×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

சிறப்புக் கட்டுரை – எந்தக் குழந்தை பள்ளிக்குச் செல்வது? தேர்வு செய்ய திணறும் தென்னிந்திய ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள்

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Thursday, 14 June 2018 12:50 GMT

ARCHIVE PHOTO: Employees sit during their lunch time inside a textile mill in Haryana, northern India April 16, 2014. REUTERS/Anindito Mukherjee

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

பெங்களூரு, ஜூன் 14 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - இந்த வாரம் பள்ளிகள் துவங்கும்போது தன் குழந்தைகள் மீண்டும் வகுப்புக்குச் செல்வதை உறுதிப்படுத்த தன் நகைகளை அடகு வைக்கவும், இரண்டு கடன்களை வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார் கடுமையான உழைப்பாளியான வசந்தம்மா குமார்.

உலகின் புகழ்பெற்ற பெயர்களைத் தாங்கிவரும் சட்டைகளுக்கான கைப்பட்டைகளை வெட்டிக் கொடுப்பதிலேயே ஒரு நாளின் எட்டு மணி நேரத்தை செலவழித்த போதிலும் மிகக் குறைந்த ஊதியமே பெறுகின்ற அந்த தையற்தொழிலாளி தன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களை அணுகவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு அத்தகைய உடைகளை ஏற்றுமதி செய்துவரும் தொழிற்சாலைகளில் அதிக ஊதியத்தை கோரி வரும் ஆண்டுக்கு 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் புழங்கி வரும் இந்திய நெசவு மற்றும் ஆயத்த ஆடைத் தொழிலில் பணிபுரிந்து வரும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களில் அவரும் ஒருவர் ஆவார்.

“மே-ஜூன் மாதங்களில்தான் குழந்தைகளின் பள்ளிக்கட்டணங்களை செலுத்துவது, புதிய சீருடைகளையும் புத்தகங்களையும் வாங்குவது ஆகியவற்றுக்காக பெரும் அளவில் நாங்கள் கடன் வாங்குவது வழக்கமாக இருந்து வருகிறது” என வசந்தம்மா கூறினார்.

“எனது மகள் படிக்கும் கல்லூரி நிர்வாகத்தினர் நன்கொடை கொடுக்குமாறும் கோரியுள்ளனார். இவை அனைத்துமே கடனாகப் பெற்ற பணத்திலிருந்துதான்.  அவர்கள் படிக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். ஆனால் சில நாட்களில் முடியாத ஒன்றாகவே தோன்றுகிறது.”

குறைந்தபட்ச ஊதியத்திற்கான சட்டங்கள் இருந்தபோதிலும், இவர்களைப் போன்ற பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் ஊதியம் என்பது ‘மிகக் குறைந்த’ ஒன்றாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இவர்களில் பலருக்கும் ஊதிய விவரங்களை தெரிவிக்கும் சம்பளப்பட்டியல் வழங்கப்படுவதில்லை; அல்லது பயிற்சியாளர்கள் என்ற வகையிலேயே வேலையில் நியமிக்கப்படுகின்றனர் என இது குறித்த இயக்கங்களை நடத்தி வருவோர் தெரிவிக்கின்றனர்.

வசந்தம்மா மாதம் தோறும் ரூ. 7,000-ஐ ஊதியமாக வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார். ரூ. 2,00,000க்கும் மேலான கடனை அவர் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.

“இத்தொழிலில் பணிபுரியும் ஒவ்வொருவருமே கடனாளியாகத்தான் இருந்து வருகின்றனர். முடிவேயில்லாத கடன்கள் என்ற துயரச் சக்கரமாகவே அது இருந்து வருகிறது” என பெண்களுக்காகவே  சென்னையில் இருந்து செயல்பட்டு வரும் பெண் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுஜாதா மோடி கூறினார்.

“இத்தொழிலில் பணிபுரியும் பெண்கள் யாருக்காவது கொடுக்க வேண்டிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காக யாரிடமாவது தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.”

பெரும்பாலும் பெண்களே ஆன, சுமார் 4 கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இந்தியாவின் செழித்து வரும் ஆயத்த ஆடைத் தொழிலில் பணிபுரிந்து வருகின்றனர். இத்தொழிலின் முக்கிய மையங்கள் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவற்றில் அமைந்துள்ளன.

அவர்கள் உருவாக்கித் தரும் ஆடைகள் உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யப்பட்டு, உலகின் மிகவும் புகழ்பெற்ற வணிக நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் தங்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களில் வேலை செய்வதற்கான நல்ல சூழலை ஏற்படுத்தித் தருவதாக நீண்ட காலமாகவே உறுதியளித்து வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய உறுதிமொழிகள் ஒருபுறம் இருந்த போதிலும், குறைந்த ஊதியம், வசவுகள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், நீண்ட நேர வேலை ஆகியவை இத்தொழிலின் நடைமுறையாகவே இருந்துவருகிறது என்றும், இவற்றில் மாற்றம் என்பது மிகக் குறைவே என்றும் இது குறித்த பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவோர் தெரிவிக்கின்றனர்.

தங்கள் குடும்பத்திற்கு உணவு அளிக்கவும், வாடகை கொடுக்கவுமே இத்தொழிலில் பணிபுரியும் பெண்கள் பெரும்பாலான நேரங்களில் கூடுதலான நேரத்திற்கு வேலை செய்வது அல்லது கடன் வாங்குவது  ஆகியவற்றில் ஈடுபட வேண்டியுள்ளது என்பதை கம்போடியா, இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஓராண்டு கால ஆய்வு கண்டறிந்துள்ளது.

