×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

அரசு நடவடிக்கையையும் மீறி நீரில் மூழ்கி இறக்கும் மணல் எடுக்கும் இந்தியத் தொழிலாளர்கள்

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Monday, 13 August 2018 00:01 GMT

Workers empty sand from a boat on the shore of Vasai creek on the outskirts of Mumbai, India, June 4, 2018. Thomson Reuters Foundation/Roli Srivastava

Image Caption and Rights Information

 - ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, ஆக. 13 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - தனது சகோதரன் மணல் எடுக்கும் படகிற்கு அப்பால் இழுத்துச் செல்லப்படுவதையும் அவனது கால் நங்கூரக் கயிறில் சிக்கிக் கிடப்பதையும், மும்பைக்கு அருகே உள்ள இருண்ட கடற்கழிமுகப்பகுதியில் மூழ்கிப் போகும்போது அவனது கைகள் தொங்கிக் கொண்டிருப்பதையும் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தார் ரகுநாத் பர்தாடே. 

அதற்குச் சற்று முன்புதான் ரகுநாத்தும் பபான் பர்தாடேயும் அந்தக் கழிமுகப் பகுதியின் அடியாழத்திலிருந்து மணலை கைகளால் சுரண்டி எடுத்துக் கொண்டிருந்தனர். பெருமளவிற்கு உயிருக்கு ஊறு விளைவிக்கும் இந்தத் தொழில்தான் இந்தியாவின் வளர்ந்து வரும் கட்டுமானத் தொழிலுக்கு உயிரோட்டமாக இருக்கிறது. அதிகாரபூர்வமான தடை இருந்தபோதிலும் இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது.

“ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே அவனது உடலை எங்களால் கண்டெடுக்க முடிந்தது” எனக் கூறிய பர்தாடே 13 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மணலை சுரண்டியெடுக்கும் வேலையை தொடங்கியதிலிருந்து இது போன்று நீரில் மூழ்கி இறக்கும் பல மரணங்களை சந்தித்து வந்துள்ளதாகவும் மேலும் கூறினார்.

“வழக்கமாக இவ்வாறு மணலை சுரண்டி எடுப்போர் நீரிலேயே அடித்துச் செல்லப்பட்டு அவர்களின் உடல்கள் பல நாட்களுக்குப் பிறகே மேலே வரும்” மழைபெய்து கொண்டிருந்த ஒரு பிற்பகல் நேரத்தில் மும்பைக்கு அருகில் உள்ள பால்கர் மாவட்டத்தின் பாரத்பாடா கிராமத்தில் உள்ள தனது குடிசையில் தன் சகோதரனின் குழந்தைகள் அருகே சுற்றிக் கொண்டிருந்த போது அவர் இதைக் குறிப்பிட்டார்.

உல்லாஸ் ஆற்றின் நீரை கடலில் கொண்டு சேர்க்கும் இரண்டு முக்கிய பாதைகளில் ஒன்றான வாசாய் கழிமுகப் பகுதியில் சட்டவிரோதமாக மணலை அள்ளும்போது தொழிலாளர்கள் கடலில் மூழ்கி இறந்து போவதை தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனின் விசாரணை ஒன்று வெளிப்படுத்திய ஓராண்டுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் பபானின் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

 

