கொத்தடிமை முறையின் மீது இந்தியா தாக்குதல் தொடுத்தபோதிலும் விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் இழப்பீட்டிற்காகக் காத்திருக்கின்றனர்

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Thursday, 10 May 2018 12:21 GMT

ARCHIVE PHOTO: A labourer digs through a heap of scrap leather to be burnt in an oven for making fertilizer at a roadside factory in Kolkata December 3, 2013. REUTERS/Rupak De Chowdhuri

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா 

மும்பை, மே 10 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) –கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடாக ரூ. 3,00,000 வழங்குவது உள்ளிட்டு அந்தக் குற்றத்தை எதிர்த்துப் போராட 2016ஆம் ஆண்டில் கொள்கைகளை அறிமுகப்படுத்தியதிலிருந்து விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் எவருக்கும் முழு இழப்பீட்டை இந்தியா வழங்கவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். 

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுக்கு உடனேயே ரூ. 20,000 வழங்கப்படுகிறது. எனினும் இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட்ட பிறகே மீதமிருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். 

இருந்தபோதிலும், இந்தக் கொத்தடிமை முறைக்குத் தடை விதித்த 1976ஆம் ஆண்டிலிருந்து மிகச் சில நபர்களே இந்தக் குற்றத்திற்காக தண்டனை பெற்றிருக்கின்றனர் என இந்தியாவின் துணைத் தலைமை தொழிலாளர் நல ஆணையரான ஓங்கார் ஷர்மா கூறினார். 

உடனடியாக விசாரணைகளைத் துவங்குமாறு மாவட்ட அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். 

“இந்த அச்சுறுத்தலுக்கான ஒரே தீர்வு என்பது குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதுதான்” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் ஷர்மா தெரிவித்தார். 

2030ஆம் ஆண்டிற்குள் இவ்வாறு கொத்தடிமை முறையில் சிக்கிக் கிடக்கும் 1 கோடியே 80 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை விடுவிப்பது என்ற பேராவல் மிக்க இலக்கை இந்தியா அறிவித்தது.  இத்திட்டமானது தொலைநோக்குடையதாக இருந்தபோதிலும், இதற்கான இழப்பீட்டை குற்றத்திற்கான தண்டனையுடன் இணைத்தன் மூலம் தவறிழைத்துள்ளது. 

“இந்த நீதிமன்ற விசாரணை என்பது பல ஆண்டுகளுக்கு நீடிக்கக் கூடும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கில் தீர்ப்பு வருமானால் இழப்பீட்டுத் தொகையை யாருக்குக் கொடுப்பீர்கள்?” என கொத்தடிமைத் தொழிலாளர்கள் ஒழிப்புக்கான தேசிய பிரச்சாரக் குழுவின் அமைப்பாளர் நிர்மல் கொரானா கூறினார். 

இவ்வாறு இழப்பீட்டிற்காக காத்திருக்கும் ஒருவர்தான் மக்கன்லால் அஹர்வால். புதுதில்லியில் அவரை அடிமைத் தொழிலில் விற்றவருக்கு தண்டனை கிடைத்தால்தான் அவருக்கு இந்த இழப்பீடு கிடைக்கும். 

நாட்டின் தலைநகரத்தின் ஒரு மூலையில் மூன்று நாட்களாக அவர் நின்று கொண்டிருந்தார். தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்தக்காரர்கள் வந்து கூடும் இடமாக அது அறியப்பட்டிருந்தது. அப்போது ஒரு நபர் அவரை நிறுத்தி, நல்ல ஊதியமுள்ள வேலை கொடுப்பதாக கூறினார். 

கதவுகளுடன் கூடிய ஒரு கட்டுமானப் பணி நடந்து வரும் இடத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவர் அடைத்து வைக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பாக, நான்கு மாதங்களுக்கு ஊதியம் ஏதுமில்லாமல் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார். 

மூன்று ஆண்டுகளுக்குப் பின்பே அவர் தனது விடுதலைக்கான சான்றிதழைப் பெற்றார். இந்த அரசாங்க ஆவணம்தான் அவருக்கு ரூ. 1,00,000 இழப்பீடு, வேலை, வீட்டு வசதி ஆகியவற்றைப் பெற்றுத் தரும். 

