பது, பாதுகாப்பு உடைகள், மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது ஆகியவை உள்ளிட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஏபிபிஎல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக 2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுயேச்சையான மதிப்பீட்டு அறிக்கை தெரிவிப்பதாக ஐஎஃப்சி சுட்டிக் காட்டியுள்ளதோடு, தொழிலாளர்களின் மரணம் குறித்த சூழ்நிலைகள் பற்றியும் தாங்கள் கவனித்து வருவதாகவும்  அது தெரிவித்தது.

 “எந்தவொரு உயிரிழப்புமே துயரமான ஒன்றுதான். தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்” என (ஐஎஃப்சியின்)அதிகாரபூர்வ பேச்சாளரான ஆரோன் ஷேன் ரோசன்பெர்க் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்.

32 வயதான தொழிலாளி ஒருவர் தேயிலை பறிக்கும் இயந்திரத்தில் இரண்டு விரல்களை இழந்தபிறகு, முறையான மருத்துவ வசதியைப் பெறாத நிலையில் உயிரிழந்தார் எனவும், ஏற்கனவே காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு தொழிலாளி பூச்சிக் கொல்லி மருந்து அடங்கிய குவளைகளை எடுத்துச் செல்லும்போது உயிரிழந்தார் எனவும் இந்த அறக்கட்டளைகள் தங்களது புகாரில் தெரிவித்திருந்தன.

“ஏபிபிஎல் மருத்துவமனைகளில் தரங்குறைந்த வசதி வழங்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவ வசதிக்கான செலவை ஈடுகட்டுவது மட்டுமின்றி, தங்களின் குறைந்தபட்ச தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ளவும் கூட தொழிலாளர்கள் இயலாதவர்களாக உள்ளனர்” என லாபநோக்கற்ற அறக்கட்டளையான நஸ்டீக் அமைப்பைச் சேர்ந்த ஜெயஸ்ரீ  சத்பூட் கூறினார்.

உலகின் இரண்டாவது மிகப்பெரும் தேயிலை வர்த்தக அடையாளமான டெட்லியை சொந்தமாகக் கொண்டுள்ள நிறுவனமான டாட்டா க்ளோபல் பிவரேஜஸ் நிறுவனம் இந்த ஏபிபிஎல் நிறுவனத்தில் 41 சதவீதப் பங்குகளை வைத்துள்ளது; ஐஎஃப்சி 20 சதவீதப் பங்குகளை வைத்துள்ளது. மீதமுள்ள பங்குகள் அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சிறு நிறுவனங்கள் ஆகியோரின் கைகளில் உள்ளன.

30,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, தொழிலாளர்களை பங்குதாரர்களாக வளர்த்தெடுப்பது என்ற நோக்கத்துடன் துவக்கப்பட்ட இந்த 87 மில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டத்தில் ஐஎஃப்சி 7.8 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

2009ஆம் ஆண்டில் இந்த ஏபிபிஎல் நிறுவனத்தை உருவாக்கியபோது, ஊதியத்தை அதிகரிப்பது, தொழிலாளர்களுக்கு போதுமான அளவில் வீட்டுவசதி, மருத்துவ வசதியை வழங்குவது, சுற்றுப்புறச் சுகாதார ஏற்பாடுகளை மேம்படுத்துவது, பூச்சிக் கொல்லியின் பயன்பாட்டைக் குறைப்பது ஆகியவை உள்ளிட்ட உறுதிமொழிகளை டாட்டா நிறுவனமும் ஐஎஃப்சியும் வழங்கியிருந்தன.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.