×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

பெரும் இறப்புகளுக்குப் பின் இந்திய நூற்பாலைகள் தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்குகின்றன

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Wednesday, 9 May 2018 13:53 GMT

Employees work inside a garment factory in Mumbai, India, June 1, 2016. REUTERS/Danish Siddiqui

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, மே 9 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தொழிற்சாலைகளிலும் விடுதிகளிலும் தொடர்ச்சியான மரணங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து வேலைநெருக்கடியிலிருந்து தொடங்கி பாலியல் துன்புறுத்தல்கள் வரையிலான பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவும் வகையில் தமிழ்நாட்டிலுள்ள நூற்பாலை தொழிலாளர்கள் ஆலோசனை பெறவிருக்கின்றனர் என உள்ளூர் அதிகாரி ஒருவர் புதன்கிழமையன்று தெரிவித்தார்.

ஆண்டுக்கு 42 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்து வரும் இந்தத் தொழிலில் வேலை செய்பவர்களில் பெரும்பாலோர் தொலைதூரத்திலுள்ள தங்கள் வீடுகளில் இருந்து வந்து விடுதிகளில் தங்கி வேலை செய்பவர்கள் என்பதோடு நீண்ட நேரம் வேலை செய்ய கட்டாயத்திற்கும், பாலியல் ரீதியான கொடுமைகளுக்கும்,  வாய்மொழி வசவுகளுக்கும்  அவர்கள் ஆளாகின்றனர்.

பின்னலாடை உற்பத்தியில் ஒரு மையமாக விளங்கும் தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதங்களில் இருபது பேர் உயிரிழந்துள்ளனர் இவர்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

“தொழிற்சாலைகளுக்குள்ளே பெருமளவிற்கு மன அழுத்தமும் பதற்றமும் உள்ளன” என ஒரு பொதுச் சமூகக் குழுவான சோஷியல் அவேர்னஸ் அண்ட் வாலண்டரி எஜுகேஷன் அமைப்பைச் சேர்ந்த அலோய்சியஸ் ஆரோக்கியம் கூறினார்.

 “வேலை நெருக்கடி, உணர்வு பூர்வமான பிரச்சனைகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் இளைஞர்கள் என்பதாக இல்லாமல் இந்தத் தொழிலாளிகள்  வெறும் இயந்திரங்களாகவே நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு உதவ எந்தவித ஆலோசனையும் வழங்கப்படுவதில்லை என்பதோடு அவர்கள் இறந்துவிட்டால் அதற்கு யாருமே பொறுப்பாக்கப்படுவதில்லை.”

கடந்த மாதம் நூற்பாலை ஒன்றின் 17 வயது இளம்பெண் தொழிலாளி ஒருவர் தன் விடுதி அறையில் இறந்துபோனார். தமிழ்நாடு டெக்ஸ்டைல் அண்ட் காமன் லேபர் யூனியன்(டிடிசியு)வின் கூற்றுப்படி இது கடந்த மூன்று மாதங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில்  பதிவான பத்தாவது மரணமாகும்.

“அவர் ஆலையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார் என்றும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார் என்றும் அவரது குடும்பத்தினர் சந்தேகம் கொண்டுள்ளனர்” என டிடிசியுவின் தலைவரான திவ்யராகினி சேசுராஜ் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

 “இந்த இளம் பெண்கள் ஏன் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி முழுமையான விசாரணை எதுவும் நடைபெறுவதில்லை. மூத்த அதிகாரிகளால் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிவருகிறோம்.”

இத்தொழிலின் பெரும்பாலான தொழிற்சாலைகள் நிரம்பியுள்ள, “இந்தியா டெக்ஸ்டைல் பள்ளத்தாக்கு” என்று அழைக்கப்படும் பகுதியாக உள்ள திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மேலும் 10 மரணங்களை இது குறித்த இயக்கங்களை நடத்திவருவோர் பதிவு செய்துள்ளனர்.

 “இந்தப் பெண்கள் தங்கியிருக்கும் விடுதிகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டவைகள் அல்ல. தொழிலாளிகளின் எண்ணிக்கை குறித்தும் எந்தவித கணக்கும் இல்லை” என ஈரோடு மாவட்டத்தில் நெசவாலை தொழிலாளிகளுடன் பணிபுரியும் அறக்கட்டளையான ரீட் அமைப்பின் இயக்குநரான கருப்புசாமி தெரிவித்தார்.

“2015க்கும் 2017க்கும் இடையே குறைந்தது 55 மரணங்களை நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். இவை அனைத்துமே ஆலைகளின் விடுதிகளில் நிகழ்ந்த தற்கொலைகள்தான். இவற்றில் எதுவும் விதிவிலக்கானவை அல்ல.”

200 நூற்பாலைகள் வரையில் வேலை நிலைமைகளை மேம்படுத்தும் முதல் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் கூர் உணர்வுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தவிருக்கிறது.

“ தங்களின் மீதான துன்புறுத்தல் பற்றி புகார் செய்வதற்கான துணிவை இந்தப் பெண்களுக்கு வழங்குவது; வேலை நெருக்கடிகளை சமாளிக்க உதவுவது; அவர்கள் தங்கள் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை வழங்குவது ஆகியவை இந்த முயற்சியின் நோக்கமாகும்” என மாவட்ட நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ள டி ஜி வினய் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

650க்கும் மேற்பட்ட நூற்பாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் கடந்த சில மாதங்களாக இத்தகைய (தொழிலாளர்களுக்கான) ஆலோசனை கூட்டங்களை துவக்கியுள்ளது.

“இந்த மரணங்கள் எல்லாமே வேலை தொடர்பானவை என்று கூறிவிட முடியாது. பல மரணங்களில் குடும்பப் பிரச்சனைகளே இத்தகைய முடிவை எடுக்க அவர்களை தூண்டியுள்ளன” என இந்த அமைப்பைச் சேர்ந்த கே. வெங்கடாசலம் கூறினார்.

“வேலை கொடுப்பவர்கள் என்ற வகையில் எங்களது பொறுப்பை நாங்கள் தட்டிக் கழித்துவிடவில்லை. சமீபத்தில் மூத்த மருத்துவர்களை அந்தப் பெண்களிடம் பேசுவதற்காக அழைத்து வந்தோம்.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: க்ளேர் கோசன்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->