எனினும் இவை எதுவுமே இதுவரை நடக்கவில்லை. 

 “ஒரு சில வாரங்களுக்கு முன்பு சில அதிகாரிகள் வந்து என்னை படம் பிடித்துச் சென்றனர்.” என தொலைபேசி மூலம் அஹர்வால் தெரிவித்தார். “(எனக்குக் கொடுக்க வேண்டிய) பணத்திற்காகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்” 

பண நெருக்கடி 

அரசின் கூற்றுப்படி இந்தியாவில் சுமார் 1 கோடியே 80 லட்சம் பேர் ஊதியம் எதுவும் இன்றி வேலை செய்து வருகின்றனர்; அல்லது கடனுக்காக அடிமைத்தனத்தில் சிக்க வைக்கப்பட்டிருக்கின்றனர். 

2016ஆம் ஆண்டு வரை இவ்வாறு விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ. 20,000 மறுவாழ்வுக்கான தொகையாக வழங்கப்பட்டு வந்தது. இப்போது  இழப்பீடு முழுவதும் வழங்கப்படுவதற்கு முன்பாக இடைக்கால நடவடிக்கையாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது. 

எனினும் 2016ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தமானது அனுமதிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை அதிகரித்ததில்  இருந்து இந்தத் தொகையைப் பெறுவதும் கூட மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளது என இது குறித்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவோர் தெரிவிக்கின்றனர். 

இத்தகைய கொத்தடிமை தொழிலாளர் வழக்குகளை நடத்துவதற்கு அதிகாரிகள் பெருமளவிற்குத் தயங்குகின்றனர். ஏனெனில், இவ்வாறு அதிகரிக்கப்பட்ட இழப்பீடு போலியான இழப்பீடு கோரலுக்கு மக்களை கொண்டு விடும் என்று அவர்கள் கவலைப்படுகின்றனர் என ஆதிவாசி சாலிடாரிட்டி கவுன்சில் என்ற லாபநோக்கற்ற அறக்கட்டளையைச் சேர்ந்த கந்தசாமி கிருஷ்ணன் கூறினார். 

தொழிலாளர் நல அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்தப் புதிய திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் கிட்டத்தட்ட 9,000 இழப்பீடு கோரி வந்த மனுக்களில் 250க்கு மட்டுமே பணம் தரப்பட்டுள்ளது. 

முழு இழப்பீட்டுத் தொகையை வழங்குவது என்பது அதைவிட மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனினும் மாவட்ட ஆட்சியாளர்களை இதில் கொண்டுவருவதற்கு அரசு முயற்சி எடுத்துவருகிறது என துணைத் தலைமை தொழிலாளர் நல ஆணையரான ஷர்மா கூறினார். 

மருத்துவ சேவைகள், தேர்தல்கள் போன்ற பல திட்டங்களை மாவட்ட ஆட்சியாளர்கள் மேற்பார்வையிடுகின்றனர். கொத்தடிமை தொழிலாளர் குறித்த வழக்குகளை நடத்தி, உடனடியாக இழப்பீட்டை வழங்குவதை உறுதிப்படுத்தவும் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தொழிலாளர் நல அமைச்சகமும் தேசிய மனித உரிமைகள் கமிஷனும் சுமார் 20 பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளன எனவும் ஷர்மா

றினார். 

 “இவ்வாறு (கொத்தடிமைத் தொழிலாளர்களை) வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளை தண்டிக்கும் வகையில் நாங்கள் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் தந்து மேலும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உணர்வூட்டியும் வருகிறோம்” எனவும் ஷர்மா கூறினார்.

 இதற்கிடையே, அஹர்வாலைப் போன்றவர்கள் தங்களைஅடிமைகளாக்கியவர்கள் மீதான விசாரணைக்காக காத்திருக்கின்றனர். தான் நம்பிக்கை இழந்துவிடவில்லை என்றும் என்றாவது ஒரு நாள் தனக்கான இழப்பீடு கிடைக்கும் என்றும் அவர் கூறினார். 

 “ எனது மகளுக்கு வரும் வெள்ளிக்கிழமையன்று திருமணம் நடைபெறவிருக்கிறது. இந்தப் பணம் கைக்குக் கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும்” எனவும் அவர் கூறினார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

Themes