தனிச்சிறப்பான நிகழ்ச்சி: கிண்டல் நிகழ்ச்சியின் மூலம் ஒதுக்கி வைக்கப்படும் போக்கை அம்பலப்படுத்தும் வேலைக்காரப் பெண்மணி

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Thursday, 9 August 2018 06:05 GMT

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, ஆக. 9 - (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – கிண்டல் நிகழ்ச்சியின் மூலம் தனது உண்மையான திறமையை அறிந்து கொள்ளும் வரையில் தீபிகா மாத்ரே மும்பை நகரில் ஒரு வீட்டு வேலைக்காரப் பெண்ணாக பல ஆண்டுகள் சமையல் செய்து, பாத்திரங்களைக் கழுவி, குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர் தான்.

வாடிக்கையாளர்களை விலா நோக சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவது மட்டுமின்றி, பெரும்பாலும் பேசவியலாத நிலையில் உள்ள வீட்டு வேலை செய்யும் ஊழியர்களுக்கான குரலாகவும் மாத்ரே மாறியுள்ளார். இந்த ஊழியர்களில் பலரும் அன்றாடம் சமூக ஒதுக்கலை சந்திப்பவர்களாகவே உள்ளனர்.

“எங்களை வேலைக்கு வைப்பவர்கள் எங்களின் வேலையைத் தான் விரும்புகிறார்களே தவிர எங்களை அல்ல” என்று தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் கூறினார்.

“அவர்களின் இல்லங்களை நாங்கள் சுத்தமாக வைத்துக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் பயணிக்கும் அதே லிஃப்டில் நாங்கள்  வரும்போது அவர்கள் அதை விரும்புவதில்லை. எங்களிடமிருந்து துர்நாற்றம் அடிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் கண்ணுக்குத் தென்படாதவர்களாகவே இருக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றனர்.”

அவரது எஜமானிகளில் ஒருவர் – “மற்ற எஜமானிகளைப் போல் அல்லாமல்” மிகவும் நன்றாக நடந்து கொள்பவர் அவர் – வீட்டு வேலை செய்பவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த போதுதான் மாத்ரேயின் கிண்டல் நிகழ்ச்சியை நோக்கிய எதிர்பாராத பாதை துவங்கியது. அந்த நிகழ்ச்சியில் மற்றவர்கள் எல்லாம் நடனம் ஆடினார்கள்; பாட்டுப் பாடினார்கள். ஆனால் மாத்ரே தன்னைப் போன்றவர்களின் வேலையைப் பற்றிய கிண்டல் கதைகளை அப்போது சொன்னார்.

அவரது நிகழ்ச்சி வியக்கத்தக்க வகையில் அனைவராலும் பாராட்டப் பெற்றது. அந்த எஜமானியும், அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு பத்திரிக்கை நிருபரும் தனது நிகழ்ச்சியால் மிகவும் கவரப்பட்டு நகைச்சுவை நடிகரான அதிதி மிட்டல் என்ற தங்கள் நண்பரிடம் அறிமுகப்படுத்தியதாகவும்,  அவர்தான் மும்பை நகரின் நகைச்சுவை உலகில் தனக்கு ஓர் இடம் கிடைக்க உதவியதாகவும் கூறினார்.

நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கான கிளப்களில் இப்போது நிகழ்ச்சிகளை நடத்திவரும்  மாத்ரே பெரும்பாலான வீடுகளில் வேலைக்காரிகள் மட்டுமே பயன்படுத்தும் பாத்திரங்கள், இத்தகைய பெரும் வசதிமிக்கவர்கள் வசிக்கும் நாகரீகமான அடுக்குமாடி கட்டிடங்களில் “வேலைக்காரர்களுக்கு மட்டுமேயான லிஃப்ட்கள்” போன்ற சமூக ஒதுக்கல் பற்றிய கதைகளை கூறும்போது கைதட்டல்களை அள்ளி வருகிறார்.

