பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டு மீட்கப்பட்டவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை மறு உருவாக்கம் செய்ய உதவுகின்றனர்

by Roli Srivastava | @Rolionaroll | Thomson Reuters Foundation
Tuesday, 4 September 2018 08:10 GMT

Volunteers collect household items in the lawns of a residential house before cleaning the house following floods in Kuttanad in Alappuzha district in the southern state of Kerala, India, August 28, 2018. REUTERS/Sivaram V

Image Caption and Rights Information

- ரோலி ஸ்ரீவஸ்தவா

மும்பை, செப். 4 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) – பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டு பின் பற்றவைப்பு, தச்சுவேலை ஆகிய தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்ட பெண்கள் பல வார கால வெள்ளத்தால் கடுமையான சீரழிவிற்கு ஆளான இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள வீடுகள், பள்ளிகள் ஆகியவற்றை சீரமைப்பதில் உதவி செய்கின்றனர்.

ஒரு நூற்றாண்டு காலத்தில் உருவான மிக மோசமான வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்த கடற்கரையோர மாநிலத்தில் கடந்த மாதம் நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். கேரளாவின் மூன்றரை கோடி மக்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புக வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு இப்போது வடிந்து போன போதிலும், அவர்களின் வீடுகள் பலவும் சீரழிந்த நிலையில் உள்ளன.

“இவர்களில் பலருக்கும் உறவினர்கள் யாரும் இல்லை; அல்லது தங்கள் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை” என ஹைதராபாத் நகரிலிருந்து செயல்பட்டு ஆட்கடத்தலுக்கு  எதிரான அறக்கட்டளையான பிரஜ்வாலாவினால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட 21வயது எலிடி மிர்ஸா கூறினார்.

“அவர்களது வீடுகளை நாங்கள் இப்போது சுத்தம் செய்து வருவதோடு, கதவுகளையும் ஜன்னல்களையும் சீரமைத்து வருகிறோம். இதன் மூலம் அவர்கள் இந்த வீடுகளில் தொடர்ந்து வசிக்க முடியும்” என இந்த வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பம்பா நதிக் கரையில் அமைந்துள்ள செங்கணூர் நகரிலிருந்து தொலைபேசி மூலம் அவர் தெரிவித்தார்.

இந்த வெள்ள நிலையானது உதவி செய்ய முன்வரும் ஏராளமான தன்னார்வத் தொண்டர்களின் படையை இதுவரை காணாத வகையில் செயலில் இறக்கியுள்ளது. இந்த நிவாரணப் பணிகளில் பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டு பின்பு மீட்கப்பட்ட 20 பெண்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதியன்று ஈடுபடத் தொடங்கினர்.

“அவர்களது திறமைகள் வரவேற்கப்படுகின்றன” என குறைந்த செலவில் வீட்டுவசதி மற்றும் மகளிர் சுயாதிகாரம் ஆகியவற்றுக்காக கேரளாவை மையமாகக் கொண்டு செயல்படும் அறக்கட்டளையான சென்டர் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியை சேர்ந்த பள்ளிதழத் பகுலேயன் சாஜன் கூறினார்.

“வேலைக்கான ஆட்கள், குறிப்பாக தச்சுவேலை செய்வோருக்கான, பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. ஏராளமான சேதமும் ஏற்பட்டுள்ளது” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் தெரிவித்தார்.

பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டு பின்பு மீட்கப்பட்டவர்களுக்கு கட்டுமானத் தொழிலுக்கான திறன்களில் பயிற்சி அளித்து வரும் பிரஜ்வாலா அமைப்பு தங்கள் அமைப்பைத் தொடர்பு கொண்டதாகவும்   அவர் கூறினார்.

“அவர்களிடம் நிறையவே கருணை உணர்வு உள்ளது. கேரளாவிற்கு செல்லவும் அவர்கள் முன்வந்தார்கள். அனைத்தையும் இழந்து நிற்பது எத்தகைய உணர்வை ஏற்படுத்தும் என்று தங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர்கள் கூறினார்கள்” என பிரஜ்வாலா அமைப்பின் நிறுவனரான சுனிதா கிருஷ்ணன் கூறினார்.

சுனிதா கிருஷ்ணனின் கூற்றுப்படி கடந்த 14 வருடங்களில் இவ்வாறு பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரஜ்வாலா பயிற்சி அளித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தொழிற்கூடங்களில் அவர்கள் பலரும் வேலை செய்து வாழ்க்கைக்கான ஊதியத்தை ஈட்டி வருகின்றனர். கேரளாவில் உதவி செய்து வரும் மிர்ஸாவும் மற்றும் பலரும் பிரஜ்வாலாவின் அறைகலன்களுக்கான தொழிற்கூடத்தில்  வேலை செய்து வருகின்றனர். அங்கே அவர்கள் மாதத்திற்கு சுமார் ரூ. 15,000 வரை வருவாய் ஈட்டி வருகின்றனர்.

பெரும்பாலும் தினசரி 12 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் தானும் தன் சகதோழிகளும் ஒவ்வொரு நாளும் சுமார் 10 வீடுகளையாவது சீர்படுத்த முடிந்துள்ளது என்றும் எலிடி மிர்ஸா கூறினார்.

 “ஒரு பெண் என்ற வகையில் தச்சுத் தொழில் எந்தவகையிலும் எனக்கு உதவியாக இருக்குமா என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் அதுதான் இப்போது உதவி செய்கிறது” என வணிக வளாகம் ஒன்றில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டப்பட்டு பின்னர் ஹைதராபாத் நகரில் உள்ள பாலியல் தொழில் மையம் ஒன்றுக்கு விற்கப்பட்ட மும்பை நகரைச் சேர்ந்த மிர்ஸா கூறினார்.

“என்னாலும் உதவி செய்ய முடிகிறது என்பதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான்  இங்கே மேற்கொள்ளும் கடினமான வேலையை மக்கள் பாராட்டுகிறார்கள்” என்றும் அவர் கூறினார்.

(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: ஜாரெட் பெஃரி. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.