இந்தியாவின் மிகவும் ஏழ்மையான பகுதிகளைச் சேர்ந்தவர்களான சுமார் 75,000 பேர் தங்கள் உயிரையும் உடல் நிலையையும் பணயம் வைத்து கும்மிருட்டான கடல்பகுதியில் சுமார் 40 அடி ஆழத்திற்கு (12 மீட்டர்) இறங்கி இரும்பு பக்கெட்டுகளில் மணலை அள்ளி வரும் வேலையில் நாளொன்றுக்கு சுமார் 12 மணி நேரத்தைச் செலவழிக்கின்றனர் என்பதையும் அந்த விசாரணையின் மூலம் தெரிய வந்தது. இந்த விசாரணை வெளிவந்ததைத் தொடர்ந்து கழிமுகப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதற்கு முடிவு கட்டுவதாகவும், உரிய விதிமுறைகளை அமல்படுத்துவதாகவும், இதில் ஈடுபடுவோருக்கு மாற்று வேலைகளுக்கு ஏற்பாடு செய்வதாகவும் மகாராஷ்ட்ரா மாநில அரசு உறுதியளித்தது. ஓராண்டிற்குப் பிறகு இவ்வாறு மணலை அள்ளும் படகுகள் வெகுவாகக் குறைந்து போன போதிலும் இந்த வேலைவாய்ப்பிற்கான திட்டம் குறித்த பொறுப்பினை அரசின் பல்வேறு மட்டங்களிலும் உள்ளவர்கள் அடுத்தவர்களின் மீது சுமத்தியதன் விளைவாக உறுதியளிக்கப்பட்ட வேலை என்பது நடைமுறைப்படுத்தப் படவில்லை. இவ்வாறு மணலை அள்ளுவோருக்கு மாற்று வேலை அளிப்பது குறித்து தான் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாவட்ட தலைமை அதிகாரிகளுக்கு உள்ளது என மகாராஷ்ட்ரா மாநில வருவாய்த்துறையின் துணை ஆணையர் சித்தாராம் சலிமாத் கூறினார். எனினும் மணலை அள்ளும் இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பும் வசதியும் மாநில அரசிடம்தான் உள்ளது என இந்தக் கழிமுகப் பகுதி தானே மாவட்டத்தின்  துணை ஆட்சியர் அனில் பவார் குறிப்பிட்டார். “இவ்வாறு மணலை அள்ளும் துறைமுகப் பகுதிகளில் நாங்கள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு மணலை கைப்பற்றினோம். என்றாலும் இத்தொழிலில் ஈடுபடுவோரின் மறுவாழ்வு என்பது (மாநில) அரசு மேற்கொள்ள வேண்டிய ஒரு கொள்கை முடிவு ஆகும்” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் கூறினார். இந்த விஷயம் குறித்து விவாதிக்க கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு நான்கு மாதங்களுக்கு முன்பே தான் மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ்-க்கு எழுதியதாக இந்த வாசாய் கழிமுகப் பகுதி செல்கின்ற பிவாந்தி பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான கபில் பாட்டீல் கூறினார்.
A family member of Babban Bartade who died while mining sand show his picture as his children look on in Bharatpada village, India, June 29, 2018. Thomson Reuters Foundation/Roli Srivastava

இவர்களுக்கு வேறு வேலை கொடுப்பது என்ற திட்டம் குறித்து ஃபட்நாவிஸ் சாதகமான கருத்தைக் கொண்டிருப்பதாக தான் கருதியபோதிலும் இந்த கூட்டம் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை என்று பாட்டீல் கூறினார்.

“இந்தத் தொழிலாளர்களின் நலன் குறித்து தீவிரமான கவனம் செலுத்தப்பட்டு வருகிறது” என மாநில முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த ஊடகங்களிடம் பேசுவதற்கு அதிகாரம் அளிக்கப்படாத நிலையில் தன் பெயரை தெரிவிக்க விரும்பாத ஓர் அதிகாரி தெரிவித்தார்.

எனினும்  இத்தொழிலாளிகளில் பெரும்பாலோர் சட்டவிரோதமாகவே இத்தொழிலில் ஈடுபடும் நிலையில், அவர்கள் இத்தொழிலில்தான் ஈடுபடுகின்றனர் என்பதற்கான எந்தவித ஆதாரமும் இருப்பதில்லை. எனவே அரசாங்கம் வேலை அளிக்கும் ஏற்பாட்டை துவங்கும்போது மறுவாழ்வுக்குத் தகுதியானோர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இல்லாமல் கூட போகலாம் என இந்தப் பிரச்சனை குறித்து உள்ளூர் அளவில் இயக்கம் நடத்தி வரும் நந்தகுமார்  பவார் கூறினார்.

‘இன்னலை எதிர்கொள்வது பொருத்தமானதே’

தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் இத்தகைய மணல் அள்ளும் பகுதிகளுக்கு சமீபத்தில் சென்றிருந்தபோது, அரசின் அதிரடி நடவடிக்கைக்குப் பிறகு இத்தொழிலின் வேகம் குறைந்துள்ளதை காண முடிந்தது. எனினும் வறுமையானது இன்னும் ஒரு சிலரை கழிமுகப்பகுதியின் ஆழத்திற்கு செல்லுமாறு கட்டாயப்படுத்துகிறது.