“அவர்களைப் போலவே அதே தட்டுகளில் வேலைக்காரர்கள் சாப்பிடக் கூடாது என்றே நம்புகிறார்கள். பரவாயில்லை. அப்படியே இருங்கள். உங்கள் பாத்திரங்களை எல்லாம் ஒளித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆனாலும் நான் சமைத்த உணவைத்தான் இப்போதும் நீங்கள் சாப்பிடுகிறீர்கள்” என தன் நிகழ்ச்சிகளில் ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

அதிகரித்து வரும் செல்வச் செழிப்பான வர்க்கத்தினர், வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவது ஆகியவற்றின் விளைவாக வீட்டு வேலைக்கான ஊழியர்களுக்கான தேவையும் பெருமளவிற்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் சுமார் 5 கோடி வீட்டு வேலை செய்வோர் உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர். போதிய சட்டப் பாதுகாப்புகள் இல்லாத நிலையில் இவர்கள் தொடர்ந்து சுரண்டலுக்கு ஆளாகி வருகின்றனர் என இது குறித்த இயக்கங்களை நடத்தி வருவோர் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு மேம்படுத்தப்பட்ட, குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உத்திரவாதம் செய்யும் வீட்டு வேலை செய்யும் ஊழியர்களுக்கான தேசியக் கொள்கை 2011ஆம் ஆண்டிலிருந்து அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

பளபளப்பான வணிக வளாகங்களில் விலைக்கு வாங்கும் பொருட்களுக்காக அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்த போதிலும் வசதியான பெண்மணிகள் ஒரு சில ரூபாய்களுக்காக தங்களிடம் மல்லுக் கட்டும் சம்பவம் உள்ளிட்டு மாத்ரேயின் கிண்டல் நிகழ்ச்சிகள் கடந்த வாரத்தில் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது.

     

   

“இதற்கான தீர்வு ஒரு ஸ்டிக்கர்தான். தன் சக மனிதன் குறித்து மக்களுக்கு மிகக் குறைந்த கருணைதான் உள்ளது. ஆனால் ஒரு ஸ்டிக்கரில் மீதுள்ள விலைக்கு அவர்கள் மிகுந்த மதிப்பளிக்கிறார்கள்” என அவர் தனது நிகழ்ச்சியின்போது குறிப்பிட்டார். 

திறமையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த வாரம் பங்குபெற உள்ள மாத்ரேயின் நிகழ்ச்சி வீட்டு வேலை செய்யும் ஊழியர்களுக்கான சட்டப் பாதுகாப்பின் தேவை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் என்று இது குறித்த இயக்கங்களை நடத்துவோர்  நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 “வீட்டில் வேலை செய்பவர்களை மரியாதையோடு நடத்த வேண்டும் என்ற தெளிவான செய்தியாக இந்த நிகழ்ச்சி இருக்கும்” என நேஷனல் டொமஸ்டிக் ஒர்க்கர்ஸ் மூவ்மெண்ட் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கிறிஸ்டின் மேரி குறிப்பிட்டார்.

 வீட்டு வேலை செய்வதிலிருந்து வெளிவந்து விட்ட மாத்ரே இப்போது வேலை செய்ய இயலாத அளவிற்கு நோய்வாய்ப்பட்டுள்ள தன் கணவன், மூன்று குழந்தைகளை காப்பாற்றுவதற்காக நகைகளை விற்கும் தொழிலை மேற்கொண்டுள்ளார். எனினும் இன்னமும் அவர் தன்னை வீட்டு வேலை செய்யும் பெண் என்றே அறிமுகம் செய்து கொள்கிறார்.

 “நான் பிரபலமான ஒரு நபராக மாறிவிட்டேன். இருந்தாலும் இந்த கிண்டல் நிகழ்ச்சியில் இருந்து நான் பணம் சம்பாதிப்பதில்லை. வாழ்க்கை கடினமான ஒன்றாகத்தான் இருக்கிறது. என்றாலும் மக்கள் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள். நான் சொல்லும் செய்தியும் கூட பரவலாக எல்லா இடங்களுக்கும் போய்ச் சேருகிறது.” என்று அவர் குறிப்பிட்டார்.    

 (செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.