வதந்திகளால் தூண்டப்படும் கும்பல் தாக்குதல் இந்தியாவில் ஆட்கடத்தலுக்கு எதிரான முயற்சிகளை பாதித்துள்ளது

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Tuesday, 3 July 2018 13:42 GMT

FILE PHOTO - WhatsApp and Facebook messenger icons are seen on an iPhone in Manchester , Britain March 27, 2017. REUTERS/Phil Noble

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

 சென்னை, ஜூலை 3 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – குழந்தைகளை கடத்துபவர்கள் என்ற வதந்திகளால் குறைந்தது பத்து பேர்கள் கும்பலால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்களால் தாங்களும் இவற்றுக்கு இலக்காகக் கூடும் என்ற அச்சத்தின் விளைவாக ஆட்கடத்தலுக்கு எதிரான  பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அறக்கட்டளைகளை தங்கள் வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வைத்திருக்கிறது.

குழந்தை கடத்தல்களைப் பற்றி ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்  போன்ற சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான செய்திகள் இந்திய மாநிலங்களில் ஆறுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் தாக்குதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இதன் விளைவாக குறைந்தது பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஞாயிறன்று இந்தியா மேற்குப்பகுதி மாநிலமான மகாராஷ்ட்ராவில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சம்பவங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; இரண்டு பேர் தாக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய தாக்குதல்களுக்குப் பிறகு தங்களது வேலைகளை தள்ளிப் போட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதாகவும், பொதுமக்களின் கோபத்தை ஆட்கடத்தலில்  ஈடுபடுவோர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது என்றும் ஐந்து அறக்கட்டளைகளைச் சேர்ந்தவர்கள் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தனர்.

“இந்தச் செய்திகள் பழைய துண்டு வீடியோக்கள், செய்தித் தலைப்புகள் ஆகியவற்றின் கலவையாக உள்ளன என்றும் இந்த தகவல்கள் தீயாகப் பரவி வருகின்றன” என்று ஆட்கடத்தலுக்கு எதிரான அறக்கட்டளையான த ஃப்ரீடம் ப்ராஜெக்ட் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான அனிதா கனியா கூறினார்.

“பெங்களூரு நகரத்தில் பிச்சை எடுக்க வைப்பதற்காக கடத்தப்பட்ட குழந்தைகளைப் பற்றிய ஓர் ஆய்வை நாங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். ஏனெனில் இந்த ஆய்வுக்கு படமெடுப்பது, குழந்தைகளுடன் பேசுவது ஆகியவை தேவைப்படுகின்றன. எங்களது நோக்கங்களை சந்தேகிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன”

தென் இந்தியாவின் தொழில்நுட்ப மையமான பெங்களூரு நகரத்தில் குழந்தைகளைக் கடத்தும் 400 பேர் நகருக்குள் வந்திருப்பதாக ஓர் எச்சரிக்கை செய்தி வாட்ஸ் ஆப்பில் பரவியதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 26 வயதான ஒருவர்  ஆட்கடத்தலில் ஈடுபடுபவர் என்ற சந்தேகத்தில் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

ஆட்கடத்தல்காரர்கள் இந்தப் போக்கை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற லாபநோக்கற்ற அறக்கட்டளையின் வழக்கறிஞரான அட்ரியன் பிலிப்ஸ் எச்சரித்தார்.

“இத்தகைய நடவடிக்கைகள் ஆட்கடத்தலுக்கு எதிரான உண்மையான வழக்குகளை மிக மோசமாக சித்தரிக்கும். இதில் ஈடுபடுவோரின் நோக்கங்கள் குறித்த சந்தேகங்களையும் எழுப்பும். எல்லா இடங்களிலும் உண்மையான ஆட்கடத்தல்  நிகழ்வுகள் பற்றி போதிய அக்கறை எடுத்துக் கொள்ளப்படமாட்டாது” என்றும் அவர் கூறினார்.

100 கோடி தொலைபேசி சந்தாதாரர்களைக் கொண்ட இந்தியாவில் மிகவும் மலிவான கைபேசி மூலமான இணைய வசதியை அவர்கள் பெற முடிந்துள்ள நிலையில் போலியான செய்தித் தகவல்களும் வீடியோக்களும் உடனடியாக பல்கிப் பரவி, மக்களிடையே பெரும் மன எழுச்சியை உருவாக்குவதோடு, இன ரீதியான நெருக்கடிகளையும் தூண்டி விடுகின்றன.

இத்தகைய வதந்திகள் சுற்றுலாப் பயணிகள், இதர மாநிலங்களிலிருந்து வேலை செய்ய வந்துள்ள குடியேறித் தொழிலாளர்கள் ஆகியோரை குறிவைக்கின்றன. உண்மையிலேயே காணாமல் போன குழந்தைகள் பற்றி வழக்குகளுடன் இவற்றுக்கு எந்தவிதமான தொடர்பும் இருப்பதில்லை.

“ஒரு குழந்தை அபாயத்தில் இருக்கிறது என்ற அடிப்படையான அச்சத்தை இந்த வதந்திகள் தூண்டி விடுகின்றன” என ஞாயிறன்று மகாராஷ்ட்ராவில் இரண்டு பேர் அடித்துக் கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டி காவல்துறை அதிகாரியான ஹர்ஷ் பொத்தார் கூறினார்.

“மக்கள் தங்களது குழந்தைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். என்றாலும் பொதுமக்களிடையே பீதியை கிளப்பிவிடுவோரையும் நாங்கள் கைது செய்து வருகிறோம்.”

கடந்த ஆண்டில் சுமார் 4 கோடி பேர் கட்டாய உடலுழைப்பு அல்லது கட்டாய திருமணம் ஆகியவற்றின் மூலம் நவீன காலத்து அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர் என  ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் நிறுவனமும் மக்கள் உரிமைகளுக்கான குழுவான வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷனும் தெரிவிக்கின்றன.

ஆட்கடத்தல் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக தெற்காசியப் பகுதி விளங்குகிறது.

2016-ம் ஆண்டில் ஆட்கடத்தல்  நடவடிக்கைகள் அதற்கு முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை இந்திய அரசின் புள்ளிவிவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட  பாதிப்பேர் கட்டாய உடலுழைப்பிற்கு ஆளாக்கப்படுகின்றனர்; 33 சதவீதம் பேர் விபச்சாரம், குழந்தைகளை ஈடுபடுத்தும் ஆபாச படங்கள் ஆகிய வகைகளில் பாலியல் ரீதியிலான சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: கிளாரி கோஜென்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.