×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புக் கட்டுரை – பயங்கர கனவுகளில் இருந்து கனவுகளுக்கு – விடுவிக்கப்பட்ட இந்தியக் குழந்தைகள் அடிமை வாழ்க்கையை சித்திரமாக தீட்டுகின்றனர்

Thursday, 17 May 2018 00:01 GMT

Drawings by children rescued from bonded labour displayed in Chennai, India, May 14, 2018. Thomson Reuters Foundation/Anuradha Nagaraj

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

சென்னை, மே 17 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - பயமுறுத்தும் நாய்கள், வன்முறை மிகுந்த முதலாளிகள், அதில் இருப்பவர்கள் எப்போதுமே வேலை செய்து கொண்டே இருப்பதாக காலியாக விடப்பட்ட வீடுகள் - இவையெல்லாம் கொத்தடிமைத் தனத்தில் வளர்ந்த இந்தியக் குழந்தைகள் குடும்ப வாழ்க்கை குறித்து தீட்டிய வருத்தமளிக்கும் சித்திரங்கள் ஆகும். 

செங்கற்சூளைகள், அரிசி ஆலைகள், மரம் அறுக்கும் ஆலைகள் ஆகியவற்றில் இருந்து விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளிகளின் குழந்தைகள்  வரைந்த சித்திரங்கள் அவர்கள் அனுபவித்த கொடுமை எந்த அளவிற்கு தீவிரமாகவும், விரிவாகவும் இருந்தது  என்பதை சமூக சேவகர்கள் புரிந்து கொள்ள உதவி செய்தன.

குழந்தைத் தொழிலாளர்களை கணக்கெடுக்கும் முயற்சிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் அனுபவங்களை பதிவு செய்வது முக்கியமானதாக ஆகியுள்ளது என இது குறித்த இயக்கங்களை நடத்துவோர் தெரிவிக்கின்றனர்.

“இத்தகைய கொத்தடிமை உழைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டபோது அவர்களின் பெற்றோர்கள் கூட அதிகாரிகளிடம் தெரிவிக்காத விவரங்களையும் இந்தக் குழந்தைகளின் சித்திரங்கள் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன” என ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையான இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷனைச் சேர்ந்த சமூக சேவகரான லோரெட்டா ஜோனா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“ஒரு சிறுவன் காலியாக இருக்கும் ஒரு வீட்டை வரைந்திருந்தான். அதில் யாருமே வசிப்பதில்லை. ஏனெனில் அவர்கள் அனைவருமே நாள் முழுவதும் வேலை செய்து  கொண்டே இருக்கின்றனர் என்று அவன் எங்களிடம் சொன்னான். முடிவேயில்லாத வேலையை அவன் உணர்ந்திருக்கின்றான்.”

கொத்தடிமை உழைப்பை இந்தியா  1976ஆம் ஆண்டிலேயே தடை செய்துவிட்டது. எனினும் இந்த வெட்டவெளிச்சமான சித்திரங்கள் இன்னமும்  இந்தியாவிலேயே மிகவும் அதிகமான அளவில் நடைமுறையில் இருந்து வரும் கடனுக்கான அடிமைகளாக இருக்கும் சுழலில் சிக்கியுள்ள சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் பற்றிய யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக உள்ளன.

வறுமையும் வேலையின்மையும் ஆண்களையும் பெண்களையும் கந்துவட்டிக்காரர்களிடம் இருந்தோ அல்லது ஆலை முதலாளிகளிடமிருந்தோ கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்தக் கடனைத் திருப்பிக் கொடுப்பதற்காக அடுத்த ஆறு மாதங்களுக்கோ அல்லது அதற்கும் மேலாகவோ அவர்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. 

பல நேரங்களில், இளம் குழந்தைகளும் அவர்களோடு சென்று கடனைத் திருப்பித் தருவதற்காக வேலை செய்வதில் உதவுகின்றனர்.

“இவ்வாறு விடுவிக்கப்படும்போது அங்கிருக்கும் குழந்தைகள் முதலில் செங்கற்சூளைகளிலோ அல்லது ஆலைகளிலோ தாங்கள் வேலை செய்யவில்லை என்றே கூறுகின்றனர்” என வட மாநிலமான பஞ்சாபில் உள்ள செங்கற்சூளைகளுக்கிடையே வேலை செய்து வரும் உரிமைகளுக்கான அமைப்பான வாலண்டியர்ஸ் ஃபார் சோஷியல் ஜஸ்டிஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த ஜெய் சிங் கூறினார்.

“அப்போது நாள் முழுவதும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை எங்களுக்குக் காட்டுங்கள் என்று கேட்கும்போது, அவர்கள் உடனடியாகச் சென்று களிமண்ணைப் பிசைவது அல்லது செங்கற்கள் காய்வதற்காக அவற்றைத் திருப்பிப் போடுவது போன்ற வேலைகளை செய்து காட்டுகின்றனர்.  யாரும் இதை வேலை என்று கூறுவதில்லை. இருந்தாலும் அவர்கள் உழைக்கவே செய்கின்றனர்.”

