பாலியல் தொழிலாளிகளின் அச்சங்கள் ஆதாரமற்றவை என்று கூறும் ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் புதிய சட்டத்தை நிறைவேற்றக் கோருகின்றனர்

by Anuradha Nagaraj and Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Monday, 16 July 2018 13:36 GMT

ARCHIVE PHOTO: Shashi Tharoor, a Member of Parliament from India's main opposition Congress party, poses after an interview with Thomson Reuters Foundation at his office in New Delhi, India, January 25, 2016. REUTERS/Anindito Mukherjee

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ் மற்றும் ரோலி ஸ்ரீவஸ்தவா 

சென்னை/மும்பை, ஜூலை 16 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - திட்டமிடப்பட்டுள்ள சட்டத் திருத்தமானது பாலியல் தொழிலில் விருப்பத்துடன் ஈடுபட்டு வருபவர்களை குறிவைக்கப் பயன்படுத்தக் கூடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் கூறியதை அடுத்து, இந்தக் குற்றத்தை எதிர்த்துப் போராட இந்த சட்டத்தை ஆதரிக்க வேண்டுமென ஆட்கடத்தலில் தப்பிப் பிழைத்தவர்கள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொள்கின்றனர். 

இந்த வாரத்தில் மீண்டும் கூடவிருக்கும் நாடாளுமன்றத்தில் இந்த சட்ட மசோதா முன்வைக்கப்படுவதற்கு முன்பாக இது குறித்து மேலும் கலந்தாலோசனைகள் நடத்தப்பட  வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவரான சசி தரூர்  கேட்டுக் கொண்டுள்ளார். 

ஆயிரக்கணக்கான பாலியல் தொழிலாளிகளும், நூற்றுக்கணக்கான செயல்பாட்டாளர்களும், 30 மக்கள் சமூக குழுக்களும் ஒப்புதல் அளித்துள்ள ஒரு மனுவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கான அமைச்சர் மேனகா காந்தியிடம் அளித்தபோது அவர் தனது இந்தக் கவலைகளை எழுப்பியிருந்தார். 

எனினும் ஆட்கடத்தலில் இருந்து மீண்டவர்களும் இது குறித்த இயக்கத்தை நடத்திவரும்  செயல்பாட்டாளர்களும் இந்த மனுவை நிராகரித்ததோடு, முன்வைக்கப்படவுள்ள சட்டமசோதாவின் நகல் இதனால் பாதிக்கப்பட்டவர்களின்மீதே கவனம் செலுத்துகிறது என்றும், மற்றவர்களை இந்தத் தொழிலில்  ஈடுபட கட்டாயப்படுத்தவில்லை எனில் இந்தச் சட்டம் பாலியல் தொழிலாளிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படாது என்றும் குறிப்பிட்டனர். 

பல ஆண்டுக்கால கலந்தாலோசனைகளுக்குப் பிறகே இந்த சட்ட மசோதாவிற்கான வரைவு உருவாக்கப்பட்டது என்பதையும்  இது குறித்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவோர் சுட்டிக் காட்டுகின்றனர்.

“இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் நிறுத்தி வைக்க வேண்டாம் என நாங்கள் அரசை வற்புறுத்துகிறோம்” என பதின்பருவ வயதிலேயே கடத்தப்பட்ட 23 வயதுபெண் கூறினார்.

“எங்கள் வாழ்க்கையே இதைத்தான் நம்பியிருக்கிறது. விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் கோரிக்கைகளுக்காக எங்களை பிணைக்கைதிகளாக ஆக்கிவிடக் கூடாது” என இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென போராடி வரும் ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பான உத்தான் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சட்டமசோதாவின் முதல் வரைவு அறிக்கையை அரசு வெளியிட்டு, நிபுணர்களுடனான கலந்தாலோசனைகளை துவக்கி, சமூக ஊடகங்களின் மூலமாக இது குறித்த கருத்துக்களை பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே தரூரின் இந்த மனு வந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் மார்ச் மாதத்திலேயே இந்த மசோதா குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் மசோதா நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்படாத நிலையில், 2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்களில் அரசியல் ரீதியான கவனம் மாறிப் போவதால் இது மேலும் தாமதமாகக் கூடும் என கவலையையும் எழுப்பியுள்ளது.

இந்த மசோதாவானது பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டோரையும் விருப்பத்துடன் ஈடுபடுபவர்களையும் ஒரே வகையில் கையாளுகிறது என்றும் இதன் விளைவாக அவர்களும் கட்டாயமாக மீட்கப்படும் அபாயத்திற்கு அவர்களை ஆளாக்குகிறது என தரூரின் மனு குறிப்பிடுகிறது.

இந்தக் கவலைகள் தவறானவை என ஆட்கடத்தலுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் சுனிதா கிருஷ்ணன் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார். “அவர்களின் (வயதில்மூத்த பாலியல் தொழிலாளிகளின்) வாழ்க்கைக்கான ஏற்பாடுகள் பாதிப்புக்கு ஆளாகிறது என்பதுதான் அவர்களின் கவலையாக இருக்கிறது. அவர்கள் அத்தொழிலுக்காக ஆட்கடத்தலில் பலியானவர்களை வைத்து பாலியல் தொழில் மையங்களை நடத்தினார்களெனில் அது நிச்சயமாக பாதிக்கப்படத்தான் செய்யும். அப்படி இல்லையெனில் இந்தச் சட்டம் ஏன் அவர்களை பாதிக்கும்?” என்றும் அவர்  வினவினார்.

ஆட்கடத்தல்காரர்களை விசாரிக்கவும் வழக்கு தொடுக்கவுமென மேலும் அதிக நடவடிக்கைகளைக் கொண்டதாக  இந்தச் சட்டம் இருக்க வேண்டும் எனவும் இந்த மனு கோருகிறது.

இந்தச் சட்டத்தின் கீழ் ஆட்கடத்தல்காரர்கள் 10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை பெறக் கூடும் என்பதையும் இது குறித்த இயக்கங்களை நடத்துவோர் சுட்டிக் காட்டுகின்றனர். இதில் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்துவதோடு, பாலியல் தொழில் மையங்களில் நடத்தப்படும் அதிரடிச் சோதனைகளில் கண்டுபிடிக்கப்படும் பெண்களும் சிறுமிகளும் சிறையில் அடைக்கப்படுவதிலிருந்தும் தடுக்கிறது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சுனிதா கிருஷ்ணன் பதிவு செய்த சட்டபூர்வமான மனுவை அடுத்தே 2015ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை சமாளிக்கும் வகையில் அதில் பாதிக்கப்படுபவர்களை மையமாகக் கொண்ட சட்டம் ஒன்றை உருவாக்குமாறு மத்திய அரசை அறிவுறுத்தியது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் தாக்கம் என்பது இதுவரை கண்டிராத ஒன்றாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“முதல் முறையாக இப்போதுதான் இந்தியா (சட்டத்தின் மூலமாக)   ஆட்கடத்தல் என்பது திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு குற்றம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் நாடு தழுவிய அளவிலும், உள்ளூர் அளவிலும் இந்தக் குற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஓர் ஏற்பாட்டையும் உருவாக்கியுள்ளதோடு, இதற்கென நிதிஒதுக்கீட்டையும் செய்துள்ளது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.) 

Our Standards: The Thomson Reuters Trust Principles.