இந்தியப் பள்ளிகள் விடுமுறைக்காக மூடும் நேரத்தில் ஆட்கடத்தல்காரர்கள் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர் என இயக்கம் நடத்துவோர் எச்சரிக்கை

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Tuesday, 8 May 2018 06:48 GMT

ARCHIVE PHOTO: School children travel to school on a packed auto-rickshaw in the western Indian city of Ahmedabad, November 25, 2014. REUTERS/Amit Dave

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, மே 8 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – கோடை காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் நிலையில் இந்தியா முழுவதிலும் ஆட்கடத்தல்காரர்கள் வறுமையில் வாடும் அவர்களது பெற்றோரிடம் விடுமுறை நாட்களில் தொழிற்சாலைகளிலும் வயல்களிலும் வேலைசெய்ய தங்கள் குழந்தைகளை அனுப்புமாறு கூறி நம்ப வைக்கின்றனர் என இது குறித்த இயக்கத்தை நடத்துவோர் தெரிவிக்கின்றனர். 

இந்த இரண்டு மாத இடைவெளியின்போது குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்கடத்தலுக்கு எதிரான குழுக்கள் அரசை வலியுறுத்துகின்றன. அவர்கள் இவ்வாறு வேலைசெய்யத் துவங்கி விட்டால் பின்பு இந்தக் குழந்தைகளில் பலரும் மீண்டும் பள்ளிகளுக்குத் திரும்ப மாட்டார்கள் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். 

“இந்த விடுமுறைப் பருவத்தில் விளையாட்டு மைதானங்கள், சுற்றுப்புறக் கடைகள் ஆகியவை இந்த ஆட்கடத்தல்காரர்களின் வேட்டைக்காடாக மாறிவிடுகின்றன” என ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையான இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷனைச் சேர்ந்த குறளமுதன் தாண்டவராயன் கூறினார். 

“ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை அவர்கள் தேடிக் கண்டுபிடித்து, இந்தக் குழந்தைகளை விளையாட அல்லது வீட்டிலேயே இருக்க அனுமதிப்பது நேரத்தை வீணாக்குவது. அதற்குப் பதிலாக அவர்கள் இந்தக் காலத்தில் சம்பாதிக்க முடியும் என்று பெற்றோர்களை நம்பச்செய்கின்றனர்.” 

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி 5 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய 1 கோடியே 1 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வயல்களிலும், கால்பகுதிக்கும் மேற்பட்டவர்கள் துணி எம்ப்ராய்டரி, தரைவிரிப்பு நெய்தல், தீக்குச்சி மற்றும் வளையல் உற்பத்தி போன்ற உற்பத்தித் துறைகளிலும் வேலை செய்கின்றனர். 

“பல கிராமங்களிலும் பெற்றோர்கள் இருவருமே வேலை செய்து வரும் நிலையில், கோடைக்கால விடுமுறையில் வீட்டில் இருக்கும் பதின்பருவத்தினர் (நெசவு) ஆலைகளில் குறைந்த கூலிக்கு வேலையில் சேர்ப்பதற்காக இவ்வாறு வேலைக்கு ஆள் சேர்ப்பவர்களால் கவர்ந்திழுக்கப்படுகின்றனர்” என லாபநோக்கற்ற அறக்கட்டளையான ட்ரஸ்ட் ஃபார் எஜுகேஷன் அண்ட் சோஷியல் ட்ரான்ஸ்ஃபர்மேஷனைச் சேர்ந்த ஜோசப் ராஜ் கூறினார். 

மற்ற குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள் வேலை செய்து வரும் செங்கல்சூளைகளில் சேர்ந்து கொள்கின்றனர். மழை துவங்குவதற்கு முன்பாக நவம்பர் முதல் ஜூன் வரையில்தான் இந்த செங்கற்சூளைகளில் வேலைகள் நடைபெறுகின்றன. 

உரிமைகளுக்கான குழுக்களான ஆன்ட்டி ஸ்லேவரி இண்டர்நேஷனல் மற்றும் வாலண்டியர்ஸ் ஃபார் சோஷியல் ஜஸ்டிஸ் ஆகியவை வழங்கிய 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி இந்தச் செங்கற்சூளைகளில் நிலவி வரும் ஆட்சேர்ப்பு மற்றும் பணம் கொடுக்கும் முறையானது குறிப்பிட்ட காலத்தில் இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களை கொத்தடிமை என்ற வளையத்திற்குள் சிக்கவைப்பதாக உள்ளன. 

இவற்றில் ஊதியமும் மிகக் குறைவு என்பதோடு பருவகாலத்தின் இறுதியில்தான் பெரும்பாலான நேரங்களில் பணம் வழங்கப்படுகிறது. எனவே குடும்பத்தினர் தங்கள் இளம் குழந்தைகளையும் வேலை செய்ய வைத்து நாளொன்றுக்கு 1,000 செங்கற்களை தயாரிக்க வைக்கின்றனர். இது அந்தக் குழந்தைகள் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறச் செய்கிறது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 

 “புதுக் கல்வியாண்டில் இந்தக் குழந்தைகளை மீண்டும் கிராமத்திற்கு அழைத்துக் கொண்டு வந்துவிடுவதாக இந்த முகவர்கள் உறுதிமொழி அளித்த போதிலும், அவர்களில் பலரும் திரும்ப வருவதில்லை என்பதுதான் பிரச்சனை” என இது குறித்த ஆலோசனை வழங்கி வரும் குழுவான நேஷனல் ஆதிவாசி சாலிடாரிட்டி கவுன்சிலைச் சேர்ந்த கிருஷ்ணன் கந்தசாமி தெரிவித்தார். 

வாங்கிய கடனுக்காக கொத்தடிமைகளாக இருந்து வருவர்களில் 2017ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட 1,821 பேரில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் குழந்தைகள் என்பதை தமிழ்நாடு அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

“இவர்கள் தங்களின் பெற்றோருக்கு உதவுவதில் துவங்குகின்றனர். பின்பு மெதுவாக நீண்ட நேரம் பிடிக்கும் வேலைகளை எடுத்துக் கொள்கின்றனர்” என கந்தசாமி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார். 

இந்த ஆண்டில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய தென் இந்திய மாநிலங்களில் தங்கள் அமைப்பு கொத்தடிமைகளாக இருப்பவர்களில் 456 பேரை ஏற்கனவே விடுவித்துள்ளது என்றும், இவர்களில் பலரும் சிறுவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 

“மாந்தோப்புகள், மல்லிகைத் தோட்ட வயல்கள், செங்கற்சூளைகள், குப்பை பொறுக்கும் மையங்கள், கால்நடை மேய்ப்பு ஆகியவற்றில் சிறுவர்கள் அதிகமான அளவில் இருப்பதை நாங்கள் பார்க்கிறோம்” எனவும் கந்தசாமி கூறினார்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.) 

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.