இவர்கள் குறைந்த பட்ச ஊதியம், கூடுதல் வேலை நேரம் ஆகியவற்றை பெற்ற போதிலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் பணத்தட்டுப்பாட்டில்தான் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.

எந்தக் குழந்தை பள்ளிக்குச் செல்ல வேண்டும்?

தன் பதின்பருவ மகளின் பள்ளிப்படிப்பை நிறுத்துவது என்றதொரு முடிவை எடுப்பது என்பது சவிதா ராஜேஷ்-ஐ பொறுத்தவரையில் மிகவும் சிக்கலானதொரு முடிவாகவே இருந்தது.

அதிகரித்துக் கொண்டேபோகும் கடன்கள், ஊதியத்திலோ அல்லது பண்டிகைக்கான போனஸிலோ எந்தவித உயர்வும் இல்லாத நிலையில் தனக்கு வேறு எந்தவித வாய்ப்பும் இல்லை என்று அந்தத் தையல் தொழிலாளி கூறினார்.

முன்னணி ஆயத்த ஆடை வணிக நிறுவனங்களுக்காக சட்டைகளையும், பெண்களுக்கான மேலாடைகளையும் கடந்த 12 ஆண்டுகளாகத் தைத்து வரும் அந்த 35 வயது பெண்மணி மாதம் தோறும் ரூ. 8500-ஐ ஊதியமாக வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்.

“என் பெரிய பெண் 10வது வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டாள். என்றாலும் இந்த ஆண்டு அவள் மேலும் படிப்பதற்குச் செல்லப் போவதில்லை.  அதில் எனக்கு விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்பது விஷயமில்லை. அந்தச் செலவுகளை சமாளிக்க என்னால் முடியாது என்பதே அதற்குக் காரணம்” என வசந்தம்மா குமார்  தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.

“ ஒரு சில மாதங்களுக்கு முன்னால் என் கணவர் பணிபுரிந்து வந்த ஆயத்த ஆடைத் தொழிற்சாலை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டுவிட்டது. இன்னமும் கூட அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இளைய மகளின் பள்ளிக் கட்டணத்திற்காகவும் புத்தகங்களுக்காகவுமே நாங்கள் ரூ. 20,000 கடன் வாங்கியிருக்கிறோம். வட்டிக்கான கடனும் ஏறிக் கொண்டே போகிறது.”

கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நெருக்கடியே பெரும்பாலான தொழிலாளர்களை ஒரு சில ஆண்டுகளில் வேலையை விட்டு நிற்கும் நெருக்கடியை தருகிறது. இதன் மூலம் தொழிற்சாலை ஊழியர்களுக்கான சேமிப்புத் தொகையை அவர்களால் பெற முடிகிறது என தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.

“அதன்பிறகு அவர்கள் மீண்டும் வேலையில் சேருகின்றனர். என்றாலும் புதிய தொழிலாளர்களாகவே அவர்கள் கருதப்படுவதோடு, மீண்டும் அடிமட்ட நிலையில் இருந்து அவர்கள் வேலையைத் தொடங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக நிரந்தர தொழிலாளர்களுக்கான சலுகைகளையும் அவர்கள் இழக்க நேர்கிறது” என 4,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சரோஜா கண்ணப்பா கூறினார்.

“அவர்களுக்கு எந்த வகையில் நிதிப்பாதுகாப்பு என்பதே கிடையாது. மிகப்பெரும் வணிக நிறுவனங்களுக்காக துணி தைப்பதிலேயே 20 ஆண்டுகளைக் கழித்த பெண்களுக்கும் கூட இதே நிலைதான்.”

வாழ்வதற்கு உகந்த ஊதியம் தேவை எனவே தொழிற்சங்கங்களும் இதற்கான பிரச்சாரம் செய்து வருவோரும் கோருகின்றனர்.  பெரும்பாலான ஆசிய நாடுகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியமானது வறுமையை விரட்டி அடிக்கப் போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பெங்களூரு நகரில் மே 1 அன்று நடைபெற்ற உழைப்பாளர் தின பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  தங்களுக்கு  சப்ளை செய்யும் நிறுவனங்களில்  பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்வதற்கு உகந்த ஊதியம் தருவது என்ற அவர்களின் உறுதிமொழியை நிறைவேற்றுமாறு உலகின் புகழ்பெற்ற வணிக நிறுவனங்களைக் கோரும் கோரிக்கை அட்டைகளை அவர்கள் அப்போது ஏந்தி வந்தனர்.

சென்னையில் தொழிலாளர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய தொகையை பெறுவதற்காக சட்டரீதியாகப் போராடி வருகின்றனர்.  12 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக குறைந்த பட்ச ஊதியத்தை அதிகரித்த – 30 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வை அவர்கள் பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்கள் நீதிமன்றங்களில் நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

17 ஆண்டுகளாக தையல் கலைஞராக இருந்து வருகின்ற, தற்போது ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ள ருக்மிணி வி. புட்டசுவாமி “ஒவ்வொரு நாளுமே எங்களுக்குப் போராட்டமாகவே இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

“பெரும்பாலும் தன்னந்தனியே குழந்தைகளை வளர்த்து வரும் தாய்மார்களாக இருக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கான வாழ்வதற்கான செலவுகள், பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் மிக மிக அதிகமாகவே உள்ளன. வாடகையும் மிக அதிகம். கல்வியும் கூட மிகவும் செலவுமிக்க ஒன்றாகவே இருந்து வருகிறது. எனவே கடன் வாங்குவது; அதை திருப்பித் தருவதற்காக தொடர்ந்து வேலை செய்வது என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.”

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: லிண்ட்ச்ய கிரிஃபித்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->