“இதற்கு முன்பு 100 படகுகள் இருந்ததெனில், இப்போது 25 படகுகள் செயல்படுகின்றன” என இவ்வாறு கடலில் இறங்கி மணலை அள்ளும் தொழிலில் ஈடுபடும் ஹர்னம் ராஜ் குறிப்பிட்டார். இவர் எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் வடபகுதி மாநிலமான உத்திரப்பிரதேசத்திலிருந்து வந்து குடியேறியவர் ஆவார்.

வாசாய் கழிமுகப்பகுதியில் உள்ள ஒரு கிராமமான கால்ஹெரின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான முராரி பாபுவிற்குச் சொந்தமான படகில் வேலை செய்து வருபவரான ராஜ் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபடவே தாம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 “தொழிலாளர்கள் பெருமளவிற்கு கழிமுகப்பகுதியில் இறங்கக்கூடாது என அரசாங்கம் சொல்கிறது என்றாலும் நீண்ட நாட்களாகவே அவர்கள் இந்த வேலையைத்தான் செய்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து செய்வார்கள்” எனவும் பாபு கூறினார்.

இதற்கான ஊதியமும் கூட இந்த இன்னலை எதிர்கொள்வதற்கு உரியதாகவே உள்ளது என்றும் ராஜ் கூறினார்.

“எனது காது, மூக்கு ஆகியவற்றிலிருந்து தொடர்ந்து ரத்தம் வடிந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் வேறு எங்கு நான் வேலையைத் தேட முடியும்? இந்த அளவிற்கு பணத்தை என்னால் சம்பாதிக்க முடியாமல் போனால் என்ன செய்வது?” என்று அவர் கூறுகையில் தொழிலாளர்கள் கழிமுகப் பகுதியில் படகுகளிலிருந்து மணலை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தனர்.

இந்தியாவின் தினசரி ஊதியம் என்பது சராசரியாக ரூ. 270 ஆக இருக்கையில் மணலும் சரளைக்கற்களும் நிரப்பப்பட்ட ஒரு படகுக்கு இத்தொழிலாளர்கள் நாளொன்றுக்கு ரூ. 1200-ஐ சம்பாதிக்க முடிகிறது.

இந்த ஊதிய வேறுபாடுதான் அரசின் வேலைக்கான திட்டங்களுக்கு ஒப்புக் கொண்டு கையெழுத்திட இந்த தொழிலாளர்களை சம்மதிக்க வைப்பது மிகவும் கடினமாக உள்ளது என மும்பை நகருக்கு அருகிலுள்ள பால்கர் மாவட்டத்தின்  தலைமை அதிகாரியான ப்ரசாந்த் நர்னவாரே கூறினார்.

“அவர்களின் சுகாதார பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யவும், வாழ்க்கை வசதியை அளிக்கவும் நாங்கள் தயாராகத்தான் உள்ளோம்” எனவும் அவர் கூறினார்.

எனினும் வேலைவாய்ப்பிற்கான ஒரு திட்டத்தைத்  தயாரிப்பதற்காக கடந்த ஆண்டு அரசு அதிகாரிகள் இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்ட பிறகு பெரிய மாற்றம் எதையும் தாங்கள் காணவில்லை என பால்கர் மாவட்டத்தில் உள்ள பசுமையான வயல்கள் சூழ்ந்த ததாடே கட்காரி பாரா கிராமத்தில் வசிப்பவர்கள் குறிப்பிட்டனர்.

அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை போட்டும் திட்டத்தில்  தான் பங்கேற்றதாகவும், அதற்கென நாளொன்றுக்கு ரூ 100 அல்லது ரூ. 200 மட்டுமே பெற்றதாகவும் அதுவும் கூட ஒரே நேரத்தில் தொடர்ந்து நான்கைந்து நாட்களுக்கு மட்டுமே நீடித்ததாகவும் பாபு கன்ஹா கவாரே கூறினார்.

“இங்கு வேலை எதுவுமில்லை” எனவும் அவர் கூறினார்.