இந்தியாவில் குறைந்தது  1,00,000 செங்கற்சூளைகள் செயல்பாட்டில் உள்ளன. இதில் சுமார் 2 கோடியே 30 லட்சம் பேர் வேலை செய்கின்றனர் என உரிமைகளுக்கான குழுக்களான ஆண்ட்டி ஸ்லேவரி இண்டர்நேஷனல் மற்றும் வாலண்டியர்ஸ் ஃபார் சோஷியல் ஜஸ்டிஸ் தங்களது 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இருந்து தெரிய வந்தது.

இவ்வாறு செங்கற்சூளைகளில் வாழ்கின்றவர்களில் மூன்றில் ஒருபங்கினர் சிறுவர்களும் சிறுமிகளும் ஆவர்  என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

விரக்தியிலிருந்து நம்பிக்கைக்கு

தென் இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கொத்தடிமை தொழிலாளர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் குழுக்களில் சேர்ந்து கொள்ளுமாறு ஆசிரியரான ரஜினிகாந்த் பிஸ்வால் அடிக்கடி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

இதற்கான அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது தொப்பிகளை தயாரிப்பதற்கான ஒரு மூலையை  ஏற்பாடு செய்வதுதான் அவரது முதல் வேலையாக உள்ளது.

“தங்கள் பெற்றோருடன் இதில் சிக்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்காகவே நான் இதைச் செய்கிறேன்” என தொலைபேசி மூலம் பிஸ்வால் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“நான் அவர்களுக்கு ஒரு தொப்பியைக் கொடுத்து விட்டு சின்னதாக ஒரு பாட்டைப் பாடி ஆடுவேன். அதன் பிறகு அவர்களுடன் மெதுவாகப் பேசத் தொடங்குவேன். முதலில் அவர்கள் பேசுவதற்குத் தயங்குவார்கள்.  இருந்தாலும் மெதுவாக அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி சொல்லுவார்கள். அது எப்போதுமே மனதைப் பிழிவதாகவே இருக்கும்.”

2014-ல் அவள் விடுவிக்கப்பட்டபோது, எட்டு வயதுச் சிறுமி தன் பெற்றோர்களின் முதலாளி தண்டனையாக எடுத்துச் சென்ற தனது செல்ல வாத்தை வரைந்திருந்தாள்.

ஒரு பையன் அவர்கள் வேலை செய்யவில்லையெனில் தங்கள் குடும்பத்தின் மீது ஏவி விடப்படும் பெரிய நாய்களை  வரைந்திருந்தான். அச்சமும் வன்முறையும் அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டதைப் படம்பிடிப்பதாக அந்தச் சித்திரம் உள்ளது  என ஆலோசகர்கள் தெரிவித்தனர். 

எனினும் காலம் செல்லச் செல்ல இந்த சித்திரங்கள் மேலும் மேலும் சாதகமானவையாக மாறிவிடுகின்றன.

தனது குடும்பத்துடன் ஒர் அரிசி ஆலையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு பதின்பருவச்  சிறுவன் தன் பெற்றோர்களுக்கு ஒரு நாள் வாங்கிக் கொடுக்கவிருப்பதாக நம்பும் ஒரு ஹெலிகாப்டரையும், நடுத்தரமான ஒரு வீட்டையும் அதன் முன்னால் ஒரு கார் நிற்பதைப் போலவும் வரைந்திருந்தான்.

இந்தச் சித்திரங்கள் அனைத்தும் மேலும் வண்ணமயமானதாக, பளிச்சிடும் வானம், பறவைகள், பூத்துக் குலுங்கும் பூக்கள், ஆட்கள் நிரம்பியிருக்கும் ஒரு வீட்டில் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருப்பது போன்றவற்றை கொண்டிருந்தன.

“ஆலைக்கு வெளியே இருக்கும் வாழ்க்கையை அவர்கள் வரையும்போது அவற்றில் வண்ணங்கள் பீறிட்டு எழுகின்றன” என ஜோனா கூறியதோடு, அவர்களின் பெற்றோர்களை விட நல்ல வாழ்க்கையை கற்பனை செய்வது இந்தக் குழந்தைகளுக்கு எளிதாக உள்ளது என்றும் கூறினார்.

வயதில் மூத்தவர்கள் உண்மையாகவே சுதந்திரமானவர்களாக ஆவதற்கு மனோதத்துவ உதவி அதிகமாக தேவைப்படுகிறது. எனென்றால் அவர்கள் பொதுவாக தங்களுடைய பழைய உரிமையாளர்களின் பழிவாங்கல்களுக்கு அஞ்சி இருக்கின்றனர்.

பாலியல் தொழிலுக்காக கடத்திச் செல்லப்பட்டவர்கள் மீட்கப்படும்போது பெரும்பாலும் அவர்கள் காப்பிடங்களில் உதவி பெறுகின்றனர். ஆனால் இவ்வாறு கொத்தடிமைத் தனத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் சென்று முற்றிலுமாக மவுனமாகி விடுகின்றனர்.

“என்றாலும் குழந்தைகள் எப்போதுமே நம்பிக்கையுள்ளவர்களாகவே இருக்கின்றனர்.” என பிஸ்வால் கூறினார்.

“இதற்குச் சற்று நேரமானாலும் கூட, இறுதியில் அவர்கள் தங்களின் கனவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றனர். அவை மிகவும் அழகாகவும் இருக்கின்றன.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: க்ளேர் கோசன்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->