×

Our award-winning reporting has moved

Context provides news and analysis on three of the world’s most critical issues:

climate change, the impact of technology on society, and inclusive economies.

அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தின் இடைக்கால தீர்வு காண இந்தியாவில் தானிய வங்கிகள் முன்வருகின்றன

by Anuradha Nagaraj | @anuranagaraj | Thomson Reuters Foundation
Thursday, 20 September 2018 11:41 GMT

ARCHIVE PHOTO: A watchman stands next to heaps of sacks filled with paddy at a wholesale grain market in the northern Indian city of Chandigarh November 15, 2014. REUTERS/Ajay Verma

Image Caption and Rights Information

- அனுராதா நாகராஜ்

 

சென்னை, செப். 20 ( தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்)  – தற்காலிக வேலையும் கூட கிடைப்பது மிக அரிதாக உள்ள மழைக்காலத்தின்போது உணவுப் பொருட்களை வாங்குவதற்காக கடன் வாங்கியதன் விளைவாக அடிமைத்தனத்திற்கு ஆட்படவேண்டிய அபாயத்திற்கு ஆளாகக் கூடிய நிலையில் உள்ள வட இந்தியாவின் 100 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மாதத்திலிருந்து தானியங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

 

1976ஆம் ஆண்டிலேயே கொத்தடிமை முறையானது தடை செய்யப்பட்டுவிட்ட போதிலும் கொண்டாட்டங்களின்போதோ அல்லது உடல்நலமில்லாத நேரத்திலோ பெரும்பாலும் உணவு வாங்குவதற்காகவே பெறுகின்ற கடன்களை அடைப்பதற்காக உரிய ஊதியம் பெறாமலேயே உழைக்கவேண்டிய நிலைக்கு இந்தியா முழுவதிலும் பல்லாயிரக் கணக்கானோர் தள்ளப்படுகின்றனர் என இது குறித்த இயக்கங்களை நடத்துவோர் தெரிவிக்கின்றனர்.

 

விவசாயம் தொடர்பான வேலைகள் அல்லது கட்டுமான வேலைகள் கிடைப்பது அரிதாக உள்ள மழைக்காலத்தின்போது இந்த அபாயம் அதிகமாகிறது.

 

“பட்டினி என்ற அபாயம்தான் மக்கள் கொத்தடிமைத் தனத்திற்குள் சிக்கிக் கொள்வதற்கான மிகப்பெரும் காரணமாக விளங்குகிறது” என கொத்தடிமைத் தொழிலாளர் பிரச்சனைகளில் செயல்பட்டு வருகின்ற, இந்த முன்முயற்சியில் உதவி செய்கின்ற ப்ரகதி கிராமோத்யோக் ஏவம் சமாஜ் கல்யாண் சன்ஸ்தான் என்ற அறக்கட்டளையின் நிறுவனரான சுனித் சிங் தெரிவித்தார்.

 

“முறையான உணவு இல்லாத நிலையானது இந்த நலிந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் உடல்நலம் குன்றுவதற்கு வழிவகுக்கிறது. மருத்துவ சிகிச்சைக்கென அவர்கள் மீண்டும் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.”

 

2018ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அடிமைத்தனத்திற்கான அட்டவணையின்படி உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட அதிகமான வகையில் 130 கோடி பேர் உள்ள அதன் மக்கள் தொகையில் சுமார் 80 லட்சம் பேர் அடிமைத்தனத்திற்கு ஆட்பட்டவர்களாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது.

 

கருங்கல் வெட்டியெடுக்கும் குவாரிகளிலும் செங்கற் சூளைகளிலும் பெரும்பாலான நேரங்களில் அடிமைத்தனத்தில் சிக்க வைக்கப்படும் பழங்குடி மக்களிடையே பட்டினியை கட்டுப்படுத்தும் முயற்சியாக வட இந்திய நகரமான அலகாபாத் நகரைச் சுற்றிலும் 400க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களின் ஒரு கூட்டமைப்பு தானிய வங்கிகளை நிறுவ உள்ளன.

