பாலியல் வன்கொடுமைகள் குறித்த வழக்குகள் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்திய அரசு குழந்தைகள் காப்பகங்களில் சோதனைகளை மேற்கொள்கிறது

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Wednesday, 8 August 2018 10:52 GMT

ARCHIVE PHOTO: Children sit atop a police barricade on a street in New Delhi October 31, 2013. REUTERS/Adnan Abidi

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, ஆகஸ்ட் 8- (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – குழந்தைகள் காப்பகம் ஒன்றில் நடத்திய சோதனையில் 23 சிறுமிகளையும் சிறுவர்களையும் மீட்டெடுத்த காவல்துறை அவர்கள் பாலியல் தொழிலுக்காக விற்கப்படுகின்றனர் என குறிப்பிட்டதைத் தொடர்ந்து வட இந்திய மாநிலம் ஒன்று குழந்தைகளுக்கான காப்பகங்கள் அனைத்திலும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

உத்திரப் பிரதேச மாநிலத்தின் தெவோரியா நகரில் உள்ள காப்பகத்தில் இருந்து தப்பித்த 13 வயது சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் தாங்கள் சோதனை நடத்தி 20 சிறுமிகளையும் 3 சிறுவர்களையும் மீட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. “இரவு நேரங்களில் சிறுமிகள் கார்களில் அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவர்கள் அழுதுகொண்டே காலையில் திரும்பி வருகின்றனர் என்றும் எங்களுக்குத் தகவல் அளித்த குழந்தை தெரிவித்தது” என தெவோரியாவில் இந்த வழக்கை விசாரித்து வரும் ஒரு காவல் அதிகாரியான தயாராம் சிங் கவுர் கூறினார்.

தங்கள் மாவட்டங்களில் உள்ள காப்பகங்களில் அனைத்திலும் உள்ள நிலைமைகளை சோதிக்குமாறு மாநிலம் முழுவதிலும் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரான ரீட்டா பகுகுணா ஜோஷி தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் கூறினார்.

“இது உண்மையிலேயே அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. பெண்களின் சுய அதிகாரம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் இந்த 2018-ஆம் ஆண்டில் இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதொரு நிலைமைதான்.” எனவும் அவர் கூறினார்.

அண்டை மாநிலமான பீகாரில் காப்பகம் ஒன்றிலிருந்து 29 சிறுமிகளை காவல்துறையினர் மீட்டெடுத்து, 10 பேரை கைது செய்து அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் பற்றிய விசாரணையை மேற்கொண்ட சில வாரங்களிலேயே இந்த அதிரடிச் சோதனை நடைபெற்றுள்ளது.

நாடுமுழுவதிலும் உள்ள குழந்தைகள் காப்பகங்கள் அனைத்திலும் 60 நாட்களுக்குள் சோதனைகளை நடத்த தாம் உத்தரவிட்டுள்ளதாக  மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைநலனுக்கான அமைச்சரான மேனகா காந்தி தெரிவித்தார் என புதன்கிழமையன்று த இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சுட்டிக் காட்டியிருந்தது.

காந்தியின் அலுவலகம் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டது.

இந்தியாவில் சுமார் 7,300 குழந்தைகள் காப்பகங்கள் உள்ளன என்றும், அவற்றில் சுமார் 2,30,000 குழந்தைகள் உள்ளனர் என்று அரசு அமைப்பான குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய கமிஷன் மதிப்பிட்டுள்ளது.

இந்தக் காப்பகங்களில் சுமார் 1,300 காப்பகங்கள் பதிவு செய்யப்படாதவை என்றும் எனவே எந்தவிதமான கண்காணிப்பும் அற்ற நிலையில் சட்டவிரோதமான வகையில் அவை செயல்பட்டு வருகின்றன என்றும் அது தெரிவித்துள்ளது.

தெவோரியாவில் உள்ள காப்பகமானது கடந்த ஓராண்டிற்கும் மேலாக உரிமம் ஏதுமின்றி செயல்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது. இத்தகைய இடங்களில் கொடுமைப்படுத்தல் மிக அதிகமாகவே இருக்கும் என இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலமான மகாராஷ்ட்ராவில் உள்ள காப்பகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்ற, மும்பை நகரிலுள்ள டாடா இன்ஸ்டியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் நிறுவனத்தில் சட்டப் பேராசிரியரான ஆஷா பாஜ்பாய் கருத்து தெரிவித்தார்.

 “பெரும்பாலான காப்பகங்களில் உள்ள நிலைமை இதுவேதான் என்றும் நான் சென்று பார்த்து வந்த காப்பகங்களிலும் கூட குழந்தைகள் மோசமாக நடத்தப்பட்டனர்” என்றும் பாஜ்பாய் கூறினார்.

தெவோரியாவில் இந்த காப்பகத்தை நடத்திவந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்தக் காப்பகத்திலிருந்து சிறுமிகளை பணம் கொடுத்து அழைத்துச் சென்றதாகவும் பாலியல் ரீதியாக அவர்களை கொடுமை செய்ததாக  சந்தேகப்படுவோரைவும் இது குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளோர் பின்தொடர்ந்து  வருவதாகவும் காவல்துறை அதிகாரியான கவுர் தெரிவித்தார்.

“இந்தச் சிறுமிகள் கொடுத்த விவரங்களின் அடிப்படையில் இதில் ஈடுபட்ட நபர்கள், கார்கள் ஆகியவற்றை கண்டுபிடிக்க நாங்கள் இப்போது முயற்சித்து வருகிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

8 வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நாடுமுழுவதிலும் எழுந்த கடுமையான அதிருப்தியைத் தொடர்ந்து 12வயதுக்குக் கீழுள்ள சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆட்படுத்துவோருக்கு மரண தண்டனையை இந்தியா இந்த ஆண்டு அறிமுகம் செய்ததோடு, அந்த வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் ஆகியோரின் மீதான பாலியல் வன்கொடுமைக்கான சிறைத் தண்டனையையும் அதிகரித்துள்ளது.

 

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

 

 

Our Standards: The Thomson Reuters Trust Principles.