இங்குள்ள 30 குடும்பங்களில் கிட்டத்தட்ட 20 குடும்பங்கள் சுமார் 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாசாய் கழிமுகப்பகுதியில் நடைபெற்று வரும் மணல் அள்ளும் தொழிலையே நம்பியுள்ளனர் என அந்த கிராமத்தில் வசிப்போர் தெரிவித்தனர்.

Sand miners pose for a picture in Dadade Katkari Pada village in Vasai City in Thane District of Maharashtra State, India, June 29, 2018. Thomson Reuters Foundation/Roli Srivastava

பெரும் வியாபாரம்

உலக அளவில் மணல் என்பது பற்றாக்குறையானதாக மாறியுள்ளது என்றும், உலகம் முழுவதிலும் உள்ள ஆறுகள் அடித்துக் கொண்டு வரும் வண்டல் மண்ணை விட அதிகமான அளவிற்கு இந்த மணல் நுகர்வு என்பது உலக அளவில் 40 பில்லியன் டன்களாக உள்ளன என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழலுக்கான திட்டம் தெரிவிக்கிறது.

கடற்கரையோரப் பகுதிகள், கடல்வாழ் உயிரினங்கள், மணல் சேமிப்பு ஆகியவற்றுக்கு ஏற்படுத்தும் அபாயத்தை சுட்டிக் காட்டி நீதிமன்றங்களில் எண்ணற்ற வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மணல் எடுப்பது என்பது சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கையானது மணலை மிகுந்த மதிப்பிற்குரிய ஒன்றாக மாற்ற உதவியுள்ளதோடு “இந்தியாவின் தங்கம்” என்று கூறப்படுகின்ற இந்த மணலை சுரண்டும் தொழிலானது குற்றங்களில் ஈடுபடும் குழுக்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

சட்டவிரோதமாக இவ்வாறு மணலை அள்ளும் தொழிலானது வியாபாரிகள், கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவோர், இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் வணிகர்கள் ஆகியோரின் தொடர்புகளைக் கொண்ட  வலைப்பின்னலாக அமையும்  ‘மணல் மாஃபியா’விற்கு ஆண்டுக்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய பணத்தை கொண்டு வருகிறது புதுடெல்லியிலிருந்து செயல்பட்டு வரும் சுற்றுச்சூழலுக்கான குழுவான செண்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் மதிப்பிட்டுள்ளது.

இந்த மணல் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக ஒரு சில இந்திய மாநிலங்கள் பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட இதர நாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்கின்றன. இத்தகைய தீர்வு “முற்றிலும் தவறானது” என சுற்றுச்சூழல் குறித்த பிரச்சாரங்களை மேற்கொள்ளும் குழுவான அவாஸ் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த சுமைரா அப்துல்அலி கூறினார்.

“வேறெங்கிலுமிருந்து மணலை இறக்குமதி செய்வது என்பது இந்தப் பிரச்சனையை வேறு ஓர் இடத்திற்கு மாற்றுவதே ஆகும்” என சுமைரா கூறினார்.

மணலுக்கு மாற்றாக நொறுக்கப்பட்ட கற்கள் பயன்படுத்தப்படுகின்றன என கான்ஃபெடரேஷன் ஆஃப் ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோசியேஷன்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிடுகிறது.

 “எங்களது தொழில் பெரிதும் நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நலனில் நாங்கள் அனைவருமே மிகுந்த விருப்பத்துடன் இருக்கிறோம்” என இந்த கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சதீஷ் மகார் கூறினார்.

எனினும் மணலுக்கான தேவை அதிகமாக இருக்கும் வரையிலும் உத்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து வந்து குடியேறியுள்ள ராஜ்-ஐப் போன்ற தொழிலாளிகள் அந்தத் தேவையை நிறைவேற்ற தங்கள் உயிரையும் பணயம் வைக்கத் தயாராகவே உள்ளனர்.

 “இந்த வேலை வாழ்விற்கும் சாவிற்குமான போராட்டம்தான். என்றாலும் இங்கு படகுகள் இருக்கும் வரையில் நான் தொடர்ந்து வேலை செய்து கொண்டுதான் இருப்பேன்” என அவர் குறிப்பிட்டார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->