 

தேவைப்படும் நேரத்தில் அவர்கள் உணவைப் பெறும் வகையிலும், அதே அளவு தானியத்தை பின்னாட்களில் அவர்கள் செலுத்தும் வகையிலும் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த தானிய மூட்டைகள் திறந்துவிடப்படும்.

 

“ஒவ்வொருவருமே வேலை கிடைக்குமா என்றுதான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என கொத்தடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டவர்களையே பெரும்பாலும் உறுப்பினர்களாகக் கொண்ட ப்ரகதி வாஹினி என்ற கூட்டமைப்பின் அமைப்பாளரான ரோஷன் லால் கூறினார்.

 

“இந்த ஒரு சில மாதங்கள் இந்தக் குடும்பங்களுக்கு மிகவும் கடினமானவையாகவே இருக்கின்றனர். ஏனெனில் மழையின் காரணமாக மிகக் குறைவான அளவிலேயே அவர்களுக்கு வேலை இருக்கும்.”

 

இந்த நேரத்தில்தான் நோய்வாய்ப்படுதலும் பட்டினியும் குடும்பங்களைப் பிடித்தாட்டும் என தன் தந்தையைப் போலவே ஒரு காலத்தில் கொத்தடிமையாக இருந்த லால் குறிப்பிட்டார்.

 

“அவர்களுக்கு எப்போது அதிகமான அளவில் தேவைப்படுகிறதோ அந்த நேரத்தில் தற்போதுள்ள அரசின் பொது(உணவுப் பொருட்கள்) விநியோக முறைகள் அவர்களை சென்றடைவதில்லை” என தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் அவர் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

 

“இந்த தானிய வங்கிகள் அதை சரிசெய்வதாக அமையும்”

 

வறுமைக்கு எதிரானதொரு நலத்திட்டமாக இந்திய அரசால் நடத்தப்படும் பொது விநியோக முறையின் கீழ் உணவு தானியங்கள் கிடைப்பதென்பது பெரும்பாலும் ஒழுங்கற்றதாகவே உள்ளது.  அதிலுள்ள உணவு தானிய கையிருப்பானது இடைத்தரகர்களால் களவாடப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன என இது குறித்த இயக்கத்தை நடத்துவோர்  குறிப்பிடுகின்றனர்.

 

இந்தக் கிடங்குகளில் போதிய கையிருப்பு இல்லாததால் பழங்குடிக் குடும்பங்கள் பெரும்பாலான நேரங்களில் வெறுங்கையோடுதான் திரும்ப நேரிடுகிறது.

 

2015ஆம் ஆண்டில் மூன்று தானிய வங்கிகளுடன் துவங்கிய ஒரு சோதனை முயற்சியில் லால் அவர்களும் பங்கேற்றிருந்தார்.  குடும்பங்கள் சட்டவிரோதமாக பெறும் கடன்களின் அளவைக் குறைப்பதில் வெற்றி பெற்ற இந்த முயற்சியினால் உற்சாகம் பெற்ற நிலையில் நன்கொடையாளர்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றின் உதவியோடு இத்திட்டம் இப்போது விரிவுபடுத்தப்படுகிறது.

 

“அவர்களுக்கு வேலை இல்லாத போது அல்லது ஊதியத்தைப் பெறுவதற்காக அவர்கள் காத்திருக்கும்போது, ஓர் இடைக்கால ஏற்பாட்டைத்தான் நாங்கள் இப்போது வழங்குகிறோம். அவர்களுக்குத் தரப்பட வேண்டிய பணம் கொடுக்கப்பட்ட பிறகு, அவர்கள் வாங்கியிருந்த உணவு தானியத்தை அவர்கள் மீண்டும் வழங்கிவிடுவார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

(செய்தியாளர்: அனுராதா நாகராஜ்; எடிட்டிங்: கேட்டி மிகிரோ மற்றும் கிளாரி கோஜென்ஸ். செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, ஆட்கடத்தல், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)

Our Standards: The Thomson Reuters Trust Principles.

-->